ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை புறக்கணிப்பேன்: வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா எச்சரிக்கை

378
ஆப்கானிஸ்தானின் தற்போதைய அதிபர் ஹமீது கர்சாயின் பதவிக்காலம் முடியும்நிலையில் புதிய அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் இறுதியில் நடைபெற்றது. இதன் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான அப்துல்லா அப்துல்லாவும், ஜூன் மாதம் வெளியிடப்பட்ட இரண்டாவது சுற்று எண்ணிக்கையில் மற்றொரு வேட்பாளரான அஷ்ரப் கனியும் முன்னணியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் போலி வாக்குகள் கலக்கப்பட்டதாக குறை கூறிய அப்துல்லா இந்த முடிவை ஏற்க மறுத்தார்.

கடந்த 13 ஆண்டுகளாக நேட்டோ துருப்புகளின் பாதுகாவலில் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு இந்தத் துருப்புகள் அங்கிருந்து முற்றிலுமாக விலக உள்ள நிலையில், தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல்களும் அங்கு அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் புதிய அதிபர் தேர்வில் நடைபெறும் இந்தக் குழப்பங்கள் மற்றொரு உள்நாட்டுக் கலவரத்திற்கே வழிவகுக்கும் என்று கருதிய அமெரிக்காவும், ஐக்கிய நாடுகளும் ஐ.நா கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் போலி வாக்குகள் நீக்கப்பட்ட புதிய எண்ணிக்கை நடைபெறும் என்று கூறி இரு தரப்பினரையும் சம்மதிக்க வைத்தன.

கிட்டத்தட்ட 60 சதவிகித வாக்குகள் மறுபடியும் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில் போலி வாக்குகள் நீக்கப்படவில்லை என்று அப்துல்லா அப்துல்லாவின் தலைமை ஆடிட்டரான பசல் அஹமது மனவி இன்று காபூலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் நாளை காலையிலிருந்து இந்த எண்ணிக்கையிலிருந்து விலக இருப்பதாகவும் அதற்குப்பின்னர் நடைபெறும் எந்த சம்பவத்திற்கும் தாங்கள் பொறுப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரும் 4ஆம் திகதி வேல்சில் தொடங்க இருக்கும் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக ஆப்கான் அதிபர் தீர்மானிக்கப்பட்டாலே அவர்களுக்கான உதவிகள் குறித்தும் முடிவு செய்யப்படமுடியும் என்று ஆப்கானிஸ்தானின் மேற்கத்திய நட்பு நாடுகள் கருதுகின்றன.

SHARE