இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள் மீதான தமது வெற்றியின் 5வது ஆண்டு நிறைவை இன்று அனுட்டிக்கிறது.

514

இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள் மீதான தமது வெற்றியின் 5வது ஆண்டு நிறைவை இன்று அனுட்டிக்கிறது.

அதனை முன்னிட்டு பெரும் இராணுவ அணிவகுப்பு அங்கு நடந்தது. ஆனால், பல மேற்கு நாடுகளின் தூதுவர்கள் அந்த அணிவகுப்பில் கலந்துகொள்ளவில்லை.

அரசாங்கம் நல்லிணக்கத்தை நோக்கி செயற்பட வேண்டும் என்பதால், இவை பொருத்தமற்றவை என்று கனடா கூறியுள்ளது.

தோல்வியடைந்த தரப்பில் இறந்தவர்களுக்காக, தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகள் மற்றும் மத வைபவங்களுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

தமிழர்கள் அதிகமாக வாழும் வட பகுதியில் சில குறிப்பிட்ட இடங்களில் இலங்கை இராணுவம், மக்கள் நடமாட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த தினத்தை குறிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் ஒன்று கூட நடக்க முடியாமல் போனது.

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அந்த அமைப்புக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முயலுவதாலேயே இந்தத் நடவடிக்கைகள் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமே தவிர தமிழர்களுக்கு எதிரானதல்ல’ மஹிந்த

இலங்கையின் தேசியp பிரச்சினைக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாகவே தீர்வு காண முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்.

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்த ஐந்து ஆண்டு நிறைவையொட்டி இன்று மாத்தறையில் நடைபெற்ற தேசிய ரீதியிலான யுத்த வெற்றி நாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தேசியப் பிரச்சினைகளை பேச்சுவார்தை மூலம் தீர்பதற்குரிய இடம்தான் பாராளுமன்ற தெரிவுக்குழு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் சிங்களத்திலும் தமிழிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உரையாற்றினார். குறிப்பாக தமிழில் உரையாற்றிய அவர், நடைபெற்று முடிந்த யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, தமிழ் சகோதரர்களுக்கு எதிரானது அல்ல என்றும் 30 வருட பயங்கரவாதத்தினால் நாட்டில் சகல இன மக்களும் வேதனைகளை அனுபவித்தார்கள், குறிப்பாக தமிழ் மக்கள் பட்ட கஸ்டங்கள். துன்பங்கள் சொல்ல முடியாதவை என்று கூறினார்

”இந்தப் பயங்கரவாதத்திற்கு முடிவு காணப்படாமல் இருந்திருந்தால் இன்னும் பல உயிரிழப்புகளும் அழிவுகளும் ஏற்பட்டிருக்கும். வெளிநாடுகளில் தீவிரப் போக்குடைய சிலர் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க முற்படுகின்றார்கள். இந்நாட்டில் வாழும் மூவினங்களின் பாதுகாவலன் என்ற ரீதியில் இதற்கு இடமளிக்க மாட்டேன். தற்போது இலங்கை இராணுவத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்” என்று மஹிந்த ராஜபக்ஷ தனது தமிழ் மொழியிலான உரையில் குறிப்பிட்டார்.

 

SHARE