ஈராக்கில் சிறை பிடித்த 38 இந்தியர்களை மனித கேடயமாக்க திட்டம்

457

ஈராக்கில் அமெரிக்கா படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சதாம் உசேனின் சன்னி பிரிவு முஸ்லிம் ஆட்சி வீழ்ச்சி அடைந்து ஷியா பிரிவு முஸ்லிம் ஆட்சி அமைந்தது.

புதிய அரசு சதாம் உசேன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி தூக்கில் போட்டது. இதனால் சதாம் உசேன் ஆதரவாளர்களும், அவரது படையில் இருந்தவர்களும் தீவிரவாதிகளாக மாறி ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஈராக் தீவிரவாதிகளுக்கு சிரியா தீவிரவாதிகளும் ஆதரவு அளித்து ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் கூட்டாக சேர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். சமீபத்தில் ஈராக்கின் முக்கிய நகரங்களான மொசூல், திக்ரித் ஆகியவற்றை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

அங்கு ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் மோதல் நடந்து வருவதால் உள்நாட்டுப்போர் மூண்டுள்ளது.

ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும் திக்ரித் நகரில் 46 இந்திய நர்சுகளும் சிக்கியுள்ளனர்.

அவர்களை தீவிரவாதிகள் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்து நல்ல முறையில் நடத்துவதாக இந்திய நர்சுகள் தங்கள் உறவினர்களிடம் பேசுகையில் தெரிவித்தனர்.

இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீவிரவாதிகள் இந்தியர்களை விடுவிக்க மறுத்து வருகிறார்கள். இதற்கிடையே பணய கைதிகளை மனித கேடயமாக பயன்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவின் உதவியை ஈராக் அரசாங்கம் நாடியுள்ளது. அமெரிக்க போர் கப்பல் ஈராக் அருகே கடலில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ தாக்குதலை தடுக்க தீவிரவாதிகள் இந்தியர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பணய கைதிகளை முன்நிறுத்தி அவர்களுக்கு பின்னால் தீவிரவாதிகள் செயல்படுவதால் அமெரிக்கா தாக்குதல் நடத்த தயங்கும் என்பதால் தீவிரவாதிகள் அவர்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

மொசூல் நகரில் தீவிரவாதிகள் பிடியில் இருந்த இந்திய தொழிலாளரான பஞ்சாப்பை சேர்ந்த ஹர்ஜித்சிங் அங்கிருந்து தப்பி ஈராக்கின் வடகிழக்கு பகுதியில் உள்ள எர்பில் நகரில் தஞ்சம் புகுந்துள்ளார். இது மொசூல் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது. குர்திஷ் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

எர்பில் நகரம் ஈராக்கில் இருந்தாலும் தற்போது அது குர்திஸ்தான் கட்டுப் பாட்டில் உள்ளது. குர்திஸ் தான் அதிகாரிகள் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். அங்கு வங்காள தேசத்தை சேர்ந்தவர்களும் தங்கியுள்ளனர். அவர்கள் மூலம் ஹர்ஜித்சிங் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேசினார் அப்போது தீவிரவாதிகள் இந்தியர்களை மனித கேடயமாக பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்தியர்களை ஆயுதங்கள் எடுத்துச் செல்லும் போர்ட்டர்களாக பயன்படுத்துகிறார்கள் என்றும் பாக்தாத்தில் உள்ள தூதராக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே மொசூல் நகரில் தீவிரவாதிகளிடம் சிக்கி இருந்த மேலும் ஒரு இந்தியர் தப்பி விட்டதாக தெரிய வருகிறது. அவர் ஈராக் ராணுவ முகாமில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனால் 38 இந்தியர்களை தீவிரவாதிகளிடம் பணய கைதிகளாக சிக்கியுள்ளனர்.

இவர்கள் தவிர ஈராக்கின் பல நகரங்களில் இந்தியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். உள்நாட்டு போர் நடப்பதால் அவர்கள் இந்தியா திரும்ப விரும்புகிறார்கள். ஆனால் சொந்த ஊருக்கு அனுப்ப அவர்களை பணிக்கு வைத்துள்ள நிறுவனங்கள் மறுத்து விட்டன.

இந்தியர்களின் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை நிறுவனங்கள் பறித்து வைத்துக் கொண்டுள்ளன. இதனால் இந்தியர்கள் சொந்த ஊர் திரும்ப முடிய வில்லை. எனவே சர்வதேச பொதுமன்னிப்பு விதிப்படி இந்தியர்கள் விசா, பாஸ்போர்ட் இல்லாமல் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று ஈராக் அரசுக்கு சர்வதேச அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

SHARE