இராணுவ ஆட்சியை நோக்கிய நகர்வுகளா?-எம்.எம்.நிலாம்டீன்

463
  download
ஈழ விடுதலைப் புலிகளை வீழ்த்திய பின்னர் புலிகளை அழித்து விட்டோம் என்ற மமதையில் இலங்கை இராணுவத்தின் அட்டகாசம் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.

வடக்கில் நாளாந்தம் சிறுமிகள் மற்றும் குடும்பப் பெண்களை சிறிலங்கா படையினர் கற்பழிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது உலகமறிந்த உண்மைகள். இவைகள் ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஆனால் இதுவரையும் வெளிவராத செய்திகளை கிழக்கின் புல்மோட்டையில் இருந்து பொத்துவில்; வரையுமான இராணுவ ரோந்துச் செய்திகளைப் பார்ப்போம்.

24 மணிநேரமும் இராணுவ ரோந்து

கிழக்கு மாகாணத்தின் புல்மோட்டையில் இருந்து பொத்துவில் வரையுமான புல்மோட்டை, நிலாவெளி, குச்சவெளி, சாம்பல்தீவு, உப்புவெளி, திருகோணமலை, வெள்ளைமணல், கிண்ணியா, மூதூர், கிளிவெட்டி. கிளிவெட்டிக்கு அடுத்த ஊர்தான் சேருநுவர அல்லது சேருவல என்ற சிங்களக் கிராமம். அங்கு எவ்விதமான இராணுவ ரோந்தும் நடப்பதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல், வாகரை, ஓட்டமாவடி, வாழைச்சேனை. கிரான், செங்கலடி, ஏறாவூர், கரடியனாறு, மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரைப்பற்றை, குருக்கள்மடம், தேற்றாத்தீவு, செட்டிபாளையம், களுவாஞ்சிக்குடி. போரதீவு, துறைநீலாவணை.

அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவண, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, கோளாவில், தம்பிலுவில், திருக்கோயில், வினாயகபுரம், தாண்டியடி, கோமாரி, பொத்துவில், உல்லை ஆகிய இடங்களில் 4 சிப்ட் முறையில் நாளாந்தம் இராணுவத்தினர் 24 மணிநேரமும் இரவு பகலாக நான்கு பேர் கொண்ட இராணுவ அணிகளாக துவிச்சக்கர வண்டிகளில் ஆயுதபாணிகளாக ரோந்து செய்து தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் மாத்திரம் இராணுவத்தினரால் மக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

புல்மோட்டை முதல் பொத்துவில் வரையுமான ஊர்களில் தமிழ் முஸ்லிம் பகுதிகளில் சகல நடவடிக்கைகள் மற்றும் இளைஞர்கள் கூடும் இடங்கள் மற்றும் அந்த மக்களின் அசைவுகள் அத்தனையும் இராணுவத்தினரால் மிகவும் அவதானமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

புல்மோட்டை தொட்டு பொத்துவில் வரையுமான சகல சந்து பொந்துகளிலும் இராணுவச் சிப்பாய்கள் 24 மணிநேரமும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகின்றது.

இவைகளைப் பார்க்கும் போது அன்னிய ஊரவர்கள் அல்லது அன்னிய நாட்டவர்கள் சிறிலங்கா என்னும் நாட்டிற்குள் அத்து மீறிக் குடியேறியுள்ளவர்கள் போன்று நடத்தப்படுகின்றார்கள்.

தமிழ் முஸ்லிம் மக்களை விசேடமாகக் கண்காணிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டுதான் நகரசபைகளை இந்த அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளது என்பது தெளிவாகின்றது.

இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர் வாசகர்கள் மற்றும் மக்கள் சற்று வீதிகளில் கவனித்தீர்களானால் வீதிகளில் 4 இராணுவச் சிப்பாய்கள் அணிவகுத்துப் போவார்கள். ஆனால் ஒரு காலத்தில் இராணுவ வாசனையே இல்லாத இப்பகுதிகளில் இவர்கள் ரோந்து செய்வது என்பதை நாம் என்னவென்று சொல்வது. என்ன செய்வது நாம் யாரை நொந்து கொள்ள முடியும்.

மக்களின் காவலர்கள் இல்லாது போனதால் வந்த வினையா தெரியல்ல. ஆனாலும் ஒருநாள் இந்த மக்களின் விடிவு காலம் மலரும் என்ற நம்பிக்கை மட்டும் தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது. நம் தேசத்தின் விடியலைத் தேடுகின்றோம்.எமது மக்களின் நிம்மதியைத் தேடுகின்றோம்.எங்கு தொலைத்தோம் என்று தெரியவில்லை.

ஆனால் தொலைந்த இடம் மட்டும் தெரிகின்றது. அந்த இடமும் இன்று ஆமிக்காரனால் நாளாந்தம் திருடப்பட்டு வருகின்றது. யார் கேட்பார்கள்? அந்த ஆமிக்கு தமிழன் என்ன முஸ்லிம் என்ன எல்லாம் ஒன்றுதான்.

கிழக்கில் கட்டிடங்கள் கட்ட முடியாது

தற்போது கிழக்கு மாகாணத்தில் யாரும் எந்தவொரு சிறிய கட்டிடமும் கட்ட முடியாது. அப்படி யாராவது ஒரு சிறிய கட்டிடம் கட்டினாலும் உடனடியாக அந்த இடத்திற்கு இராணுவத்தினர் வந்து கோவையுடன் அந்த கட்டிட உரிமையாளரை விசாரணை செய்து என்ன கட்டிடம் எதற்காகக் கட்டப்படுகின்றது பணம் ஏது யார் எங்கிருந்து அனுப்பியது கட்டிடம் கட்டுவதற்கு நகர, பிரதேச சபைகளின் அனுமதி பெறப்படுட்டுள்ளதா, குறித்த கட்டிடம் கட்டப்படும் காணிக்கு உறுதி ( டீட் ) உள்ளதா என்று இராணுவத்தினர் ஒரு திருடனை விசாரிப்பது போன்று விசாரணை என்ற வடிவத்தில் துளைத்து எடுக்கின்றனர்.

இது ஒரு வகையான மனஉளைச்சலை ஏற்படுத்த மாட்டாதா. அதனால் தமிழ் மக்கள் ஒரு சிறிய கட்டிடம் கட்ட முடியாத அவல நிலையில் உள்ளார்கள். இது கிழக்கில் பரவலாக நடைபெற்று வருகின்றது.

மற்றும் வீடுகள் கட்டுவதற்காக அல்லது ஏனைய தேவைகளுக்காக உழவு இயந்திரங்கள் மற்றும் மாட்டு வண்டிகளில் மண் ஏற்றிவர முடியாது. அதையும் இராணுவம்தான் விசாரணை செய்கின்றனர்.

காட்டிற்குச் சென்று அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்காக பிழைப்பு நடத்துவற்காக காய்ந்த விறகுகளைச் சுமந்து வரும் மிகவும் வறிய தமிழ் முஸ்லிம் மக்களைத் தடுத்து நிறுத்தி அடித்து உதைத்து அவர்களைச் சித்திரவதை செய்தும் வருகின்றனர்.

ஆனால் சிங்களப் பகுதிளில் ஹபரணை, மொனராகல, லபுகல போன்ற பகுதிகளில் சிங்கள மக்கள் பிரதான வீதிகளில் பச்சை விறகுகளை அடுக்கி வைத்துக் கொண்டு 24 மணி நேரமும் விற்பனை செய்வதை நாம் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் வடகிழக்கில் மட்டும்தான் இராணுவத்தின் அத்தனை தடைகளும் உள்ளது.

இராணுவ ஆட்சியை நோக்கிய நகர்வுகளா?

கடந்த வாரம் சிறிலங்கா இராணுவத்தின் 24 கேர்ணல்கள் பிரிகேடியர்களாக தரமுயர்த்தப்படடுள்ளார்கள். அதற்கான அனுமதியை கடந்த வாரம் ஜனாதிபதி வழங்கியுள்ளார். இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்தர் இதற்கான உத்தரவை வழங்கியதுடன் வர்த்தமானி அறிவித்தலையும் வழங்கியுள்ளார்.

இப்பதவி உயர்வுகளில் சிலருக்கு உடன் நடைமுறைக்கு வரும்படியும் சிலருக்கு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதம்களில் நடைமுறைக்கு வரும்படியும் இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்குப் பகுதியில் கடமையாற்றும் இராணுவ அதிகாரிகளுக்கே அதிகமாக இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

போருக்குப் பின்னர் அமைதியான சூழ்நிலையில் இராணுவக் கட்டமைப்பில் ஏதாவது சிக்கல்கள் அல்லது பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்கும் வகையில் இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்படடுள்ளதாகப் பார்க்கப்பட்டாலும் இதில் பல உண்மைகள் புதைந்துள்ளது எனலாம்.

ஜனாதிபதித் தேர்தல்

இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தின் பின்னர் எந்த நிமிடத்திலும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தலாம். அதாவது ஜனாதிபதியானவர் தனது பதவிக்காலமாக 4 வருடங்கள் முடிவுற்ற பின்னர் தான் விரும்பினால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்தலாம். அதற்கான திகதியைத் தெரிவு செய்து தேர்தல் செயலகத்திற்கு அறிவிக்கலாம். தெரிவிக்கலாம், தேர்தலைச் சந்திக்கலாம்.

அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்தர் இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவியேற்று 4 வருடங்களை எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் முடிகின்றது. மூன்றாவது ஜனாதிபதியாக மஹிந்தர் தான் வருவார் என்பதை ஏற்கனவே எழுதியுள்ளேன்.

ஆனாலும் மஹிந்தருக்கு ஒரு உள்ளுரப் பயம் ஒன்று உள்ளது. அதாவது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கக் கூடிய அதிக வாய்ப்புள்ளது. மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை களமிறக்கப்படுவதற்கான முஸ்தீபுகளில் கொழும்பு வாழ் தமிழர் சட்டத்தரணி தரப்பொன்று முஸ்தீவுகளில் ஈடுபட்டுள்ளது.

இப்டியாக தனக்கு வாய்ப்பாக தனது பதவிக்காக இறக்கும் வரைக்கும் நாட்டை கட்டி ஆளவேண்டும் என்று 18 வது அரசியல் சட்டதிருத்த மசோதாவைச் செய்துள்ள மஹிந்தருக்கு மூன்றாம் முறை ஜனாதிபதியாகும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் நன்றாகவே உள்ளது. அதனால் தன்னைத் தவிர வேறு யாராவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் ஒரு இராணுவ ஆட்சியொன்று பிரகடனப்பபடுத்தக் கூடிய அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

தனக்குச் சார்பாக தேர்தல் அமையவில்லையென்றால் வெளிநாட்டுச் சக்திகள் மூலமாக தனக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்து தேர்தலில் மோசடி செய்துளார்கள் என்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் செல்லுபடியாகாது என்று தேர்தல் ரத்துச் செய்யப்படலாம்.

அவ்வாறு ஒரு நிலைமை அமையுமானால் இராணுவத்தின் தேவை. சேவை மிகவும் முக்கியமானது.அதனால் அவர்களுக்கு முன்கூட்டியே பதவி உயர்வுகளை வழங்கி வைத்தால் மஹிந்தருக்கு விசுவாசமாகவும் உதவியாகவும் இருப்பார்கள்.

மறுபுறம் உள்வீட்டுப் பனிப் போர் ஒன்றினாலும் இராணுவ ஆட்சியொன்று இலங்கையில் தொக்கி நிற்கின்றது. உள்வீட்டுப் பனிப் போர் என்பது பிரதமர் பதவியைக் குறிவைத்து அந்தப் பனிப்போர் கசிந்து வருகின்றது. அந்தப் பனிப்போர் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் அந்த போர் சற்றுக் கடினமாகும். அப்போது அதுபற்றி விரிவாக ஆராய்வோம். நாம் அந்தப் பனிப்போர் சம்பந்தமாக அவதானித்து வருகின்றோம். பார்ப்போம். அதனால் ஏதோ ஒரு வகையில் சிறிலங்காவில் ஒரு இராணுவ ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கலாம்.

இராணுவ ஆக்கிரமிப்புக்கள்

வடக்கில் மட்டும்தான் மக்களின் காணிகள் பறிபோகின்றது என்று சிலர் நினைக்கலாம். அப்படியல்ல கிழக்கில் மிகவும் வேகமாக மக்களின் காணிச் சுவிகரிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றது.

அவைகள் பற்றி இன்னும் எந்தவொரு முஸ்லிம் எம்பிக்களோ அரசியல்வாதிகளோ இன்னும் வாயே திறக்கவில்லை. தமிழர்களின் காணிகள்தானே பறிபோகின்றது என்பதாலும் மறுபுறம் ஏதாவது வாய்திறந்தால் அரசாங்கம் தப்பாக நினைத்துவிடும் என்பதாலும் முஸ்லிம் எம்பிக்கள் அமைச்சர்கள் வாயே திறக்காமல் உள்ளார்கள்.

ஆனால் முஸ்லிம்களின் காணிகளும் பறிபோகின்றது. அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசம் ஒலுவில் கிராமத்தின் அஷ்ரப் நகரத்திலுள்ள முஸ்லிம் மக்களின் 69 குடும்பங்களின் குடியிருப்புக் காணிகளை அடாத்தாகப் பிடித்துக் கொண்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் லபுகல என்னும் இடத்தில் முஸ்லிம்களின் விவசாயக் காணிகளைச் சுவிகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. திருகோணமலை மாவட்டம் மொரவேவ என்னும் சிங்களக் கிராமங்களில் வசிக்கும் முஸ்லிம்களின் குடியிருப்புக் காணிகளை அரசு சுவீகரிப்பதற்காக அளவீடுகள் செய்யப்பட்டுள்ளது.

இப்படியாக முஸ்லிம்களின் காணிகள் சுவீகரிக்ககப்பட்டு வருகின்றது. இவைகள் பற்றி ஒரு வார்த்தையாவது இந்த முஸ்லிம் எம்பிக்கள் அமைச்சர்கள் பேச வேண்டாமா? அப்படியானால் எதற்காக முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதையாவது சிந்திக்க வேண்டாமா.

முஸ்லிம் எம்பிக்களின் அமைச்சர்களின் சுகபோகங்களுக்கும் அவர்களின் குடும்பங்கள் பணக்காரர்களாக வாழ்வதற்கும் ஏமாளியான முஸ்லிம் மக்கள் வாக்களிப்பது என்ன கொடுமையடா.கண்ணை மூடிக் கொண்டு குருட்டுத்தனமாக முஸ்லிம் அரசியல் வர்த்தகர்களுக்கு வாக்களிக்கும் முஸ்லிம் மக்களின் பிழையா அல்லது வாக்கு வேட்டைக்காக ஆயிரம் பொய்களையும் வேசங்களையும் சுமந்து வந்து ஏமாற்றும் அரசியல்வாதிகளின் பிழையா.

முஸ்லிம் மக்கள்தான் திருந்த வேண்டும். திரும்ப வேண்டும். முஸ்லிம்களுக்கென்று ஒரு கட்சியில்லை ஒரு தலைமையில்லை என்கின்ற போது எதற்காக வாக்களிக்க வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அல்லது மற்றக் கட்சிகள் யாராலும் முஸ்லிம் மக்கள் எந்தவொரு விமோசனமும் பெறமுடியாது என்பதை மீண்டும் மீண்டும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

ஆனால் முஸ்லிம்களும் தலைநிமிர்ந்து உரிமைகளோடு வாழ வேண்டுமென்று நினைத்தால் உரிமைக் கட்சியும் கொள்கைக் கட்சியுமான தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு முஸ்லிம் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டு அதில் முஸ்லிம்கள் உள்வாங்கப்பட்டு தேர்தலில் களமிறங்கப்பட்டால் மட்டுமே முஸ்லிம்களுக்கான விமோசனம் கிடைக்கும் என்பதை வலியுறுத்துகின்றேன்.

-எம்.எம்.நிலாம்டீன்

 

SHARE