இலங்கை அரசாங்கம் இந்த வகையில் சமயோசிதமாக செயற்படுமாயின் தமிழ்நாட்டிடமிருந்து இலங்கையைப் பாதுகாக்கவும் மோடி தயங்கமாட்டார்.

485
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள நரேந்திர மோடியின் அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டால் மோடி அரசு இலங்கை அரசாங்கத்தின் நண்பனாகவும் பாதுகாவலனாகவும் செயற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படுமென அரசியல் ஆய்வாளரும், முன்னாள்  ஜெனிவா மனித உரிமை பேரவையின் நிரந்தர பிரதிநிதியுமான தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை அரசாங்கம் இந்த வகையில் சமயோசிதமாக செயற்படுமாயின் தமிழ்நாட்டிடமிருந்து இலங்கையைப் பாதுகாக்கவும் மோடி தயங்கமாட்டார்.

இதேவேளை இலங்கை அரசியல் அமைப்பில் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி இந்தியா கொடுத்து வந்த அழுத்தங்கள் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியிலும் தொடரும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமக்கு எதிரியல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட சர்வதேச தமிழ் பிரிவினைவாத சக்திகள் இருக்கின்றன. இந்தப் பிரிவினைவாத சக்திகளின் சில முக்கியஸ்தர்கள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டிலும் இதேபோன்ற சக்திகள் இலங்கையில் பிரிவினைவாதத்தை தூண்டிக்கொண்டிருக்கின்றன. இது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உலகத்தில் எப்பாகத்திலுமுள்ள தமிழ் மக்களின் நலன் குறித்தும் இந்தியா கவனம் செலுத்துமென நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக இந்தியாவை ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சி ஒருபோதும் இவ்வாறு தெரிவித்ததில்லை. நரேந்திர மோடி தமிழ் மக்களை எவ்வாறு பார்க்கிறார் என்பதை இதைவைத்து தெரிந்து கொள்ளலாம்.

அவர் ஒரு பிரச்சினையை தீவிரமாக பார்க்கக்கூடிய நபர் என்பதையும், நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து அவர் பாராமுகமாக இருக்கமாட்டார் இந்தப் பிரச்சினை தொடர்பாக அவர் நியாயமானதும், தீர்க்கமானதுமான நடவடிக்கையை மேற்கொள்வார் என எதிர்பார்க்கலாம்.

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவது இனம் என்ற ரீதியில் எமது பொறுப்பாகும்.அப்படி செய்யாவிட்டால் வடக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம்.

அதை அடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் முற்பட்டால், காங்கிரஸ் அரசாங்கத்தை போல் நரேந்திர மோடியின் அரசாங்கம் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்குமென எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

 

SHARE