இலங்கையில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இராணுவம் கையாண்ட போர் உத்திகளை, நைஜீரியாவில் போக்கோ ஹராம் இஸ்லாமிய ஆயுதக்குழுவை ஒடுக்குவதற்காக தாமும் ஆராய்ந்து வருவதாக நைஜீரிய பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.
இது தொடர்பில் இருநாட்டு பாதுகாப்பு உயரதிகாரிகளும் நைஜீரியாவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இரண்டு நாடுகளின் பிரச்சனைகளிலும் காணப்படும் பொதுவான ஒருமித்த இயல்புகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
போக்கோ ஹராமின் கெரில்லாத் தாக்குதல்களையும் வன்முறைகளையும் சமாளிக்க முடியாமல் நைஜீரியாவின் அரச படைகள் திணறுகின்றன.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் 200க்கும் மேற்பட்ட பள்ளிச்சிறுமிகள் கடத்தப்பட்டமை, அதன்பின்னர் நைஜீரியாவுக்கு சர்வதேசத்திடமிருந்து கிடைத்துள்ள உதவிக்கான உறுதிமொழிகளைத் தொடர்ந்து போக்கோ ஹராமின் அதிரடித் தாக்குதல்கள் ஓய்வின்றி நடந்துவருகின்றன.
இந்த சூழ்நிலையிலேயே இலங்கை மற்றும் நைஜீரியா பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நடந்துள்ளதாக நைஜீரிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இதன்போது, ஒட்டுமொத்த வளங்களையும் இராணுவத்தில் குவித்து போர் நடத்தும் (“total security”)வழிமுறை குறித்து இலங்கை அதிகாரிகள் விளக்கிக்கூறியுள்ளனர்.
‘பொதுமக்கள் உயிர்ப்பலி’
இதனிடையே, இலங்கையில் கையாளப்பட்ட இராணுவ வழிமுறைகள் நைஜீரியாவுக்குப் பொருந்தி வராது என்று பாதுகாப்பு தொடர்பான நைஜீரியப் பகுப்பாய்வாளர் டாக்டர் பாவா அப்துல்லாஹி வாஸி பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
‘நைஜீரியா பெரிய நாடு. பல ஆப்பிரிக்க நாடுகளை விட 10, 20 மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இது. எனவே அதிகளவான உயிரிழப்புகளை ஏற்படுத்திய இலங்கை இராணுவத்தின் யுத்த வழிமுறை நைஜீரியாவில் சாத்தியப்படாது’ என்றார் பாவா அப்துல்லாஹி வாஸி.
‘அப்படியான ஒரு வழியை முயற்சித்தால் நைஜீரியா முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பலைகள் அதிகரிக்கலாம். இலங்கையில் போர் முடிக்கப்பட்ட விதம் குறித்து நடக்கவுள்ள சர்வதேச விசாரணை நைஜீரியா மீதும் நடக்கலாம்’ என்றும் கூறினார் அவர்.
விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் ஒடுக்கிவிட்டபோதிலும், அந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்று சுட்டிக்காட்டிய பிபிசியின் ஆப்பிரிக்க துறை செய்தியாசிரியர் ரிச்சர்ட் ஹமில்டன், நைஜீரியாவும் இலங்கையின் வழியைக் கடைப்பிடித்தால் பெருமளவிலான மக்களை பலிகொடுக்க நேரிடலாம் என்று தெரிவித்தார்.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
BBC NEWS