இழப்புக்களிலிருந்து மீண்டெழுந்து உரிமைகளையும் பெற்று அபிவிருத்தி காணவேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு என்றார்பிரதியமைச்சர் முரளிதரன்

540
யுத்தக் கள வெற்றிக்குப் பின்னாலிருக்கும் வேதனைகளும் வலிகளும் பட்டாசு கொளுத்தி யுத்த வெற்றியைக் கொண்டாடும் தூரத்திலிருக்கும் பார்வையாளர்களுக்குத் தெரியாது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று மாலை பனம்பொருள் கைப்பணி மாதிரிக் கிராமம் மட்டக்களப்பு மைலம்பாவெளியில் திறந்து வைக்கப்பட்டது.

அந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அரசின் ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு குடிமகனின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதும் இந்த மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக கட்டுமானங்களை மேற்கொள்வதுமாகத்தான் இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே எமது அனைத்துக் கட்டமைப்புக்களையும் பாரிய அளவில் நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம். பாதைகள், பாலங்கள், குளங்கள், பாடசாலைக் கட்டிடங்கள், வைத்தியசாலைகள் என்று எங்கு சென்று எதனைப் பார்த்தாலும் பாரிய அபிவிருத்திகள் நடந்திருக்கின்றது.

மாவட்டத்தில் இன்னும் கட்டுமான அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக 3600 மில்லியன் ரூபா நிதி கைவசமுள்ளது. இவ்வாறு கட்டுமான அபிவிருத்திகள் வளர்ச்சி கண்டு வரும்போது அதற்குச் சமாந்தரமாக ஒவ்வொருவரின் தனிநபர் அபிவிருத்தியும் வளர்ச்சி காண வேண்டும்.

இந்த இரண்டும் வளர்ச்சி கண்டால்தான் அது அபிவிருத்தி என்று பொருள்படும்.

ஒரு நவீன பாடசாலைக் கட்டிடத்தின் ஊடாக ஒரு மாணவனோ மாணவியோ கல்வியிலே சிறந்து விளங்கி முன்னேறிவிட்டார் என்றால் அது தனிநபர் வளர்ச்சி.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புதிதாக ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் கல்வி வலயம் இலங்கையிலே முதல்தரமான பெறுபேறுகளை பெறும் இடமாக கடந்த மூன்று வருடங்களாகச் சாதனை படைத்து வருகின்றது.

இதனை நாம் பாராட்ட வேண்டும். ஒரு போதும் இதனைப்பார்த்து பொறாமை கொள்ளக் கூடாது. ஆகவே இந்த மாவட்டத்திலுள்ள மக்களும் தமது பாரம்பரிய சிறுகைத்தொழில் மூலம் அபிவிருத்தி காண்பார்களாக இருந்தால் அது தனி நபர் அபிவிருத்திக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.

இதற்காகத்தான் ஒவ்வொரு அமைச்சினூடாகவும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இப்பொழுது மட்டக்களப்பு மாவட்டம் ஒரு சுற்றுலா மையமாக மாற்றமடைந்து வருகின்றது.

பாசிக்குடா சுற்றுலாப் பகுதியில் 1040 அறைகளைக் கொண்ட ஹோட்டல்கள் உள்ளன. அங்கே சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய இயற்கையான எமது பாரம்பரிய கைத்தொழில் உற்பத்திகளைச் சந்தைப்படுத்த முடியும்.

கல்வி வளர்ச்சியில் தமிழ் சமூகம் பின்னடைந்ததற்கு முக்கிய காரணம் 30 வருடங்களாக நாம் எதிர் கொண்டு சிக்கித் தவித்த கொடிய யுத்தம்தான். அந்தப் பாதிப்புக்களை நாம் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

இழப்புக்களிலிருந்து மீண்டெழுந்து உரிமைகளையும் பெற்று அபிவிருத்தி காணவேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு! இன்னுமின்னும் அழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்க முடியாது.

யுத்தக் கள வெற்றிக்குப் பின்னாலிருக்கும் வேதனைகளும் வலிகளும் பட்டாசு கொளுத்தி யுத்த வெற்றியைக் கொண்டாடும் தூரத்திலிருக்கும் பார்வையாளர்களுக்குத் தெரியாது. அதைத்தான் நகரப்புறத்தில் இருப்பவர்களும் வெளிநாட்டில் இருப்பவர்களும் செய்து கொண்டிருந்தார்கள்.

யுத்த வெற்றிக்குப் பின்னால் ஆயிரம் போராளிகள் களத்திலே மடிந்து கிடக்க மேலும் அதைவிடப் பன்மடங்கில் போராளிகள் காயம்பட்டு குற்றுயிரும் குறை உயிருமாய்க் கிடப்பர்.

இரத்த ஆறு யுத்தக் களத்திலே ஓடும். ஆனால் அந்தப் பின்னணி பட்டாசு கொளுத்தி வெற்றி கொண்டாடும் துரத்திலிருப்பவர்களுக்குத் தெரிவதில்லை. இதனால்தான் நாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோம் என்றார்.

 

SHARE