விடைபெறுகிறார் ஒபாமா! – சாதித்தது என்ன?

407

barack-obama-for-president

நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலைத் தீர்மானிக்கப் போகிறவர், ஹிலாரி கிளின்டனோ, டொனால்ட் டிரம்போ அல்ல; பராக் ஒபாமாதான்.

முதல் கறுப்பின அதிபர்!

`எந்த ஓர் அதிபரும் இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் நிற்கக் கூடாது’ என்னும் விதியைத் தாண்டி, இந்த முறையும் ஒபாமாவே அமெரிக்க வாக்காளர்களின் சிந்தனையில் நிறைந்திருக்கப் போகிறார். ஹிலாரியை அவர்கள் தேர்ந்தெடுத் தால், ஒபாமாவை அவர்கள் மூன்றாவது முறையாக ஏற்றுக்கொண்டுவிட்டனர் எனப் பொருள். ஒருவேளை டிரம்பைத் தேர்ந்தெடுத்தால், ஒபாமாவின் ஆட்சி மீது அவர்களுக்கு திருப்தி இல்லை என புரிந்துகொள்ளலாம். அந்த வகையில், எதிர்வரும் தேர்தல் ஒருவிதத்தில் ஒபாமா ஆட்சி மீதான வாக்கெடுப்பாகவே இருக்கும்!

எனவே அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான ஒபாமாவின் வெற்றி-தோல்விகளைக் கணக்கிடும் பணி, மும்முரமாகிவிட்டது. ஒபாமாவின் ஆட்சியை எப்படி மதிப்பிடுவது? வரலாற்றில் அவர் பெயர் நிலைத்திருக்குமா, உதிர்ந்துவிடுமா? எதிர்காலத் தலைமுறை, ஒபாமாவின் ஆட்சியை எப்படி நினைவில் வைத்திருக்கும்? இன்னும் 20 ஆண்டுகள் கழித்து ஒபாமாவின் பிம்பம் எப்படி உருப்பெற்றிருக்கும்? இந்தக் கேள்விகளுக்கு விடை காண, ஒபாமா செய்தவை… செய்யத் தவறியவை இரண்டையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

குவந்தனாமோ சிறைச்சாலை!

அமெரிக்காவுக்கு வெளியில் இருந்தே தொடங்குவோம். 2009-ம் ஆண்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலம் தொடங்கி, கியூபாவில் உள்ள குவந்தனாமோ சிறைச்சாலையை மூடுவது குறித்து அடிக்கடி பேசியிருக்கிறார் ஒபாமா. `போர்க் குற்றவாளிகள்’ என அமெரிக்காவால் குற்றம்சாட்டப்பட்டு, புஷ் காலம் தொடங்கி நூற்றுக்கணக்கானவர்கள் இங்கே விசாரணையின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ‘இப்படி ஒரு சிறைச்சாலை இயங்குவது பயங்கரவாத இயக்கங்களுக்குத் தீனிபோடும் விஷயம்.அமெரிக்கா இதை நடத்துவது அறம் அல்ல’ என வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதிகூட 15 பேர் குவந்தனாமோவில் இருந்து மாற்றப்பட்டார்கள். இருந்தும் ஒபாமாவால் சிறைச்சாலையை மூட முடியவில்லை.

அல் கொய்தா டு ஐ.எஸ்.ஐ.எஸ்!

2011, மே 1-ம் தேதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது, அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இருந்து ஒபாமாவுக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. ஜார்ஜ் புஷ் தொடங்கிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரை ஒபாமா முடித்துவிட்டதாகவும் சிலர் குறிப்பிட்டு மகிழ்ந்தார்கள். ஒசாமாவின் மரணத்துக்குப் பிறகு உலகின் நம்பர் 1 பயங்கரவாத இயக்கமாகக் கருதப்பட்ட அல் கொய்தா வீழ்ச்சியடைந்ததையும், இன்றைய தேதி வரை முடங்கியே கிடப்பதையும் ஒபாமாவின் தனிப்பட்ட சாதனையாக அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால், அல் கொய்தாவின் வீழ்ச்சி பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்த வீழ்ச்சியாக இல்லாமல், ஓர் அத்தியாயத்தின் முடிவாக மட்டுமே மாறிப்போனது. ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் இயக்கம் அல்கொய்தாவைக் காட்டிலும் பல மடங்கு அதிக ஆபத்தை, அதிக சேதத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஈராக் டு லிபியா டு சிரியா

`ஜார்ஜ் புஷ்ஷின் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவேன்’ என அறிவித்த ஒபாமாவுக்கு, அவர் ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. `ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும். ஈராக்கில் ஜனநாயகம் தழைப்பது உறுதிசெய்யப்படும்’ என ஒபாமா அறிவித்தபோது, அவர் அடிக்கடி சொன்ன ‘மாற்றம்’ நிகழ்ந்துவிட்டதாகவே பலரும் நம்பினர். `அமெரிக்க வீரர் ஒருவர்கூட ஈராக்கின் மண்ணில் தங்கியிருக்க மாட்டார்’ என ஆகஸ்ட் 2010-ம் ஆண்டில் ஒபாமா முழங்கினார். ஆனால் 3,000-க்கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் ‘ஈராக் படைகளுக்கு உதவி செய்வதற்காக’ இன்றும் அங்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். `ஐ.எஸ்.ஐ.எஸ் அபாயத்தைத் தடுக்கவே இந்த ஏற்பாடு’ என்கிறார் ஒபாமா.

புஷ்ஷால் சர்வநாசத்துக்கு உள்ளான ஆப்கானிஸ்தானில் இருந்தும் வாக்குறுதி அளித்தபடி அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்ள ஒபாமாவால் முடியவில்லை. மாறாக, துருப்புகளின் எண்ணிக்கையை அவர் அதிகப்படுத்தவே செய்தார். சரி, புஷ்ஷின் போர்களைத்தானே தொடர்கிறார். புதிதாக எந்த ஓர் அத்துமீறலையும் எந்த நாட்டிலும் நிகழ்த்திவிடவில்லையே என வாதிடவும் முடியாதபடி, 2011-ம் ஆண்டு லிபியாவுக்குள் அமெரிக்கப் படைகள் நுழைந்து, முகமது கடாஃபியிடம் இருந்து ‘லிபிய மக்களை மீட்பதற்காக’த் தாக்குதல்களை மேற்கொண்டது. கடாஃபி கொல்லப்பட்டார்.

அதேபோல், சிரியாவின் மக்களை பஷார் அல் ஆசாத்திடம் இருந்து ‘காப்பாற்றுவதற்காக’ அங்கும் அத்துமீறி நுழைந்தன ஒபாமாவின் படைகள். சிரியா, இன்று முற்றிலும் சீரழிந்த ஒரு தேசமாக நொறுங்கிக்கிடக்கிறது. சிரியாவில் இருந்து சிதறடிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு அலைக்கழிக்கப்பட்ட போதும், பல நாடுகளில் இருந்து விரட்டியடிக்கப் பட்டபோதும், கொல்லப்பட்டபோதும் தவிர்க்கவியலாதபடி ஒபாமா கண்டனத்துக்கு உள்ளானார்.

ஈரான் நட்பு!

எதிர்காலத்திலும் நினைவுகூர்ந்து பாராட்டும் வகையில் சில நடவடிக்கைகளை ஒபாமா அரசு மேற்கொண்டதை மறுக்க முடியாது. நவம்பர் 2013-ம் ஆண்டு தொடங்கி ஈரானோடு பேச்சுவார்த்தைகள் நடத்த ஆரம்பித்த ஒபாமா, கடந்த ஜூலை மாதம் அந்த நாட்டுடன் ஓர் உடன்படிக்கையும் செய்துகொண்டார். அதன்படி `அந்த நாட்டின் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்படும். அதற்குக் கைமாறாக ஈரான் அணுஆயுத சோதனைகளை மேற்கொள்ளக் கூடாது’ என்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான பனிப்போரை முடித்துவைத்த வரலாற்று ஒப்பந்தம் என்று இது அழைக்கப்படுகிறது. கியூபா மீதான இத்தகைய தடைகள் இன்னமும் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவுக்குப் பிறகு பொறுப்பு ஏற்றுக்கொண்டவரால், காஸ்ட்ரோவுடன் ஒபாமா கைகுலுக்கிக்கொண்டதை ஒரு முக்கியமான நகர்வாகவே பலரும் கருதுகிறார்கள்.

ஒபாமா கேர்!

`ஒபாமா கேர்’ என அழைக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, மார்ச் 2010-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார் ஒபாமா. இதுவரை காப்பீடு எடுக்காத 18 மில்லியன் அமெரிக்கர்கள், இந்தத் திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டனர். 2012-ம் ஆண்டு, ஃபுளோரிடாவில் டிரேவான் மார்ட்டின் என்கிற 17 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க இளைஞர், ஒரு கடைக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது ஜிம்மர்மேன் என்கிற வெள்ளையரால் திடீரென சுட்டுக் கொல்லப்பட்டார். தற்காப்புக்காக அவ்வாறு செய்ததாக அவர் பின்னர் நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்து, விடுதலையும் அடைந்தார். அமெரிக்காவில் பெருகிவரும் இனவெறியையும், பாரபட்சமான நீதிமுறையையும் வெளிப்படுத்திய இந்தச் சம்பவம் உலகையே உலுக்கியது. கறுப்பின மக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து குரல்கொடுத்த ஒபாமா, ‘கொல்லப்பட்ட மார்ட்டின், என் மகனாகவும் இருந்திருக்கக்கூடும்!’ என்று உருக்கமாக உரையாற்றினார். ஒபாமா அதிபரான பிறகும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மீதான பாகுபாடும் காழ்ப்புஉணர்ச்சியும் குறையவில்லை என்பதற்கு மார்ட்டின் கொலை ஓர் உதாரணம் மட்டுமே!

அடிப்படை ஊதியம்!

தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத் தொகை குறித்து ஒபாமா ஒருமுறை உரையாற்றியதைத் தொடர்ந்து, 21 மாநிலங்களும் ஊதியத்தை உயர்த்தி அளிக்கத் தொடங்கின. `லைட் சிகரெட்’ என்னும் பெயரில் குறைந்த அபாயத்தை விளைவிக்கும் சிகரெட்டுகள் அமெரிக்காவில் பரவலானதைத் தொடர்ந்து, ஒரு பெருங்கூட்டம் அதை வாங்கி உபயோகிக்கத் தொடங்கியது. ஆனால், இதுவும் அபாயகரமானதே என்பதை உணர்ந்த ஒபாமா அரசு, அதை விரைந்து தடைசெய்தது. அதேபோல், துரித உணவகங்கள் இனி தாங்கள் தயாரிக்கும் உணவில் என்னென்ன பொருட்கள், எவ்வளவு கலந்திருக் கின்றன என்பதை விளக்கமாகக் குறிப்பிட்டு மக்கள் பார்வையில் வைக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டனர். மக்களைக் கவர்ந்த சில நடவடிக்கைகள் இவை.

தோலின் நிறத்தை வைத்து ஒருவரை ஏற்கும், நிராகரிக்கும் அமெரிக்காவில், மிக உயர்ந்த ஒரு பதவியை வகித்த பராக் ஒபாமா நிச்சயம் வரலாற்றில் நிலைத்துநிற்பார். டொனால்ட் டிரம்ப் போன்றோரின் வெறுப்பு அரசியலோடு ஒப்பிடும்போது ஒபாமா மேலும் உயர்ந்து ஒரு லிபரலாக நினைவு கூரப்படுவார் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் அவருடைய தவறுகளும் அவருடைய பிம்பத்தின் ஒரு பகுதியாகவே நீடிக்கப்போகின்றன. அவருடைய தோல்விகள், அவருடைய சாதனைகளைப் பின்தொடரத்தான்போகின்றன.

இன்னும் 20 அல்லது 50 ஆண்டுகள் கழித்து, ஒபாமாவை அமெரிக்கா எப்படி நினைவுகூரும்? லிங்கன், ரூஸ்வெல்ட் போன்ற சிலரை அமெரிக்கா இந்த நிமிடம் வரை மதிப்புடன் போற்றிவருகிறது. நிக்சன், புஷ் போன்ற அதிபர்கள் அமெரிக்காவால் இப்போதும் வெறுக்கப் படுகிறார்கள். பராக் ஒபாமாவுக்கு இந்த இரண்டுக்கும் நடுவில் ஓர் இடத்தை அமெரிக்கா அமைத்துக்கொடுக்கும்!

SHARE