வடமாகாண போக்குவரத்து அமைச்சரின் மாற்றத்தை தாமதப்படுத்த கோரிக்கை

160

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் மாற்றத்தை தாமதப்படுத்துமாறு வடக்கு மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தமிழீழ விடுதலை இயக்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் மீது தமிழீழ விடுதலை இயக்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை போக்குவரத்து துறையின் நலன் கருதி நிறுத்தியோ அல்லது தாமதப்படுத்தியோ ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வட மாகாணத்தில் அண்மைக்காலமாக அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதனை அவதானித்தவர்கள் என்ற வகையில் எமது சங்கமானது தங்களிடம் எமது கோரிக்கைகள் அடங்கிய நியாயபூர்வமான சில விடயங்களை முன்வைக்க விளைகின்றது.

வட மாகாண போக்குவரத்து அமைச்சின் ஊடாக வட மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்துதுடன் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தினை திறப்பது தொடர்பான செயற்பாடு முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ஏனைய மாவட்டங்களில் போக்குவரத்து விதிமுறைகளில்

சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஏதுவான காலச் சூழலும் ஏற்பட்டு வருகின்றது.

இந் நிலையில் நாம் வட மாகாண போக்குவரத்து துறையை சார்ந்தவர்கள் என்ற வகையில் போக்குவரத்து துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சியான தருணங்களை எதிர்பார்த்து இருப்பதுடன் எமது தொழிலாளர்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும் என்ற அவாவில் உள்ளோம்.

இந் நிலையில் வடக்கில் ஏற்பட்டு வரும் அரசியல் சூழ்நிலைகள் எமது எதிர்பார்ப்புகளில் ஏமாற்றத்தினை கொண்டு வந்துவிடுமோ என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் புதிய பேரூந்து நிலையத்தினை 195 மில்லியன் ரூபா பண செலவில் அமைத்து பல மாதங்களாக செயற்படாது உள்ள நிலையில் தற்போது வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் அவர்கள் அதனை திறப்பதற்கான ஆக்கபூர்வமான திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

இவ்வாறான திட்டங்கள் கைகூடி வரும் நிலையில் தங்களது கட்சி அமைச்சர் பா. டெனீஸ்வரனை நீக்குமாறு கோரி வட மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அறிகின்றோம்.

எமது போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று இலங்கையில் எந்த மாகாணத்திலும் இல்லாதவகையில் போக்குவரத்து துறைக்கு நியதிச் சட்டத்தினை உருவாக்கி 60 இற்கு 40 என்ற நேரசூசி அட்டவணையை அறிமுகம் செய்து அதனை வர்த்தமானியில் பிரசுரித்து சட்டமாக்கிய பெருமை அமைச்சரையே சார்ந்துள்ளது.

இவை மாத்திரமின்றி வட மாகாணத்தில் புதிய செயற்றிட்டங்களை அமைச்சர் தனது அமைச்சினூடாக முன்வைத்துள்ள நிலையில் தாங்கள் மேற்கொண்டுள்ள இச் செயற்பாடு ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

தங்களது கட்சியினால் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள் அமைச்சர் பா. டெனீஸ்வரன் அவர்கள் மேற்கொண்டுள்ள அமைச்சினூடான திட்டங்களை இடை நடுவில் நிறுத்துவதற்கோ அல்லது தாமதமாவதற்கோ தங்களது கட்சியின் செயற்பாடு அமைந்துவிடுமோ என்ற சந்தேகம் வலுவாக எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில் தங்களது கட்சி போக்குவரத்து துறையை சார்ந்தவர்களதும் வட மாகாண போக்குவரத்து துறையினதும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அமைச்சர் பா. டெனிஸ்வரன் மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கையை நிறுத்தியோ அல்லது தாமதப்படுத்தியோ மேற்கொள்ளுமாறு எமது சங்கத்தின் சார்பில் தங்கள் கட்சியின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.

அத்துடன் எமது இக்கோரிக்கையை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் எனவும் நம்பிக்கை கொண்டுள்ளோம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE