இராணுவப் புலனாய்வு ஊடகவிலாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர், அரசியல்வாதிகளே அவதானமாக இருங்கள்! (ஆசிரியர் பார்வை)

435
பேருக்குப் பின்னர் வடக்கில் சிங்கள இராணுவப் புலனாய்வாளர்களின் பாதுகாப்புக் கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கிற்கு விஜயம் செய்கின்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளும் அப்பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வருவதால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இதனை வடக்கின் முதலமைச்சர் ஜேர்மன் தூதுவரிடம் யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரியப்படுத்திய பொழுது பதிலுக்கு அவரும் தனக்கும் வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்தாகவும் தன்னுடைய நகர்வுகளையும் பாதுகாப்புத் தரப்பினர் அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்தச் செய்திக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தலால் இவ்விடயம் சிங்களப் பொலிஸாருக்கு தலைவலியைக் கொடுத்துள்ளது.
7129665c504b29b08496904b5405921f
வடக்கினைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் இராணுவக் கண்காணிப்புக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலகோணங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், இங்கு சாதாரண மக்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு விசேட இராணுவப் புலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளும் இராணுப் புலனாய்வாளர்களாலும் பொலிஸாராலும் மிகத்துல்லியமாகக் கண்காணிக்கப்படுகின்றன. இப்பணிகளில் போருக்குப் பின்னர் சிங்களத்தின் பொலிஸ் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பொலிஸாரையும் வடக்கில் இருக்கின்ற சில ஊடகவியலாளர்களையும் இணைத்துள்ளதால் இராணுவப் புலனாய்வாளர்களால் மிகஇலகுவாக காரியங்களைச் சாதிக்க முடிகின்றது.
இதேபோல் கடந்த 2009 இற்கு முன்னர் வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு கடமையாற்றிய சிலரையும் தற்பொழுது இராணுவம் 17ஆயிரத்து 500 ரூபா மாதாந்த வேதனம் கொடுத்து புலனாய்வு நடவடிக்கைளில்;; ஈடுபடுத்தியுள்ளது. இவர்களில் சிலர் வடக்கில் ஊடகத்துறையில் கடமையாற்றிவருகின்றனர். இவ்வாறு ஊடகத்துறைக்குள் இருந்துகொண்டு இராணுவப் புலனாய்வாளர்களுக்குத் துல்லியமான தகவல்களை வழங்கிவருகின்றனர். 
இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்பானவர்களின் முக்கிய சந்திப்புக்கள், மேடைப்பேச்சுக்கள், உடல்மொழிச் சமிக்ஞைகள், அந்தரங்கங்கள், குடும்ப நிலைகள் போன்ற சகலவிடயங்களும் சிங்களத்தால் பதிவுசெய்ப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சிங்களத் தேசிய இறையாண்மையை மீறிய குற்றத்திற்காக நான்காம் மாடியில் விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.
2072082480Untitled-1
இவ்வாறு சிங்களப் புலனாய்வாளர்களுக்கு தகவல்களை வழங்கிவருகின்ற இராணுவப் புலனாய்வு ஊடகவியலாளர்களில் சிலர் தமிழ் தேசியம் பேசுகின்ற தமிழ் இணையத் தங்களுக்கு சேய்திகளை வழங்குவதாகக் கூறி தமிழ் அரசியல்வாதிகளிடம் தகவலைப் பெற்று இராணுவத்திற்கு தகவல் வழங்கி வருகின்றனர்.
வேறுசில இராணுவப் புலனாய்வு ஊடகவியலாளர்கள் வன்னியில் புலிகளின் ஊடகக் கட்டமைப்பில்; கடமையாற்றியதாக ஊடக நிறுவனங்களை ஏமாற்றி தற்பொழுது ஊடகவியலாளர்களாக தம்மை உருமறைப்புச் செய்துகொண்டு தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல்காலச் செயற்பாடுகளுக்கு உதவியுள்ளனர். இவ்வாறு கூட்டமைப்பின் அரசியல்வாதிகளின் மனங்களில் இடம்பிடித்துக் கொண்ட இத்தகைய ஆசாமிகள் தற்பொழுது தமிழ்த் தேசவிரோதச் செயல்கயில் ஈடுபட்டு சிங்களத்தின் தமிழினச் சுத்திகரிப்பிற்கான பிரதான கருவியாக மாறியுள்ளனர்.
இதேபோல் சமூக மயப்படுத்தப்பட்டவர்களில் சிலர், தமிழ் பேசத்தெரிந்த சிங்களவர், வடக்கில் குடியேறியுள்ள முஸ்லீம்கள் போன்றோரும் சிங்களத்தின் புலனாய்வுக் கட்டமைப்பிற்குள் தம்மையும் இணைத்துக்கொண்டு இராணுவப் புலனாய்வு ஊடகவியலாளர்களாக  தற்பொழுது உதவிவருகின்றனர்.
இதேவேளை முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின்னர் இராணுவத்தின் புலனாய்வுக் கட்டமைப்பில் பாரிய மற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், தாயகத்திலும் புலத்திலும் தமிழீழத்திற்கான தேசியக் கொள்கையுடன் செயற்பட்டுவருகின்றவர்களை இனங்கண்டு அழிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்தில் தீவிரமான தேசியக் கொள்கையுடன் செயற்பட்டுவருகின்ற முன்னாள் ஆயுதப்போராளிகளை அகற்றி மென்போக்கு அரசியல் வாதிகளை வளர்ப்பதற்கும் சிங்களம் முயற்சிக்கின்றது.
இதனால் வடக்கில் இடம்பெறுகின்ற சகல விடயங்களும் அவதானிக்கப்பட்டு புகைப்படங்களும் காணொளிப்படங்களும் எடுக்கப்படகின்றன. இதற்கு வடக்கில் தங்களை ஊடகவியலாளர்களாக அறிமுகப்படுத்தியுள்ள இராணுவத்தின் ஒற்றர்களான இராணுவப் புலனாய்வு ஊடகவியலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இந்த ஒற்றர்கள் வழங்குகின்ற தரவுகளின் அடிப்படையில் அரசியல் வாதிகளில் சிலர் அடிக்கடி நான்காம் மாடிக்கு அழைக்கப்படுகின்றனர். இதுவே வடக்கில் தற்பொழுது பாதுகாப்பின்மையைத் தோற்றுவித்துள்ளது.
இந்த விடயத்தில் சில தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயல்களை இராணுவப் புலனாய்வு ஊடகவியலாளர்கள் சாதகமாகப் பயன்படுத்துவதால் ஏனைய தமிழ் அரசியல் வாதிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
எடுத்துக்காட்டாக, முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தங்களுடைய பிழைகளை சில ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதால் சில செய்தி நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுடன் தொடர்புகளைப் வைத்திருக்க விரும்பவில்லை. அதனால் தகவலை வெளியிடுவதற்கு இராணுவப் புலனாய்வாளர்களிடம் மாதாந்த வேதனம் பெறுகின்ற இராணுவப் புலனாய்வு ஊடகவியலாளர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள முற்படுகின்றார். இதுவும் அவருடைய அறியாமையின் வெளிப்பாடாகும். ஆனால் இதனால் அவருடைய பாதுகாப்பும் ஏனைய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்மைக்கு அவரே பொறுப்புக் கூறவேண்டியவராகவும் மற்றப்படுகின்றார் என்பதை அவர் உணர்ந்துகொள்ள வேண்டும்
இதேவேளை இத்தகைய இராணுவப் புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கு வடக்கில் இயங்கிவருகின்ற சில ஊடக நிறுவனங்களும் ஊடக அமைப்புக்களும் புலத்திலிருந்து செயற்படுகின்ற தமிழ் இணையத்தளங்களும் உதவிவருவதால் இவர்கள் தமது இலக்கினை விரைவாக அடைந்துவிடுகின்றனர்.
குறிப்பாக வடக்கில் வலுவுடன் செயற்படுகின்ற ஊடக அமைப்புக்கள் தேசிய உணர்வுள்ள மூத்த ஊடகவியலாளர்களால் வழிப்படுத்தப்படுகின்ற பொழுதிலும் தாயகத்தின் பாதுகாப்பில் சிரத்தையுடன் செயற்படத்தவறுகின்றன. இதனால் இராணுவப் புலனாய்வு ஊடகவியலாளர்கள் ஊடக அமைப்புகளை ஆக்கிரமித்து  தமக்குத் தேவையான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர்.
மேலும் வன்னிப்பகுதியைப் பொறுத்தவரையில் அங்கு இராணுவப் புலனாய்வாளர்கள் இல்லாத இடமேயில்லை என்று சொல்லுமளவிற்கு விதைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீள்குடியேறியுள்ள தமிழ் மக்களின் திருமண நிகழ்வுகளைக் கூட பதிவுசெய்து தேடுதல்களிலும் விசாரணைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
vigneswaran1
இவ்வாறு வடக்கில் புலனாய்வாளர்களின் அராஜகங்கள் தொடர்கின்;ற நிலையில் முதலமைச்சர் தனது எதிர்ப்பினை பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார். இவ்வாறு முதலமைச்சர் கூறுவது பொலிஸாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைவதால் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து முதலமைச்சரை வசைபாடியுள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் தம்மிடம் முறையிட்ட வேண்டும் எனவும் சர்வதேசத்திடம் கூறுவதால் பலனில்லை என்றும் தெரிவித்து வடக்கின் முதலமைச்சரை பொலிஸ் அதிகாரி இகழ்ந்துள்ளார்.
இவ்விடயத்திடல் இதுபோன்றதொரு கூற்றை தெற்கில் இருக்கின்ற முதலமைச்சர்களோ அல்லது ஜனாதிபதியோ கூறியிருந்தால் அக்கூற்றை இவரைப் போன்ற சாதாரண பொலிஸ் பொறுப்பதிகாரி கண்டித்திருக்க முடியுமா? அல்லது கூறியபின் அப்பொலிஸ் அதிகாரியால் கடமையில் இருக்க முடியுமா? இவ்வாறு கூறுவதற்கு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு அதிகாரமிருக்கின்றதா? போன்ற விடயங்களும் உற்றுநோக்கப்பட வேண்டியவையாகும்.
வடக்கின் முதலமைச்சரின் பாதுகாப்பு விடயத்தில் பொலிஸார் தெரிவித்துள்ள கூற்றுக்கள் தமிழ் மக்களின் பாதுகாப்பில் இந்த அரசாங்கம் எந்தளவிற்கு அக்கறை கொள்ளுகின்றது என்பதையும் தமிழருக்கு இந்த நாட்டில் எந்த எந்தவிற்குப் பாதுகாப்புள்ளது என்பதையும் வெளிக்காட்டுவதாகவுள்ளது.
எனவே வடக்கில் செயற்பட்டுவருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் இராணுவப் புலனாய்வாளர்களின் யுக்திகளை விளங்கிக் கொண்டு ஏனையவர்களின் பாதுகாப்பிலும் கரிசனையுடன் செயற்பட்டு வடக்கில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு ஊடகவியலாளர்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும். தவறின் தமிழ்த் தேசியமும், தமிழ்த் தேசிய அரசியல் வதிகளின் உயிர்களும் விரையில் சிங்களத்தால் பறிக்கப்படும் என்பதை வடக்கின் முதலமைச்சர் போன்ற வழிப்போக்கு அரசியல்வாதிகளும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்…..
-இராவணன் –
SHARE