இராணுவத்தால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது- பா.உறுப்பினர் சி.சிறீதரன்

402
800 ஏக்கர் நிலத்தை இராணுவம் அபகரிக்க முஸ்தீபு!- காணி அளவீடு மக்கள் எதிர்ப்பு!- கிளிநொச்சி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ். மாவட்டம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெற்றிலைக்கேணி கிராசேவகர் பிரிவில் உள்ள 800 ஏக்கர் நிலத்தை இராணுவ முகாமிற்காக படையினர் உதவியுடன் நில அளவையாளர்கள் அளவீடு செய்ய முற்பட்ட வேளை இக்காணிகளின் உரிமையாளர்களும், பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தலையிட்டு நிறுத்தியுள்ளனர்.

யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெற்றிலைக்கேணி கிராசேவகர் பிரிவில் புல்லாவெளி, தட்டாஞ்சேனை, மண்டலாய் மற்றும் கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில்வயல் கிராமசேவகர் பிரிவில் உள்ள வயல் விடுதி கிராமத்தையும் உள்ளடக்கிய சுமார் 800 ஏக்கர் பரப்பளவுள்ள காணியை இராணுவத்தின் 533வது பிரிவுக்காக நில அளவையாளர்கள் அளக்க முற்பட்டவேளை இக்காணிகளுக்கு சொந்தமானவர்களும் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தலையிட்டு நிறுத்தியுள்ளனர்.

குறித்த இடத்திற்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபை அமைச்சர் ஜங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை மற்றும் பரஞ்சோதி ஆகியோரும், வல்வெட்டித்துறை நகரசபை உபதலைவர் சதீஸ், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் சுப்பையா, பச்சிலைப்பள்ளி பிரதேசசபை உறுப்பினர் சுரேன், ஊடகவியலாளர் சுரேன் உள்ளிட்டவர்கள் சென்று நேரில் மக்களுடனும் நில அளவையாளர்களுடன் கருத்தறிந்துள்ளனர்.

மேற்படி இந்தக் காணிச் சொந்தக்காரர்களிடம் காணி உரிமைக்கான ஆவணங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இராணுவத்தால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

 

அச்சுவேலி இராச வீதியில் இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் 53 பரப்புக் காணிகளை அளவீடு செய்ய இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை பொதுமக்கள் தடுத்துப் போராட்டம் மேற்கொண்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.

மேற்படி பகுதியில் 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 53 பரப்புத் தோட்டக் காணிகள் கடந்த ஜுன் 2ம் திகதி நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் அளவீடு செய்ய முற்பட்ட போது, அதனை பொதுமக்கள் போராட்டம் நடத்தித் தடுத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை  பொலிஸாரின் பாதுகாப்புடன் மீண்டும் காணிகளை அளவீடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அங்கு கூடிய பொதுமக்கள், வடமாகாண சபை அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அங்கு வந்த அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இது தொடர்பில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இதன் போது, இந்தக் காணிச் சுவீகரிப்பிற்கு எதிராக தாங்கள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அவ்வாறானதொரு நிலையில், இந்த காணிகளை அளவீடு செய்ய முடியாது எனவும் பொதுமக்கள் கூறினர்.

அதற்கு பொறுப்பதிகாரி, நீதிமன்ற உத்தரவினை கையளிக்கும்படி கோரியுள்ளார். நீதிமன்ற வழக்கு இலக்கம் மட்டுமே உள்ளது, நீதிமன்ற உத்தரவு இன்னமும் கிடைக்கப் பெறவில்லையென பொதுமக்கள் பதில் கூறினார்கள்.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவு இல்லாமல் காணி அளவீடு செய்வதினைத் தடை செய்ய முடியாது. நாங்கள் காணி அளவீடு செய்வதற்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

எங்களைக் கைது செய்த பின்னரே நீங்கள் காணிகளை அளவீடு செய்ய முடியும் என பொதுமக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர், நிலஅளவையாளர்கள் வந்த வாகனத்தினை சுற்றி அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக இன்றைய தினமும் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படாமல் நில அளவையாளர்கள் திரும்பி சென்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும்  செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ், சாவகச்சேர் நகரசபை உறுப்பினர் கிஷோர் ஆகியோரும் இப்போராட்டத்தில் உரிமையாளர்களுடன் கலந்துகொண்டனர்.

2வது தடவை முயற்சியும் ஏமாற்றம்

யாழ்.அச்சுவேலி ஜே.285 கிராமசேவகர் பிரிவில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 54பரப்பு காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களம் மேற்கொண்டிருந்த 2வது முயற்சியும் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் காட்டிய கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் மக்கள் நில அளவையாளர்களின் வாகனத்திற்கு முன்பாக உட்கார்ந்து தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் பிரிவு 2பிரசுரத்தில் பொது தேவைக்காக மக்களுடைய காணிகளை சுவீகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள போதும், அதே பிரசுரத் தில் கீழ் பகுதியில் 5வது காலாட்படையின் தலமை காரியாலயம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த 6ம் மாதம் 5ம் திகதி மேற்கொள்ளப்பட்ட 1ம் கட்ட முயற்சியின் பின்னர், மக்கள் குறித்த காணி சுவீகரிப்பிற்கு எதிராக நீதிமன்றில் 9குடும்பங்கள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நீதிமன்றின் வழக்கையும் மதிக்காமல் மீண்டும் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், ஆகியோர் இன்றைய தினம் குறித்த பகுதியில் வந்து மக்களுடன் இணைந்து எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்புக்களையும் மீறி நில அளவையாளர்கள் குறித்த காணிகளை அளவீடு செய்வதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.

எனினும் காலை 8.45 தொடக்கம் நண்பகல் 12மணிவரையில் மக்கள் தமது போராட்டத்தை தொடர்ந்தும் நடத்தினர். இந்நிலையில் முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து நில அளவையாளர்கள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளதுடன், தமது அளவீட்டு நடவடிக்கைகளை குழப்பினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் நில அளவையாளர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் மக்களுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றிணையும் இன்றைய தினம் பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மக்களுக்குச் சொந்தமான சுமார் 800 ஏக்கர் காணியை கடற்படை தேவைகளுக்காக சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராகவும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நெடுந்தீவில் இதே போன்று கடற்படைத் தேவைக்காக காணி இன்றைய தினம் சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அங்கே இன்றைய தினம் எவ்விதமான எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை நாளைய தினம் தென்மராட்சி பிரதேச செயலர் எல்லைக் குட்பட்ட மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்தில் உள்ள மக்களுடைய காணிகள் படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான அள வீட்டு நடவடிக்கைள் நாளைய தினம் நடக்கவுள்ளது. அதற்கும் தாம் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

எமது கிராமத்து பொதுநிலம் கிராமத் தேவைக்கே! கிளிநொச்சி தொண்டமான்நகர் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தமது கிராமத்தின் பொதுக்காணியை தென்னிலங்கையைச் சேர்ந்த நபர் அபகரிப்பதைக் கண்டித்து, கிளிநொச்சி தொண்டமான்நகர் மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி ஏ9 வீதியில் தொண்டமான்நகர் பகுதியில் அமைந்துள்ள உதிரவேங்கை வைரவர் ஆலயத்துக்கு சொந்தமான காணியை கடந்த ஆண்டு தென்னிலங்கையை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலரால் அடாத்தாக காணி வழங்கப்பட்டது.

தொண்டமான்நகர் மக்கள், அமைப்புக்கள் மற்றும் கோயில் நிர்வாகம் என்பவற்றின் கருத்துக்களை அறியாமல் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

குறித்த சம்பவத்தினை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதையடுத்து, கிளிநொச்சி நீதிமன்றால் அக்காணி கோவிலுக்கு உரிமையானது என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,கடந்த 17ம் நாள் மீண்டும் கோவில் அக்காணியில் ஒரு பகுதியில் நீதிமன்றத்தையும் அவமதித்து கரைச்சி பிரதேச செயலாளரால் மீண்டும் தென்னிலங்கையை சேர்ந்த முக்கிய பிரமுகருக்கு வழங்கப்பட்டு, அந்நபர் காணியை அளந்து எல்லைக்கல் நாட்டியபோது தொண்டமான் நகர் அதை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் செய்வதென தீர்மானித்தனர்.

இன்று அபகரிப்பட்ட காணியின் முன்பாக தொண்டமான்நகர் மக்கள், பொது அமைப்புக்கள், பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் உபதலைவர், உறுப்பினர்கள், மாற்றுவலுவுள்ளோர் சங்க பிரதிநிதிகள், மாதர் அமைப்பு பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்க சம்மேளனங்களின் பிரதிநிதிகள், மக்கள் விடுதலை முன்னணியின் கிளிநொச்சி அமைப்பாளர் என பலரும் கலந்து கொண்டு காணி அபகரிப்புக்கு எதிராக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

வடமாகாண முதல்வருக்கு தொண்டமான்நகர் மக்கள் மகஜர்

கிளிநொச்சி தொண்டமான்நகர் பொதுக்காணியை தென்னிலங்கையை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் கொடுக்கும் நடவடிக்கையை கண்டித்து தொண்டமான்நகர் மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

இதன் போது வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதுடன், பா.உறுப்பினர் சி.சிறீதரன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் , கரைச்சி பிரதேச செயலர் ஆகியோருக்கு பிரதியிட்டுள்ளனர்.

அந்த மகஜரில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் வருமாறு,

மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்
முதலமைச்சர்
வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம்.
2014.07.21.

கிளிநொச்சி தொண்டமான் நகர் பொதுக்காணியை அத்துமீறி ஆக்கிரமித்தல் தொடர்பான மகஜர்

மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே!

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவில் நகரை அண்டிய பகுதியில் காணப்படும் பழமை வாய்ந்த கிராமமான தொண்டமான்நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு சொந்தமான காணியை,

2013ம் ஆண்டு தென்னிலங்கையில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரின் பின்புலத்துடன் தனியார் கம்பனி ஒன்றுக்கு கரைச்சி பிரதேச செயலர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்திற்கு முரணான வகையில் வழங்கினார்.

இதன்போது மேற்படி கிராம மக்களாகிய நாம் 2013ம் ஆண்டு 5ம் மாதம் 8ம் நாள் இக்காணி அபகரிப்புக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில்,  2014ம்ஆண்டு 4ம் மாதம் மேற்படி காணி முழுமையாக கோவிலுக்கு சொந்தமானதென தீர்ப்பளிக்கபட்டது.

ஆனால் தற்போது கடந்த 2014.07.17ம் நாள் அன்று நீதிமன்றத்தால் ஆலயத்திற்கு சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்ட காணியின் ஒருபகுதியை எமது கிராமத்தின் பொது அமைப்புக்களின் அனுமதி இன்றி கரைச்சி பிரதேச செயலாளரின் அதிகார துஸ்பிரயோகத்தை பாவித்து தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பின்புலமுள்ள தனியார் ஒருவர் அத்துமீறி அளந்து எல்லைக் கற்களை வைத்துள்ளர்.

இதுதொண்டமான் நகர் கிராம மக்களாகிய எமக்கு பெரும் கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாரம்பரிய கிராமமான தொண்டமான்நகர்  கிராமத்தின் முக்கிய பொதுத்தேவை பயன்பாடுகளான சனசமூகநிலையம், சிறார் முன்பள்ளி, ஆரம்பசுகாதார நிலையம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், அறநெறிப்பள்ளி, விளையாட்டுக் கழகம் போன்றவற்றிற்கு நிரந்தரமான காணிகள் இல்லாத நிலையில்,

இக்கிராமத்தில் உள்ள மேற்படி பொதுக்காணியை தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பின்புலமுள்ள ஒருவருக்கு வழங்குவதில் காட்டும் மிகபிரயத்தனம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் தொடர்பில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அத்தோடு அவரின் அதிகார துஸ்பிரயோக தன்மையையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. இது தொடர்பில் தொண்டமான்நகர் கிராம மக்களாகிய நாம் பலத்த அதிருப்தி அடைந்துள்ளோம்.

அத்துடன் அதிகார வர்க்கத்தில் உள்ள அதிகாரிகளின் இதுபோன்ற செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது கிராமத்துக்கு சொந்தமான பொதுக்காணிகள் எம்முடைய பொதுத்தேவைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

எனவே இவ்விடயம் தொடர்பில் தாங்கள் தங்கள் மேலான கவனத்தை செலுத்தி இக்கிராமத்துக்கு சொந்தக்காரர்களாகிய எமக்கு உரிய தீர்வை விரைந்து பெற்றுத்தருவீர்கள் என்று மிகவும் பணிவுடன் வேண்டிநிற்கின்றோம்.

நன்றி
இவ்வண்ணம்
தொண்டமான்நகர் கிராம பொதுஅமைப்புக்கள்.

TPN NEWS

SHARE