வடமாகாண சபையின் முன்னாள் மூன்று அமைச்சர்களும் ஊழல் குற்றவாளிகளே

635

முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் பாராட்டப்பட வேண்டியவர். அரசியலில் கோமாளியாக இருக்கலாம் ஆனால் ஏமாளியாக இருந்துவிடக் கூடாது. வடமாகாண சபையின் நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவர்களினது அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படும் போது முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கள் அல்லது ஏனையோரின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை என சுட்டிக்காட்டியிருக்கவேண்டும்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வடமாகாணசபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகின்றது. இதற்கிடையில் தன்னையொரு நிருபராதியென சட்டத்திற்கு முன் உறுதிப்படுத்தி தனக்கான ஒரு அரசியல் நகர்வினைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார் முன்னாள் வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து, விவசாய, வர்த்தக வாணிப அமைச்சர் டெனீஸ்வரன் அவர்கள்.

ஏனைய மூன்று அமைச்சர்களும் தமது குற்றங்களை நிரூபித்துக் காட்டாத பட்சத்தில் குற்றவாளிகளாகவே கருதப்படுவார்கள். இப்படிப் பட்டவர்கள் மக்கள் முன்னிலையில் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கையில் குறித்த கட்சிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதில் தங்களை நிரபராதிகள் என்று இவர்களால் ஏன் மக்கள் முன்னிலையில் நிரூபிக்க முடியாது போனது? வெறுமனே மக்கள் மத்தியில் தாம் நிரபராதி என்று கூறிக் கொண்டிருக்கும் இவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிற்கு எதிராக வழக்குத் தொடராமல் போனது ஏன்? எனும் கேள்வி மக்கள் மத்தியில் எழுப்பப்படுகின்றது. இதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்?

முன்னாள் வடக்கு அமைச்சர் டெனீஸ்வரனைப் பொறுத்தவரையில் அவரது அமைச்சு பறிக்கப்பட்டதென்பது முறைகேடான ஒன்று என்பதே ஆகும். முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது ஊழல் விடயங்கள் பிடிபட்டுவிடும் என்பதற்காகவே நான்கு அமைச்சர்களையும் விலக்கியிருந்தார்.
ஏனைய மூன்று அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் உத்தியோக பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நிலையில்; அல்லது அவர்களை மீள் விசாரணை செய்ய வேண்டுமென்று குறிப்பிடப்பட்ட போதிலும் குறித்த அமைச்சர்களைத் தன்னால் வைத்து செயற்படுத்த முடியாது என்பதனைக் கருத்தில் கொண்டு புதிய அமைச்சர்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமித்தார்.

வடமாகாண சபையின் காலம் முடிவடைவதற்குள் முன்னாள் அமைச்சர்களாகிய ஐங்கரநேசன், குருகுலராசா, சத்தியலிங்கம் ஆகியோர் தாம் நிரபராதி என்பதை நிரூபித்துக் காட்டுவார்களா? அல்லாது போனால் இவர்களுடைய வாழ் நாள் அரசியல் ஊழல் மிக்க அரசியல்வாதிகள் என வரலாற்றில் எழுதப்படும் அல்லது முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
வடமாகாண சபையின் ஊழல் விவகாரம் என்பது முதலமைச்சருக்கும் அதில் கூட்டுப் பொறுப்பு இருக்கின்றது. அந்த கூட்டுப் பொறுப்பினின்று அவரும் தப்பிவிட முடியாது. பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய பிரேமானந்தாவின் அதி தீவிர பக்தனாகவிருந்தாலும் அரசியலில் அவருடைய காய் நகர்த்தல்கள் என்பது மகிந்த ராஜபக்சவினை மீண்டும் கொண்டுவருவதற்குரிய அடித்தளமாகவே உள்ளது.

டெனீஸ்வரன் அவர்கள் தான் ஓர் சட்டத்தரணி என்பதை முன்னாள் நீதியரசரும் தற்போதைய வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரனிற்கு தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார். இது குறிப்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முகத்தில்; அறைந்ததற்கு ஒப்பானதாகும்.

காலத்தின் தேவை கருதி தமிழ் மக்களினுடைய அரசியல் முன்னேற்றம் கருதி சில செயற்பாடுகளை முன்நகர்த்திச் செல்கின்ற பொழுது அரசியல் பலிவாங்கல்கள் போன்றவை நடைபெறுவது வழமை.
ஏனைய மாகாணங்களிலும் ஊழல் நடைபெறவில்லை என்று கூறவில்லை. அவர்களும் ஊழல் செய்கின்றனர். ஆனால் வெளிச்சம் போட்டுக்காட்டும் அளவிற்கு அவர்களுடைய செயற்பாடுகள் அல்ல.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அரசியல் செயற்பாடுகள் என்பது வடமாகாண சபைக்கு ஓர் இழுக்கானதாகவே உள்ளது. வடமாகாண சபையினை சீராகக் கொண்டு நடத்த வக்கில்லாதவர்கள் எவ்வாறு வடகிழக்கைக் கொண்டு நடத்துவார்கள் என்ற கேள்வியும் அரசாங்கத்தினால் எழுப்பப்படுகின்றது.

வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் அவர்கள் நிரூபித்துக் காட்டியது போன்று மேற்குறிப்பிட்ட மூன்று அமைச்சர்களும் நிரூபித்துக் காட்டுகின்ற பொழுது ஆரோக்கியமான அரசியலைக் கொண்டு நடத்த முடியும். அல்லாது போனால் சிங்கள தேசத்தினது நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்படும் ஓர் சூழ்நிலை உருவாகும்.

தமிழ் மக்கள் மத்தியில் குறித்த அரசியல்வாதிகள் மாகாண சபையின் முன்னாள் மோசடிக் கும்பல் என்று கூறப்படும் சூழ்நிலை உண்டாகும். அச் சூழ்நிலையை ஏனைய அரசியல்வாதிகளும் உண்டாக்குவார்கள். இவ் வரலாற்றுத் தவறு நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்தியை நாம் பிரசுரித்துள்ளோம்.

‘காதுள்ளவன் கேட்கக் கடவன்’

SHARE