இசைப்பிரியா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்குக் த.தே.ம.மு கண்டனம்
தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா அவர்கள் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பாலியல்சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கான வீடியோ ஆதாரங்களை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் சனல் 4 தொலைக்காட்சி கடந்த 31-10-2013 அன்று வெளியிட்டுள்ளது.
இவ் வீடியோகாட்சி இசைப்பிரியா யுத்தம் நடைபெற்றபோது இடையில் சிக்கி இறக்கவோ, காணாமல்போகவோ இல்லை என்பதனையும் மாறாக சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பாலியல்சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதனை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது. கைதியாக உள்ள ஒரு போராளியைக் கொல்வதே சர்வதேச சட்டத்தின் கீழ் ஓரு மோசமான குற்றமாக இருக்கும் நிலையில்,
தாம் கைது செய்து வைத்திருந்த ஒரு ஊடகத்துறை சார்ந்த ஒரு பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொடூமாகக் கொன்றுள்ளனர். இது மிக மோசமான யுத்தக்குற்றமாகும். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக சனல் 4 உட்பட பல சர்வதேச மற்றும் உள்ளுர் ஊடகங்களும் இணையத்தளங்களும் பெருமளவு ஆதாரங்களை கடந்த
காலத்தில் வெளியிட்டு இலங்கை அரசின் இனப்படுகொலையை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தியிருந்தன. இந்நிலையில் சனல் 4 வெளியிட்டுள்ள இசைப்பிரியா உயிருடன் இராணுவத்தின் கையில் பிடிபட்டிருக்கும் காட்சிகளும், பாலியல்ரீதியாக வதைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்களும் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள கொடூரங்களை மேலும் நிரூபிக்கும் வலுவான சான்றாக அமைந்துள்ளது. இசைப்பிரியா மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இந்த வீடியோ ஆதாரமும் கடந்தவாரம் பிபிசி வெளியிட்டியிருந்த பெண்ணொருவர் விசாரணைகளின்போது குழுவாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை பற்றிய ஆதாரமும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்திலும் அதன் பின்னரும் அரசினால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகள் மற்றும் பெண்கள் மீது பாலியல்வதைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. அது மட்டுமன்றி யுத்தம் முடிந்து 3 வருடங்கள் கடந்த பின்னரும் தமிழினத்தை இல்லாது அழிக்கும் நோக்கில் கட்டமைப்புசார்(ளவசரஉவரசயட) இன அழிப்பு பல்வேறு கோணங்களில் திட்டமிட்டு அசுர
வேகத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே இசைப்பிரியா மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை உட்பட நடைபெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். மேற்படி குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவம் வடகிழக்கில் நிலைகொண்டிருக்கும்வரை அவ்வாறான விசாரணை மேற்கொள்வது சாத்தியமற்றது. எனவே வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் சிறீலங்கா அரசியல் அமைப்பிற்கு வெளியில் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் இடைக்கால நிர்வாகம் ஒன்று உடனடியாக ஏற்படுத்தப்பட்டு சுதந்திரமான, சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். இதன் மூலமே இனப்படுகொலை தொடர்பான சாட்சியங்களை திரட்டுதல், சாட்சியங்களை பாதுகாத்தல், குற்றவாளிகள் தண்டிக்கப்படுதல், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதி பெற்றுக்கொள்ளுதல், என்பனவும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்பு சார் இனஅழிப்பைத் தடுத்து நிறுத்துவதும் நடைமுறைச்சாத்தியமாகும்.
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
விஸ்வலிங்கம் மணிவண்ணன்
தேசிய அமைப்பாளர்