இந்தியாவின் இலக்கு குக் ஆக இருக்க வேண்டும்- ரவி சாஸ்திரி

435
இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. நீண்ட தொடரான இந்த போட்டியை இந்தியா வெல்லுமா? என்ற கேள்வி இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் இத்தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ரவி சாஸ்திரி கூறியதாவது:-

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் அலைஸ்டர் குக் நீண்ட நாட்களாக மோசமான பார்மில் உள்ளார். இத்துடன் ஜூலை 9-ந்தேதி தொடங்கும் தொடரை சந்திக்க இருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிராக 0-1 என தொடரை இழந்த கையுடன் இந்தியாவை சந்திக்கிறது இங்கிலாந்து. கடந்த 24 இன்னிங்சில் குக் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

இந்தியாவிற்கு எதிராக 55.26 சராசரி ரன் அடித்திருக்கும் குக் இந்த தொடரில் நல்ல பார்மிற்கு வருவதை இந்திய அணி தடுக்க வேண்டும். அவருக்கு இந்திய அணி தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். போட்டியை முடிந்த அளவு கடுமையானதாக மாற்றிக் காட்ட வேண்டும்.

இதேபோல்தான் 1986-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த போது இங்கிலாந்து அணி கேப்டனாக டேவிட் கோவர் இருந்தார். பார்மில் இல்லாத அவருக்கு நாங்கள் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தோம். இதன்காரணமாக அவரால் முதல் டெஸ்ட்டில் ரன் அடிக்க இயலவில்லை. அத்துடன் தனது கேப்டன் பதவியையும் இழந்தார். இந்தியா தொடரையும் வென்றது.

குக் மனதளவில் மிக வலிமையானவர். அவர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் அனைத்து சாதனையையும் முறியடிப்பார். சுதந்திரமாக விளையாடாத கேப்டனாக குக் களமிறங்க வேண்டுமா? அல்லது சுதந்திரமான பேட்ஸ்மேனாக குக் விளையாட வேண்டுமா? என்பதை இங்கிலாந்து அணி நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SHARE