வாழைச்சேனையில் விளை நிலங்கள் பாதிப்பு

240
மடக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் வாழைச்சேனை விவசாய திணைக்களத்திற்கு உட்பட்ட விவசாய பிரதேசத்தில் பல வாய்க்கால்கள் உடைப்பெடுத்தமையால் பெருமளவிலான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் வாகனேரி பிரதேசத்தில் பெரும் போக நெற் செய்கைக்கென விதைக்கப்பட்ட பெருமளவு வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதுடன், விதைப்பிற்கென தயார் நிலையிலிருந்த நிலங்களும் நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

வாய்க்கால்கள் திடீரென உடைப்பெடுத்தமையால் பாரியளவிலான வெள்ள நீர் வயல் நிலங்களுக்குள் பாய்ந்து வயல் வேலைக்காக ஆயத்தப்படுத்தி வைத்த வரம்பு கட்டுகள் உடைக்கப்பட்டு வயலுக்குள் மணல் குவிந்த படி காணப்படுகின்றது.

அத்தோடு வயலுக்கு செல்லும் வழியில் சில இடங்களில் நீர் பெருகி வீதி உடைந்தமையினால்; போக்குவரத்து பிரச்சனை பெரும் சிரமமாக காணப்படுகின்றது.

குறித்த வடிகால்கள் மற்றும் வீதிகளை நீர்ப்பாசன திணைக்களம் சீரமைத்து தராவிட்டால் பருவ மழை ஆரம்பிக்கும் போது அனைத்து வயல் நிலங்களும் அழிவடைவதுடன், தாங்கள் தற்போது பெரும்போக செய்கையை இரண்டு தடவை விதைத்துள்ளோம் மீண்டும் எங்களால் விதைப்பதற்கு பெரும் சிரமமாகவே காணப்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

வாகனேரி குளத்தினூடாக நீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் வீதிகளை மிகவும் இலகுவாக சீர் செய்து விவசாயிகளின் கஷ்ரங்களை போக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்றுமாறு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE