இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே அரசாங்கத்தின் நடவடிக்கைகள்-ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி

100

 

ரணில் விக்ரமசிங்க ‘நல்லிணக்கம்’ பற்றி பேசுகின்றார். ஆனால் அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுகின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி விமர்சித்துள்ளார்

மேலும், 1983-2009 உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக இலங்கை அதிகாரிகள் ஒன்பது தமிழர்களை நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு நீண்ட காலமாக பயங்கரவாத தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

வர்த்தக பங்காளிகள்
இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, மாற்றியமைப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்துள்ளது.

எனினும் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் மற்றும் அதனை இரத்து செய்யும் வரை அதனை பயன்படுத்த தடை வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இலங்கை அதிகாரிகள் பயன்படுத்துவது கொடூரமான துஸ்பிரயோகம் ஆகும்.

அத்துடன் ஏற்கனவே தொடர்ச்சியான அரசாங்க பாகுபாட்டை எதிர்கொள்ளும் ஒரு சமூகத்தை மேலும் ஓரங்கட்டுகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ‘நல்லிணக்கம்’ பற்றி பேசுகின்றார், ஆனால் அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப் பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுகின்றன என்று அவர் விமர்சித்துள்ளார்

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் நவம்பர் 25 மற்றும் 27 க்கு இடையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அதிகாரிகள் இந்த 9 பேரையும் கைது செய்தனர். நினைவேந்தல் ஊர்வலத்தில் இருந்து அலங்காரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்தனர் என்றும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் 2 ஆம் திகதி வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒதியமலையில் 1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் தமிழ் கிராம மக்களை படுகொலை செய்ததை நினைவுகூரும் வகையில், இந்து ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வை இலங்கை பொலிஸார் முடக்கியதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இன மற்றும் மத சிறுபான்மையினர் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதைத் தடுப்பது மதம், நம்பிக்கை, கருத்துச் சுதந்திரம் மற்றும் கூட்டுறவுக்கான உரிமைகளை மீறுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

SHARE