இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச உலகை ஏமாற்றி வருகிறார்!- ததேகூ தலைவர் சம்பந்தன் பேட்டி!

383

இலங்கை அரசுக்கும் எங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக நடப்பது போல இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச உலகை ஏமாற்றி வருவதாக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும் இந்திய பிரதமர் மோடி மீது நம்பிக்கை இருப்பதாகவும், தமிழ் பேசும் மக்களின் பழைய நிலைகளில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து விட்டு இலங்கை திரும்பும் வழியில், சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடைய நிலையை விளக்கினார்.

அதன் பின்னர், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய பயணம் குறித்து அவர் பேசினார்.

இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களுடைய தேசிய பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு ஏற்பட வேண்டும். அந்த தீர்வை அடைவற்கு இன்று வரை எடுக்கப்பட்ட முயற்சிகள் விஷேசமாக இந்தியாவினால் செய்யப்பட்ட பங்களிப்பு, இலங்கை அரசால் காட்டப்படும் அக்கறையற்ற நிலைமை, இதை எந்த விதமாக அணுக வேண்டும் என்பது பற்றியும் பிரதமர் மோடியிடம் சொன்னோம்.

எமது மக்களுக்கு முறையான புனர்வாழ்வு பணிகள், முறையான தொழில் வசதிகள் ஏற்படுத்தப்படாமல் பலவிதமான கஷ்டங்கள், துன்பங்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள். தமிழ் பெண்கள், குழந்தைகள் பலவிதமான நெருக்கடிகள், பலவிதமான சூழல்களை எதிர்நோக்கி வருகிறார்கள்.

வடமாகாண சபையை முறையாக இயங்காமல் அதை முடக்குவதற்கு அரசாங்கம் செய்யும் பல்வித முயற்சிகள்; வடக்கு- கிழக்கு பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை கேள்விக்குறியாக்கும் இலங்கை அரசின் செயல்பாடுகள் என்று தமிழ் பேசும் மக்கள் துயரங்கள் ஏராளம்.

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் அந்த இரண்டு மாகாணங்களும் இணைந்து ஒரு மாகாணமாக செயல்பட வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இவற்றை மீறி இலங்கை அரசு தற்போது செயல்பட்டு வருகிறது. இதை நிறைவேற்ற மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்.

மத்திய அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் ஜனாதிபதியால் பல்வேறு வாக்குறுதிகள் பல்வேறு காலகட்டங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதிகள் அடிப்படையில் 13வது அரசியல் சாசன திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.

அர்த்தபுஷ்டியான அதிகாரப்பகிர்வு ஏற்படும் வகையில் அது கட்டியெழுப்பபட வேண்டும்.

அரசியல் தீர்வு காண்பதற்கு பின்நிற்கும் இலங்கை அரசாங்கம், அதே நேரத்தில் சிங்கள மக்களை, பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மக்களை, வடக்கு- கிழக்கு பகுதிகளில் குடியேற்றுவதன் மூலமாகவும் அங்கு இராணுவ கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு அங்கே நிரந்தரமாக வசிப்பிடத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் வடக்கு- கிழக்கு பகுதியில் இனவிகிதாசாரத்தை மாற்றி அமைத்து தமிழ் பேசும் பிரதேசங்களில் மொழி ரீதியான கலாச்சார ரீதியான அடையாளங்களை மாற்றி அமைத்து அவ்விதமாக மாற்றி அமைக்கப்பட்டால் அதற்கு பிறகு ஒரு அரசியல் தீர்வு தேவையில்லை, அரசியல் தீர்வு அர்த்தமற்றது என்ற கருத்தை முன்வைக்கலாம் என்ற எண்ணத்தில் இலங்கை அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

இவை தொடருமானால், மாற்றி அமைக்க முடியாத ஒரு நிலை ஏற்படக்கூடும். இதில் இந்திய அரசு அக்கறை காட்ட வேண்டும். தமிழ் மக்கள் சொத்துக்கள் அழிக்கப்படுவது மட்டுமல்ல பல பாடசாலைகள், பல ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இப்படி பல விஷயங்களை டெல்லி விஜயத்தில் எடுத்து கூறியுள்ளோம்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், சுயமரியாதையுடன் கர்வத்துடன் நீதியின் அடிப்படையில் சமத்துவத்துடன் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இந்த அபிலாஷைகளை அந்த மக்கள் அடைவதற்கு அவர்களுக்கு அதிகாரங்கள் இருக்க வேண்டும்.

அதை அடைய 13வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவது மட்டுமல்ல அது கட்டியெழுப்பப்பட வேண்டும். அதன் மூலம் அர்த்தபுஷ்டியான அதிகாரம் பகிர்வு ஏற்பட வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்ற கருத்தை பாரத பிரதமரும், வெளிவிவகாரத்துறை அமைச்சரும் தெளிவாக கூறியிருகிறார்கள்.

பிரதமரோடு பேசும் போது பல விஷயங்கள் சம்பந்தமாக புத்திமதிகளை கூறினார். அதனையொட்டி, மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கின்றோம் என்றார்.

தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்..

இலங்கை தமிழர் பிரச்சினையில் மன்மோகன் சிங் அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கும் அணுகுமுறையில் என்ன வித்தியாசம்?

நாங்கள், இப்போது பிரதமர் மோடியை சந்திக்கும் முன்னர் டெல்லியில் முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தோம். இலங்கை அரசாங்கத்தால் உங்களுக்கு பலவிதமான வாக்குறுதிகள் தரப்பட்டன. அதுபற்றி நீங்களும் பேசி இருக்கிறீர்கள். அந்த வாக்குறுதிகள் என்னவென்பதை நீங்கள் தயவு செய்து புதிய பிரதமர் மோடிக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.

‘தான் அதை நிச்சயமாக செய்வேன்’ என்று மன்மோகன் சிங் கூறியிருக்கின்றார். நீண்டகாலமாக, முன்பிருந்த இந்திய அரசுகளுக்கு இலங்கை அரசுகள் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் அப்பொழுதெல்லாம் நிறைவேற்றவில்லை என்பதற்காக இப்போதும் நிறைவேறாது என்று நாங்கள் நினைக்கவில்லை. தற்போழுது நடைபெறலாம் என்று நினைக்கிறோம்.

பிரதமர் மோடி பதவிப்பிரமாணம் ஏற்று 24 மணி நேரத்திற்குள் ராஜபக்சேவை முதலில் சந்தித்த போது, ராஜபக்சே ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் தெளிவாக அவருக்கு சுட்டிக் காட்டி இருக்கிறார். அதை அவர் நமக்கு சொன்னார். ‘உங்களுடைய, ஜனாதிபதியை நான் சத்திய பிரமாணம் செய்த 24 மணி நேரத்திற்குள் சந்தித்தேன்.

அவருக்கு சொல்ல வேண்டியதை சொல்லி தெளிவாக உறுதியாக கூறி இருக்கிறேன்’’ என்று எங்களிடம் பிரதமர் மோடி கூறினார். ஆதலால், பழமை நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் என்று நம்புவதற்கு இடமுண்டு.

நாடாளுமன்ற தேர்வுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேராமல் 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது சாத்தியமா?

இலங்கை அரசுக்கும் எங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடப்பது போல இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே உலகை ஏமாற்றி வருகிறார். ராஜபக்சவுக்கு உடந்தையாக இருந்து எமது மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.

எங்களுடைய நிலைப்பாடு என்னவென்றால் எங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பிரதான எதிர்க்கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று நாங்கள் ஒரு தீர்வு சம்பந்தமாக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினால் அதை நிறைவேற்றுவதற்கு ஒரு வழியாக நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

நாடாளுமன்றக்குழுவுக்கு செல்லமாட்டோம் என்று நாங்கள் கூறவில்லை. இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயார். ஆனால், பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு வர வேண்டும்.

இதுதான் எங்கள் நிலைப்பாடு. நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு சென்று நாங்கள் அவர்களால் ஏமாற்றப்படுவதை எங்களுடைய மக்களுடைய பெயரில் நாங்கள் ஒருபோதும் செய்ய முடியாது. அதில் நாங்கள் மிக உறுதியாக இருக்கின்றோம்.

இது சம்பந்தமாக எங்கள் விளக்கத்தை இந்திய அரசாங்கத்துக்கு கூறி இருக்கின்றோம். சர்வதேச சமூகத்துக்கு அமெரிக்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கூறி இருக்கின்றோம். நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு செல்லும்படியாக எவரும் எங்களை வலியுறுத்த வில்லை. அவ்விதமாக வலியுறுத்தவும் மாட்டார்கள்.

வடக்கு- கிழக்கு மாகாணம் இணைப்பு தவறு என்று இலங்கை நீதிமன்றம் சொல்லியுள்ளதே?

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் சரித்திரப்பூர்வமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்படி 1988ல் இரண்டு மாகாணங்களும் ஒரு மாகாணமாக இணைக்கப்பட்டது.

ஒன்றிணைக்கப்பட்ட அந்த மாகாணம் 18 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தது. 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் போட்ட வழக்கில், சரித்திர ரீதியாக அந்த மாகாணங்களில் வாழும் மக்கள் தங்கள் கருத்தை சொல்ல வாய்ப்பு கேட்டார்கள். அனுமதி மறுக்கப்பட்டது.

நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்தது. வடக்கு- கிழக்கு இணைப்பை ஏற்படுத்திய நடைமுறையில் தவறு இருக்கிறது. அதன் காரணமாக அந்த இணைப்பு செல்லுபடியாகாது என்று தீர்ப்பு கூறப்பட்டது. இணைப்பை துண்டிப்பதற்காக வழங்கப்பட்ட கபடமான அரசியல் தீர்ப்பு அது. இணைந்த வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும். வடகிழக்கு பகுதி ஒரே மாநிலமாக இருக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருக்கிறோம்.

இலங்கை பிரதிநிதி இல்லாமல் இந்திய பிரதமரை நீங்கள் சந்தித்தது தவறு என்று இலங்கை தரப்பு சொல்கிறதே?

அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால், இந்திய பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், குஜ்ரால் மன்மோகன்சிங் ஆகியோரை ஏற்கனவே நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுடனான எந்தவொரு சந்திப்பிலும் எப்போதாவதும் ஒரு இலங்கை பிரதிநிதி இருக்கவில்லை. இப்போதும் இல்லை.

இலங்கை தமிழர் பிரச்னையில் மோடி எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை எதுவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

முதல் நடவடிக்கையை மோடி எடுத்து விட்டார். பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி வந்த போது அவரிடம் பிரதமர் மோடி, “யுத்தம் முடிந்து 5 ஆண்டு காலம் ஆன பிறகும் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதை முதலில் நிறைவேற்றுங்கள்” என்று கூறிவிட்டார்.

ஆகவே, முதல் நடவடிக்கையை மோடி எடுத்து விட்டார். அரசியல் தீர்வு ஏற்பட இலங்கை அரசோடு பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இலங்கை பிரச்னைகள் குறித்து தமிழக அரசு, டெசோ அமைப்பு மற்றும் தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் தீர்மானங்கள் நிறைவேற்றுகிறார்கள். அது உங்களுக்கு உதவியாக இருக்கிறதா?

பல்வேறு அமைப்புகளோ, தமிழக அரசோ பல்வேறு கருத்துகளை கூறலாம்; முடிவுகளை எடுக்கலாம். ஆனால், எங்களைப் பொறுத்தவரையில், இலங்கை தமிழர் பிரச்னை கூடிய விரைவில் தீர்க்கப்பட வேண்டும். பிரச்சினை தீர்க்கப்படாமல் எமது மக்கள் தொடர்ந்து தற்போது எதிர்நோக்குகின்ற இன்னல்களை, கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டி வந்தால் அது அவர்களுக்குத்தான் பெறும் பாதிப்பாக அமையும்.

தாங்கள் பிறந்த மண்ணில் நிரந்தமாக வாழ்வதற்கு இந்த பிரதேசங்களில் அமைதி ஏற்பட வேண்டும். போதிய அதிகாரங்களுடன் எமது மக்களுடைய வாழ்க்கையை செம்மைபடுத்தக்கூடிய வகையில் ஒரு ஆட்சி முறை ஏற்பட வேண்டும். நாட்டை பிரிக்கும் படியாக கேட்டு ஒரு தீர்வை நாங்கள் பெற முடியாது.

இந்திய அரசை பொறுத்தவரையில் ஒருமித்த நாட்டுக்குள் ஒரு நியாயமான நிரந்தரமான நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு தீர்வை ஏற்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அது ஒரு ஆக்கப்பூர்வமான கருத்து என்று நாங்கள் நினைக்கிறோம்.

அவ்விதமான தீர்வை உழைக்கின்றோம்; முயற்சிக்கின்றோம். அந்த அடிப்படையில்தால் இன்றைக்கு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் கூட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு ஒரு சர்வதேச விசாரணை நடைபெறுகின்றது.

ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல் தமிழ் பேசும் மக்கள் தங்கள் உரிமைகளை பெறும் வகையில் தங்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் பொருளாதாரா, சமூக, கலாச்சார, அரசியல் ரீதியாக தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் கருத்து மட்டுமல்ல இந்தியாவின் கருத்தாகவும் இருக்கிறது. அந்த கருத்தின் அடிப்படையில் நாங்கள் பெறக்கூடியதை பெறும் வகையில்தான் நாங்கள் செயல்படுவோம்.

முதல்வர் ஜெயலலிதா உள்பட வேறு கட்சி தலைவர்களை சந்திக்கும் திட்டம் உள்ளதா?

அதற்கான முன்னேற்பாடுகள் எதையும் நாங்கள் செய்யவில்லை. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பிரதமருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினேன். அவரை சந்திக்க அனுமதி கேட்டதுடன் தமிழக முதல்வரை சந்திக்கவும் அனுமதி கேட்டேன்.

அது போல தமிழக முதல்வருக்கும் வாழ்த்து கடிதம் எழுதி சந்திக்க அனுமதி கேட்டு இருந்தேன். இதுவரை அவரிடம் இருந்து அழைப்பு இல்லை. அவரை சந்திக்கவும் தயாராக இருக்கிறேன்.

– See more at: http://www.tamilwin.net/show-RUmsyJTVKUlu6.html#sthash.ehid1p4q.dpuf

SHARE