ஈராக்கில் 1-ந் திகதிக்குள் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க கெடு: ஷியா முஸ்லிம் மத குரு அதிரடி

446
ஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் தாக்குதல்களாலும், தொடர் வெற்றிகளாலும் பிரதமர் நூரி அல் மாலிக்கி தலைமையிலான ஷியா முஸ்லிம் அரசு தத்தளித்து வருகிறது. போராளிகளை எதிர்கொள்ள முடியாமல் அரசு படைகள் பின்வாங்கி வருகின்றன. போராளிகள் மீது தாக்குதல் நடத்துமாறு பிரதமர் நூரி அல் மாலிக்கி கேட்டுக்கொண்டபோதும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இதில் அதிரடி நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வருகிறார். ஈராக்கில் புதிய அரசை அமைக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிலையாக உள்ளது.

ஒபாமா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு சென்ற அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி, ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கியை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஈராக்கில் ஷியா, சன்னி, குர்திஷ் என அனைத்துத் தரப்பினரையும் கொண்ட ஒன்றுபட்ட அரசை அமைக்க வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கினார். அவரிடம் ஜூலை 1-ந் திகதிக்குள் அனைத்துத் தரப்பினரையும் கொண்ட அரசு அமைக்கப்படும் என பிரதமர் நூரி அல் மாலிக்கி உறுதி அளித்தார்.

அதற்கு ஏற்ற வகையில் முதல் கட்ட நடவடிக்கையாக ஜூலை 1-ந் திகதி பாராளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. புதிய பிரதமரை ஏகமனதாக தேர்வுசெய்ய நடந்த ஷியா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், பாக்தாத்தில் ஷியா முஸ்லிம் மத குரு அயோத்துல்லா அலி சிஸ்தானி, ஈராக் தலைவர்களுடன் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை நடத்தினார். இவருக்கு ஈராக்கில் மட்டுமல்ல, எல்லைக்கு அப்பாலும் ஷியா முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது. அவர் வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக ஈராக்கில் புதிய பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர், ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்.

ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்குப் பின்னர் பிரதமர் பதவி ஷியா முஸ்லிம் பிரிவினருக்கும், பாராளுமன்ற சபாநாயகர் பதவி சன்னி முஸ்லிம் பிரிவினருக்கும், அதிகாரமற்ற அலங்கார பதவியான அதிபர் பதவி குர்திஷ் இனத்தவருக்கும் வழங்கப்பட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மத குரு அயோத்துல்லா அலி சிஸ்தானியின் கெடு பிரதமர் நூரி அல் மாலிக்கிக்கு கிடுக்கிப்பிடியாக அமைந்துள்ளது. அவர் இடைக்கால அரசின் பிரதமராக தொடர முடியாத சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அவர் அனைத்து பிரிவினரையும் கொண்ட தேசிய அரசை அமைத்து, தன் பதவியை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஆனால் அனைத்து பிரிவினரையும் கொண்ட அரசை அமைப்பதில் நூரி அல் மாலிக்கிக்கு ஆர்வம் இல்லை.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நூரி அல் மாலிக்கியின் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், அவர் மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சன்னி முஸ்லிம் போராளிகள் கை ஓங்கி விட்டதால், அவரது பிடி தளர்ந்து விட்டது. 8 ஆண்டு காலமாக நடந்து வந்த அவரது ஆட்சி முடிவுக்கு வரும் நிலையை எட்டி உள்ளது.

SHARE