ஈராக்கில் உள்ள ஷியா புனித சின்னங்களைப் பாதுகாக்க உதவி: ஈரான் அதிபர் ருஹானி

439
சிரியாவில் நடைபெற்று வரும் சன்னி, ஷியா பிரிவு இனக்கலவரம் ஈராக்கிலும் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து அங்கு போராளிகளின் தாக்குதல்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. ஷியா பிரிவு ஆட்சியை எதிர்க்கும் ஐஎஸ்ஐஎல் என்ற முஸ்லிம் தீவிரவாத அமைப்பினர் மொசூல், திக்ரித் போன்ற முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் பாக்தாத்தில் நுழைய கடுமையாகப் போரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தங்களிடம் உதவி கேட்கப்பட்டால் ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கிக்கு உதவுவதாக ஈரான் அதிவர் ஹசன் ருஹானி தெரிவித்திருந்தார். பின்னர் நேற்று நடத்திய உரை ஒன்றிலும் ஈராக்கில் சண்டையிடும் பயங்கரவாதிகளை அழிக்கவும், அங்குள்ள ஷியா புனித சின்னங்களைப் பாதுகாக்கவும் ஏராளமான ஈரானியர்கள் மனுக்கள் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஈராக்கில் உள்ள ஷியா மதகுருவான கிராண்ட் அயதுல்லா அலி அல் சிஸ்டானி ஜிஹாதி போராளிகளுக்கு எதிரான தாக்குதலை மேற்கொள்ளுமாறு விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்தே இத்தகைய மனுக்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஈரானின் மக்களில் 90 சதவிகிதத்தினர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். சன்னி பிரிவைச் சேர்ந்த சர்வாதிகாரியான சதாம் ஹுசைன் ஈராக்கில் ஆட்சி புரிந்த சமயத்தில் ஷியா பிரிவினரான நூரி அல் மாலிகி ஈரானில்தான் மறைந்திருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎல் போராளிகள் ஷியா பிரிவினரை மதத்தைத் துறந்தவர்களாகக் கருதுகின்றனர். ஷியா பிரிவினரின் முக்கிய வழிபாட்டுத்தலங்களான நஜாப் மற்றும் கர்பாலா தலைநகர் பாக்தாதின் தெற்கே உள்ள கதிமியா மாவட்டத்திலும் வடக்கே உள்ள சமராவிலும் உள்ளன. பலமுறை முயன்றும் போராளிகளால் இந்த புனித இடங்களின் உள்ளே இதுவரை நுழைய முடியவில்லை. இந்த புனித சின்னங்களைப் பாதுகாக்க ஈரான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று ஈரான் அதிபர் ருஹானி இன்றும் தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

SHARE