21 குழந்தைகளை பாலியல் சித்ரவதை செய்த மருத்துவர்: கடுமையான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் [

242
ஜேர்மனியில் சிகிச்சைக்காக வந்த 21 குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் சித்ரவதை செய்த மருத்துவர் ஒருவருக்கு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.தெற்கு ஜேர்மனியில் உள்ள Augsburg மருத்துவமனையில் 41 வயதான குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த மருத்துவமனை மட்டுமின்றி முனிச் நகரில் உள்ள ஜேர்மன் இதய நோய்க்கான மருத்துவமனையிலும் பணிபுரிவதுடன் மருத்துவ துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

இந்நிலையில், 4 முதல் 5 வயதுடைய ஆண் குழந்தைகள் இவரிடம் சிகிச்சைக்கு வந்தபோது அவர்களிடம் அத்துமீறி நடந்ததாக கடந்த 2014ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.

அதாவது, கடந்த 15 ஆண்டுகளாக சுமார் 21 குழந்தைகளிடம் இவர் பாலியல் தாக்குதலை நடத்தியதை விசாரணையில் மருத்துவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சிகிச்சைக்கு வரும் குழந்தைகள் எதிர்ப்பு தெரிவிக்காதவாறு, அவர்களுக்கு மெலிதான மயக்க மருந்து அளித்துவிட்டு அவர்களை வன்புணர்வு செய்து அதனை வீடியோ காட்சியும் எடுத்து வந்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 வயது சிறுவன் ஒருவனை காரில் கடத்தி சென்று பாலியல் தாக்குதல் நடத்தி விட்டு துரத்தியுள்ளார்.

இந்த சிறுவனிடம் எடுக்கப்பட்ட மரபணு சோதனை மற்றும் கைப்பேசி தகவல்களை சேகரித்த பொலிசார் மருத்துவரை அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று Augsburg நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

புனிதமான மருத்துவர் தொழிலை அசுத்தப்படுத்திவிட்டு 21 குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக 13 வருடங்கள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், தண்டனை காலம் முடிந்த பின்னரும் அவர் மருத்துவ தொழிலை ஆயுள் முழுவதும் தொடரக்கூடாது என்றும், சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகும் அவர் பொலிசாரின் கண்காணிப்பில் தான் இருக்க வேண்டும் எனக் கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SHARE