இலங்கை அரசாங்கம், குமரன் பத்மநாதன் மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது குற்ற விசாரணைகளை மேற்கொண்டு தமது பொறுப்புக்கூறலை ஆரம்பிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.
ஆங்கில இணையத்தளமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த இரண்டு பேரும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கொலை முயற்சியிலும் தொடர்புபட்டவர்களாவர்.
இந்தநிலையில் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைக்க வேண்டும்.
இதன்மூலம் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான வாய்ப்பையாவது அது உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
அதேநேரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கப்படாவிட்டால் அது அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதாக அமைந்துவிடும்.
எனவே சர்வதேச விசாரணையின் மூலம் இலங்கையின் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் வகை செய்ய வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக்கட்சி குறிப்பிட்டுள்ளது.