இந்தியாவுக்கு தேவை ஆக்கபூர்வமான தலைமை : புதிய பிரதமருக்கு கலாம் அறிவுரை

575

இந்தியாவிற்கு தற்போது தேவைப்படுவது ஆக்கபூர்வமான தலைமை எனவும், தலைமை பொறுப்பை ஏற்பவர் நாட்டின் வளர்ச்சி குறித்து அடுத்த 20 ஆண்டுகளுக்கும் சிந்திக்கும் தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்பவருக்கு அவர் கூறிய அறிவுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், நாட்டின் உயரிய பதவியில் இருந்தாலும் சாமாணிய மக்களை பற்றியே அதிக சிந்தித்தவர். இவருக்கு ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் அறிவியலுக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய கலாம், மாணவர்களிடையே பேசினார். அப்போது இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என சில அறிவுரைகளை வழங்கினார்.

கலாமின் அட்வைஸ் : தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவிற்கு தேவை ஆக்கபூர்வமான தலைமை மட்டுமே; ஆக்கபூர்வமான தலைமையால் மட்டுமே உண்மையான ஜனநாயகத்துடனான அதிவேக வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்பவர் நாட்டை பற்றிய திடமான மற்றும் 20 ஆண்டுகளுக்கு தேவையான தொலைநோக்கு பார்வை வேண்டும்; ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமின்றி நாடு முழுவதற்கும் சமமான வளர்ச்சியை ஏற்படும் சிக்கலான முடிவுகளையும் தெளிவாக எடுக்க வேண்டும்; வெற்றி தோல்விகளை சமமான கருத வேண்டும்; பலமான நிர்வாக திறன் மட்டுமின்றி ஒருமைப்பாட்டுடனான செயல் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்;

அனைத்து துறைகளிலும் இந்தியா வெற்றி அடைய ஆக்கபூர்வமான தலைமை மிகவும் அவசியம்; அதனால் ஆக்கபூர்வமான தலைவரை நாம் தலைமை பதவியில் அமர்த்த வேண்டும். எவ்வித தடையும் இன்றி ஆணை பிறப்பிக்கும் பயிற்சியாளராகவும், செயல்பாடுகளை கண்காணிக்கும் நிர்வாகியாகவும், பிரதிநிதிகளை இயக்குபவராகவும் இருக்க வேண்டும்; இளைஞர்கள் இன்று விரும்புவது ஜனநாயக ஆட்சியை மட்டுமே. அது ஜனநாயக இந்தியா ஆகட்டும், கம்யூனிஸ்ட் சீனா ஆகட்டும் அல்லது உலகின் வேறு எந்த முறையின் கீழ் செயல்படும் நாடாகட்டும். இளைஞர்கள் அனைவரும் விரும்புவது மக்களால், மக்களுக்காக, மக்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் ஆட்சியை மட்டுமே. இவ்வாறு கலாம் பேசி உள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களின் கேள்விகளுக்கும் கலாம் பதிலளித்தார். அப்போது அவரின் ஜனாதிபதி அனுபவம் பற்றி கேட்டதற்கு, தனது வாழ்வின் சிறந்த நாட்கள் என தெரிவித்தார். அனைவரும் நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என விரும்புவது குறித்தும், மோடி பற்றிய அவரது கருத்து குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தவிர்த்த கலாம், சிரித்தபடியே மே 16 அன்று நான் பதில் கூறுகிறேன் என பதிலளித்தார்.

எதிர்கால இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு, வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உருமாற வேண்டும்; ஒவ்வொரு இந்திய பிரஜையும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள நிலையில் வாழ வேண்டும்; உயர் தரத்திலான கல்வி மற்றும் சுகாதார வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; தேசிய பாதுகாப்பு பலமானதாக இருக்க வேண்டும். இவ்வாறு கலாம் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இந்தியா 2020ல் வளர்ச்சி பெற்ற நாடாக மாறுவதற்காக கலாம் வகுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பங்களிப்பிற்காக அவருக்கு எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. உலக அளவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களால் சுமார் 40க்கும் மேற்பட்ட கவுரவ டாக்டர் பட்டங்கள் அப்துல் கலாமிற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE