இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை

372
இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் போராளிகளுக்குமிடையே காசாவில் நடைபெற்று வரும் சண்டையில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென எகிப்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட இஸ்ரேல் குழு பாலஸ்தீனிய குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கெய்ரோ சென்றுள்ளனர். ஆனால், கடந்த வாரம் முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடியும் தருவாயில் போராளிகள் ராக்கெட் தாக்குதலை தொடங்கியதால் இஸ்ரேல் குழுவினர் பேச்சுவார்த்தையை கைவிட்டனர்.

இரு தரப்பினரும் தங்கள் கோரிக்கைகளில் பிடிவாதமாக இருப்பதால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவமும், ஹமாஸ் போராளிகளும் 72 மணி நேர போர்நிறுத்த ஒப்பந்தம் செய்ய முன்வந்ததால் அங்கு அமைதி நிலவுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரச்சினைக்கு நீண்டகால தீர்வு காணும் வகையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் மறைமுக பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கியுள்ளன. எகிப்தின் மத்தியஸ்த குழு இருதரப்பினரையும் சமாதானம் செய்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நள்ளிரவில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபிறகு ஹமாஸ் தரப்பில் இருந்து ஏவுகணைகள் வீசப்படவில்லை என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம், போர்நிறுத்தத்தை ஹமாஸ் மீறினால் நமது மக்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுக்க ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE