வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சிறுவர்கள்… வலுக்கும் சி.ஐ.டி விசாரணை!

32

 

இலங்கையிலிருந்து கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சிறுவர்களின் நிலை தொடர்பாக காவல்துறையினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமையன்று (24) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை மற்றும் அவர்களுடன் கொழும்பில் இருந்து கோலாலம்பூருக்கு சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, இந்த வாரம் மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் மற்றும் தந்தை ஆகியோரிடம் காவல்துறை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) நடத்திய விசாரணையின் பின்னணியிலேயே பல்வேறு விடயங்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடவுச்சீட்டுக்கான அங்கீகாரம்
அதன்படி, இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகள் தத்தெடுப்பு அல்லது உடல் உறுப்புகளை பெறுவதற்காக கடத்தப்படவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித கடத்தல், விசாரணை மற்றும் கடல்சார் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சில மேற்கத்திய நாடுகளில் இலங்கை கடவுச்சீட்டுக்கான அங்கீகாரம் மிகவும் குறைவாக இருப்பதால் போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, குழந்தைகள் முதலில் உண்மையான இலங்கை கடவுச்சீட்டில் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் அவர்கள் போலி மலேசிய கடவுச்சீட்டு மூலம் உயர் கல்விக்காக ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், கனடா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத புலம்பெயர்வு
இந்த குற்றச்செயல்களுக்கு, குற்றவாளிகளால் ஒவ்வொரு குழந்தைகளிடமிருந்தும் 7 முதல் 9 மில்லியன் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது, குழந்தைகளை எந்தவிதமான இன்னலும் இல்லாமல் பாதுகாப்பாக தரையிறக்குவதற்காகவே இந்தத் தொகை அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத புலம்பெயர்விற்கு வெளிநாடுகளில் உள்ள தமிழ் குழந்தைகளின் உறவினர்கள் நிதியுதவி அளித்துள்ளனர், அதுமாத்திரமன்றி இந்த சட்டவிரோதமான நாடுகடத்தலிற்குள்ளாகும் குழந்தைகள் பெருமளவில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து அனுப்பப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த முறைகளில் முன்னெடுக்கப்படும் சர்வதேச மனித கடத்தல், மற்றும் அதனுடன் தொடர்புடைய கும்பலின் பின்னணியில் உள்ள முக்கிய செயற்பாட்டாளர்களை கண்டறியும் விசாரணைகள் தொடர்வதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE