ஈராக்கில் பயங்கரவாதிகளால் வேட்டையாடப்படும் யாஸிடி மைனாரிட்டிகள்

424
 ஈராக்கில் உள்ள மிகச் சிறுபான்மை, யாஸிடி இனத்தவரை, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கி அழித்து வருவதை, ஐ.நா., கண்டித்து உள்ளது. ‘மதத்தின் பெயரிலோ அல்லது இனத்தின் பெயரிலோ நடத்தப்படும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது’ என, ஐ.நா., தெரிவித்துள்ளது.

குறைந்த எண்ணிக்கை : மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், ஷியா, சன்னி ஆகிய இரு முஸ்லிம் இனத்தவர், பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, குர்து இனத்தவர் உள்ளனர். கிறிஸ்தவர்கள், யாஸிடி போன்ற மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களும் அங்கு வாழ்கின்றனர். கடந்த ஜூன் 9ல், ஈராக் மீது தாக்குதல் நடத்தி, முக்கிய நகரங்களை கைப்பற்றிய, அல் – குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கிறிஸ்த வர்களையும், பிற சிறுபான்மையினத்தவரையும் அழித்து வருகின்றனர். கட்டாயமாக மதம் மாற வற்புறுத்துகின்றனர்; மீறுபவர்களை கொன்று குவித்து வருகின்றனர். அந்த வகையில், யாஸிடி என்ற ஒன்றிரண்டு லட்சம் பேர்களை மட்டுமே கொண்ட இனத்தவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் வேட்டையாடப்படுகின்றனர். சின்ஜார் என்ற இடத்தில் வாழும் இந்த இனத்தவரை, பயங்கரவாதிகள், கொத்து கொத்தாக கொன்று குவித்து வருகின்றனர்.

ஜொராஷ்டிரிய மதத்தை பின்பற்றும் இவர்களை, பயங்கரவாதிகள், ‘பேய்களை வழிபடுபவர்கள்’ என கூறி, கொன்று குவிக்கின்றனர். இந்த இனத்தை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலானோர், பயங்கரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். பெண்கள், பயங்கரவாதிகளின் பொருட்களை சுமக்கவும், பிற தேவைகளை பூர்த்தி செய்யவும், அடிமைகளாக ஆக்கப்பட்டு ள்ளனர். அவர்களின் குழந்தைகள், ஆங்காங்கே நிராதரவாக விடப்பட்டுள்ளனர். சிலர், உயிரை காப்பாற்றிக் கொள்ள, அங்குள்ள மலைப் பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெறும் பொட்டல் காடாக இருக்கும் மலைகளில், சாப்பிட எதுவும் இல்லாமலும், குடிக்க தண்ணீர் இல்லாமலும், யாஸிடி மக்கள் இறந்து வருகின்றனர். அவர்களின் நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகள், பசியால் மடிந்து வருகின்றன.

ஐ.நா.,வின், ‘யுனிசெப்’ இதை அறிந்ததும், ஈராக் அரசிடம் தெரிவித்து, ஹெலிகாப்டர்கள் மூலம், சின்ஜார் மலைகளில் பதுங்கியுள்ள யாஸிடி மக்களுக்கு, உணவு மற்றும் தண்ணீர் பொட்டலங்களை போட்டு வருகிறது.

கண்ணீர் விட்டு கதறல் : இந்த தகவல்களை, ஈராக் பார்லிமென்டில் தெரிவித்த, இந்த இனத்தவரின் பெண் பிரதிநிதி, வியான் தாகில், கண்ணீர் விட்டு கதறி அழுதார். ‘இன்னும் ஒரு சில நாட்களில் எங்கள் இனமே அழிந்து விடும்; காப்பாற்றுங்கள்’ என, அவர் கெஞ்சினார்.

இதற்கிடையே, யாஸிடி மக்களை வேட்டையாடும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு, ஐ.நா., நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், ‘இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் நடத்தப்படும் தாக்குதல்களை, ஏற்றுக் கொள்ள முடியாது. தவறிழைப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்’ என, தெரிவிக்கப்பட்டது.

 

SHARE