ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள கோச்சடையான் திரைப்படம் வெளியான சில தினங்களுக்குள்ளேயே உலகம் முழுவதும் சுமார் 42 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று தெரிவித்தது.
ஆனால், தமிழில் மட்டுமே படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், மற்ற மொழிகளில் கோச்சடையான் பலமான போட்டியைச் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஹிந்தியில் வெளியான ‘ஹீரோபான்டி’ படம் கோச்சடையானுக்கு போட்டியாக விளங்குவது போல், இந்திய சினிமாவில் முக்கிய திரையுலகான தெலுங்கிலும் கோச்சடையானுக்குப் போட்டியாக ‘மனம்’ திரைப்படம் விளங்கி வருகிறது.
ஆந்திரத் திரையுலகில் அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வரும் இந்த படத்தால் கோச்சடையான் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லையென்கிறார்கள். இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகிய சில தினங்களுக்குள் ‘கோச்சடையான்’ சுமார் 4 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்துள்ளது. ஆனால், ‘மனம்’ திரைப்படம் அதைவிட இருமடங்காக சுமார் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய இந்திய மொழித் திரைப்படங்களுக்குத்தான் அதிக வரவேற்பு இருக்கும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் ‘கோச்சடையான்’ படம் ‘ஹீரோபான்டி, மனம்’ படங்களின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதாம்.
முன்னர் திட்டமிட்டபடி கோச்சடையான் படம் மே 9ம் தேதி வெளிவந்திருந்தால் இந்த போட்டி எதுவுமில்லாமல், வசூல் ரீதியாக இன்னும் பல சாதனையை புரிந்திருக்கும் என திரையுலகத்தினர் சொல்கிறார்கள்.