அனுராதபுரத்தில் அபயகிரி விகாரை     கட்டப்படுவதற்கு முன்பு       அங்கிருந்த சிவன் கோயில் 

265

 

அனுராதபுரத்தில் அபயகிரி விகாரை கட்டப்படுவதற்கு முன்பு அங்கிருந்த சிவன் கோயில்

 

(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

இலங்கையில் உள்ள இடங்களில் என் மனம் கவர்ந்த இடங்கள் சில உள்ளன. அவற்றில் முக்கியமானது அனுராதபுரம். அனுராதபுரத்துக்கு நான் செல்லும் போதெல்லாம் அங்குள்ள அபய தீர்த்தத்தில் நீராடி, அங்கு இருக்கும் முக்கிய ஏழு வணக்கத் தலங்களுக்குச் சென்று வணங்கி விட்டு வருவது வழக்கம். அச்சமயங்களில் நான் சென்று வணங்கும் இடங்களில் ஒன்று தான் அபயகிரி விகாரை.

சிவபூமியின் சுவடுகளைத் தேடி நான் ஆய்வு செய்து கொண்டிருந்த சமயம் அபயகிரி விகாரை பற்றியும், அங்கிருந்த ஓர் சிவன் கோயிலை அழித்தே வட்டகாமினியால் இவ்விகாரை கட்டப்பட்டது எனவும் சில நூல்களில் படித்திருந்தேன். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் அந்நூல்களில் குறிப்பிடப்படவில்லை. எனவே அவற்றைத் தேடி எடுக்க வேண்டும் என எண்ணினேன். அபயகிரி விகாரையின் வரலாற்றைத் தேடிய போது அது பற்றிய பல விபரங்கள் கிடைத்தன.

அநுராதபுரம் புராதன நகரின் வடக்கில் அபயகிரி விகாரை வளாகம் அமைந்துள்ளது. இது பொ.ஆ.மு. 1ஆம் நூற்றாண்டில் வட்டகாமினி அபயவினால் கட்டப்பட்டது. இவ்விகாரை கட்டப்படுவதற்கு முன்பு இங்கு பெரிய சிவாலயம் ஒன்று இருந்துள்ளது. இச்சிவாலயத்தை அழித்து அதன் மீதே அபயகிரி விகாரை கட்டப்பட்டது என மலலசேகர, அரிச்சந்திர ஆகிய வரலாற்றாசிரியர்கள் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

தேவநம்பியதீசன் காலத்தில் பெளத்த சமயம் இலங்கையில் பரவத் தொடங்கினாலும், அவன் காலத்தில் செல்வாக்குடன் இருந்த பிராமண, ஜைன, நிகண்ட (சமணர்) துறவிகள் பெளத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் அதே செல்வாக்குடனேயே விளங்கினர். இலங்கையை 22 வருடங்கள் ஆட்சி செய்த தமிழ் மன்னர்களான சேனன், கூத்திகன் ஆகியோரிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிய அசேலன் என்பவன் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் எல்லாளன் எனும் தமிழ் மன்னன் அனுராதபுரத்தைக் கைப்பற்றினான். எல்லாளன் ஆட்சி அமைப்பதற்கு  இங்கிருந்த பிராமண, ஜைன, நிகண்ட (சமணர்) துறவிகளின் ஆதரவு கிடைத்ததாக சிங்கள நூல்கள் கூறுகின்றன.

எனவே எல்லாளன் காலத்தில் பிராமண, ஜைன, சமண துறவிகள் அரச ஆதரவுடன் இருந்துள்ளனர். எல்லாளன் ஆட்சி செய்த 44 வருட காலத்தில் இவர்களால் கோயில்கள் மற்றும் ஜைன, சமண பள்ளிகள் போன்றவை அமைக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக்காலப் பகுதியில் தமிழ் மன்னனான எல்லாளனின் ஆதரவுடன் அனுராதபுரத்தில் சிவன் கோயில் உட்பட பல சைவக் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வட்டகாமினி அபய எனும் வலகம்பா மன்னன் இரண்டாவது தடவையாக ஆட்சியைக் கைப்பற்றிய பின்பே அபயகிரி விகாரை கட்டப்பட்டது. இது பொ.ஆ.மு 29-17 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டதாகும். தமிழ் மன்னன் எல்லாளனை வெற்றி கொண்ட துட்டகைமுனுவின் தம்பியான சத்தாதீசனின் மூன்றாவது புதல்வனே வட்டகாமினி அபய எனும் வலகம்பா என்பவனாவான். இவன் ஆட்சிக்கு வந்து 5ஆவது மாதத்தில் ருகுணு இராச்சியத்தில் இருந்த தீசன் என்ற பிராமணன் இவனது ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து கொண்டிருந்தான். இந்த கால கட்டத்தில் ஏழு தமிழர்கள் அனுராதபுரத்திற்கு படை எடுத்து வந்து வட்டகாமினியை சிறைப் பிடிக்க முயன்ற போது அவன் தப்பியோடி காட்டிற்குள் ஒளிந்து கொண்டான்.

இக்காலப்பகுதியில் ருகுணு இராச்சியத்திலும், அனுராதபுர இராச்சியத்திலும் பிராமண, சமண துறவிகளின் செல்வாக்கு ஓங்கியிருந்தது. ருகுணு இராச்சியத்தில் தீசன் எனும் பிராமணனும், அனுராதபுர இராச்சியத்தில் கிரி நிகண்டர் எனும் சமணத் துறவியும் செல்வாக்கு பெற்று விளங்கினர். இவர்களின் ஆதரவுடன் ஐந்து தமிழ் மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராக 15 ஆண்டுகள் அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்தனர்.

 

இந்த ஐந்து மன்னர்கள் காலத்திலிருந்து 57 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் எல்லாள மன்னன் ஆட்சி நிலவியது. 44 வருடங்கள் இலங்கையின் மன்னனாக எல்லாளன் ஆட்சி செய்த காலத்தில் தான் (பொ.ஆ.மு 145-101) அபயகிரி பகுதியில் ஈஸ்வரன் கோயில் ஸ்தாபிக்கப் பட்டிருக்க வேண்டும். இந்த ஐந்து மன்னர்களும் பொ.ஆ. மு. 44 ல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். இவர்கள் காலத்தில் அபயகிரி பகுதியில் இருந்த சிவன் கோயில் பிரசித்தி பெற்று விளங்கியிருக்க வேண்டும். அனுராதபுரத்தின் வடக்குப் பக்கத்தில் சிவன் கோயிலும், சமணப் பள்ளியும் இருந்தன. கிரி நிகந்தர் எனும் சமணத் துறவியின் பொறுப்பில் பிராமணர்களும், சமணர்களும் இவற்றைப் பராமரித்து வந்தனர். தப்பியோடிய வட்டகாமினி இக்காலப்பகுதியில் மகாதீச எனும் தேரரின் நம்பிக்கைக்குரியவரான  தனசிவன் எனும் தமிழனின் பாதுகாப்பில் 14 வருடங்கள் இருந்தான்.

ஐந்து தமிழ் மன்னர்களில் கடைசியாக தாதிகன் என்பவன் ஆட்சி செய்த காலத்தில் படை திரட்டி வந்த வட்ட காமினி அபய தாதிகனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினான். தமிழ் மன்னர்களின் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த கிரி நிகந்தரின் கோயில்களை அழித்து அவ்விடத்தில் தூபியைக் கட்டினான். தனது பெயரில் உள்ள அபய எனும் பெயரையும், கிரி நிகந்தரின் பெயரில் உள்ள கிரி எனும் பெயரையும் சேர்த்து அத்தூபிக்கு அபயகிரி எனப்   பெயரிட்டான் என மகாவம்சம் கூறுகிறது.

அபயகிரி விகாரை வரலாறு பற்றிய இத்தனை விபரங்களையும் நூல் நிலையங்களில் இருந்த பழமை வாய்ந்த நூற் குறிப்புகளில் இருந்து பெற்றேன். இருப்பினும் அங்கு சிவன் கோயில் இருந்தமைக்கான வலுவான ஆதாரம் கிடைக்கவில்லை. எங்கேயோ இதற்கான ஆதாரம் ஒன்று உள்ளது எனும் நம்பிக்கை எனக்குள் உண்டானது.  அதைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில்  ஆதாரத்தைத் தேடி அபயகிரி விகாரைக்குச் சென்றேன். வழமை போல் தூபியைச் சுற்றி வந்தேன். தூபியைச் சுற்றி பல யக்ஷ, நாக வழிபாட்டுச் சின்னங்கள் காணப்பட்டன. அங்கு மிக முக்கியமான சிவ வழிபாட்டுச் சின்னமும் இருந்தது. ஆனால் அது வேறு பெயரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இறுதியாக விகாரை வளாகத்தில் இருந்த காரியாலயத்துக்கு வந்து அங்கு இதன் வரலாறு பற்றிய குறிப்புகள் கிடைக்குமா என்று பார்த்தேன். அப்போது தான் ஒரு அதிசயமான, ஆச்சரியமான  அந்தப் படம் என் கண்ணில் பட்டது. நான் தேடி வந்த அந்த ஆதாரம் அதுதான். என் மனதுக்குள் கிடைக்கும் என நான் நம்பிக் கொண்டிருந்த ஆதாரம் அதுதான்.

அபயகிரி தூபியைக் கட்டுவதற்கு முன்பு, இங்கிருந்த சக்தி வாய்ந்த  லிங்கத்தையும், நந்தி தேவரையும் தூபியில் ஸ்தாபிப்பதற்காக நடக்கும் புனித பூஜையும், மன்னன் வட்டகாமினி இப்பூஜையில் கலந்து கொண்டு லிங்கத்தையும், நந்தி தேவரையும் வணங்கும் காட்சியும் அங்கே ஓர் இடத்தில் ஓவியமாக சித்தரிக்கப் பட்டுள்ளதைக் கண்டேன். அதன் பின்பு இது பற்றிய ஓர் பழைய குறிப்பும் அங்கே கிடைத்தது.

இங்கிருந்த கோயிலை அழித்த வட்டகாமினி, தூபியைக் கட்டும் போது, இவ்விடத்தில் இருந்து தன்னால் அழிக்கப்பட்ட சக்தி வாய்ந்த சிவன் கோயிலின் மூல மூர்த்தியான சிவலிங்கத்தையும், நந்தி தேவரையும் பயபக்தியுடன் வணங்கி, அவற்றை புனித சின்னங்களாக ஒரு பேழையில் வைத்து, தான் அமைத்த தூபியின் நடுப்பகுதியில் ஸ்தாபித்து, தூபியைச் சுற்றிக் காவல் தெய்வங்களையும் அமர்த்தி வழிபட்டான். குபேரக் கடவுளின் காவலர்களான சங்கநிதி, பத்மநிதி ஆகிய தெய்வங்களை தூபியின் பிரதான வாசலில் காவல் தெய்வங்களாக ஸ்தாபித்தான். அன்று முதல் இன்று வரை இப்பிரமாண்டமான தூபியின் உள்ளிருந்து சிவனும், நந்திதேவரும் அருளாட்சி செய்து வருகின்றனர்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை

SHARE