ராஜீவ் கொலை வழக்கு: தீர்ப்பும் தெளிவும்

603
rajiv_killers7_002
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்ற உத்தரவைச் சீராய்வு செய்யுமாறு மத்திய அரசு அளித்த மனுவை உச்சநீதிமன்ற நீதி இருக்கை தள்ளுபடி செய்துவிட்டது.

சில நாள்களுக்கு முன்பு, வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும்கூட தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லி குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தேவேந்தர் சிங் புல்லரின் வழக்கிலும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் இருநாள்களுக்கு முன்பு குறைத்தது.

ஆகவே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வழக்கிலும் நீதிமன்றம் அதே கருணையைக் காட்டும் என்பதை முன்னதாகவே உணர முடிந்தது.

ஆனால், அனைவரும் உச்சநீதிமன்றம் சென்றுதான் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமா? சட்டத்தில் தூக்கு தண்டனை இடம் பெற்றிருந்தாலும்கூட, உச்சநீதிமன்றம் காட்டும் கருணையை ஏன் கீழமை நீதிமன்றங்கள் காட்டக் கூடாது?

அண்மையில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த வழக்குகள் அனைத்திலும், குடியரசுத் தலைவரால் கருணை மனு அபரிமிதமான காலதாமதத்துக்கு உட்படுத்தப்பட்டது என்பதுதான் காரணமாக சொல்லப்பட்டது. இருப்பினும்கூட, குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவே தராமல், தங்கள் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்யும் மனுக்களுக்கும்கூட உச்சநீதிமன்றம் இதே கருணையைக் காட்டும் என்பதற்கான முன்னோட்டமாக இதனைக் கருதலாம்.

இந்தியாவில் மரண தண்டனையைச் சட்டத்திலிருந்து நீக்கிவிட வேண்டும் என்ற கருத்து பரவலாகி வரும் சூழலில், நீதிமன்றமும் இதற்கு ஆதரவான நிலையில் இருக்கிறது என்பதற்கான சமிக்ஞை இது.

நீதித்துறை இதைவிட புரியும்படியாகப் பேசுவதற்கு வேறு மொழிகள் இல்லை. இந்த சமிக்ஞையைப் புரிந்துகொள்ளும் கீழமை நீதிமன்றங்கள் இனி தூக்கு தண்டனை வழங்குவதைத் தவிர்க்கும் என்பது உறுதி.

பல நேரங்களில் தூக்கு தண்டனை என்பது, சமூக கொந்தளிப்பின் விளைவாகவும், சமூகம் ஒரு குற்றத்துக்கு அளித்த எதிர்வினையின் அழுத்தமாகவும் அமைக்கின்றன. தூக்கு தண்டனை வழங்காவிட்டால், நீதிபதி இந்த வழக்கின் தன்மையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைப்பார்கள் என்கிற எண்ணத்தால்தான் கீழமை நீதிமன்றங்களில் பேனா முள் முனை முறிக்கப்படுகின்றன.

மேல் முறையீட்டின்போது, இவர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டால் பிழைத்துப் போகட்டும் என்பதாகவும், அத்தகைய தீர்ப்பு வரும்போது இந்த வழக்கில் ஏற்பட்ட சமூக கொந்தளிப்பு அடங்கிப்போயிருக்கும் என்பதாலும், கீழமை நீதிமன்றங்கள் தூக்கு தண்டனை விதிக்கின்றன.

இத்தகைய சமூக கொந்தளிப்புகளைத் தாண்டி, தூக்கு தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருந்தாலும்கூட அதைத் தவிர்த்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை, நிர்பயா பாலியல் கொடுமை மற்றும் கொலை வழக்கிலும், மும்பையில் சக்தி மில் வளாகத்தில் நடந்த பாலியல் கொடுமை வழக்கிலும் பார்க்க முடிந்தது.

இந்தியாவில் மரண தண்டனை கூடாது என்று சொல்பவர்கள் தற்போது செய்ய வேண்டிய பணி, மரண தண்டனை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோருவது மட்டுமே அல்ல. தற்போது தூக்கு தண்டனை பெற்றுள்ள கைதிகள் அனைவருக்கும், தண்டனைக் குறைப்புக்கான மேல்முறையீட்டை தனித்தனி மனுக்களாக உச்சநீதிமன்றத்தில் அளிப்பதுதான்.

உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனை பெற்றவர்களின் பெருவாரியான மேல்முறையீடுகள் ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும் செய்தி பரவலாகும்போது, கீழமை நீதிமன்றங்கள் தூக்கு தண்டனை வழங்குவதைக் குறைக்கக் கூடும். சமூகமும் தூக்கு தண்டனையை வலியுறுத்தும் மனநிலையிலிருந்து மாறும். அப்படி ஒரு நிலைமை ஏற்படும்போது மரண தண்டனைச் சட்டத்தை ரத்து செய்வதைப் பற்றி சிந்திப்போம்.

ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளின் தூக்கு தண்டனை பற்றி ஏற்கெனவே நமது கருத்தைப் பதிவு செய்திருந்தோம். எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளை தண்டிக்கும் பிறழ்வுதான் முந்தைய தூக்கு தண்டனைத் தீர்ப்பு.

தேர்தல் நேரத்தில் ராஜீவ் கொலையாளிகள் தூக்கு தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனைக் கைதிகளாக மாற்றப்படுவதும், அவர்களை மாநில அரசு விடுவிப்பதும் ஏதோ தங்கள் கட்சிக்கே ஏற்பட்ட அவமானமாகவும், ஒரு முன்னாள் பிரதமரின் கொலையில் தொடர்புடையவர்களை விடுவிக்கும் மாபெரும் தவறாகவும் காங்கிரஸ் கட்சி கருத வேண்டியதில்லை.

இத்தனை ஆண்டுகள் அவர்களை “நித்ய கண்டம் பூரண ஆயுசாக’ தனிமைச் சிறையில் அடைத்து வைத்ததைவிடக் கொடிய தண்டனையாக தூக்கு அமைந்துவிடாது.

நன்றி- தினமணி

 

SHARE