ஈராக் புதிய பிரதமர் வீடு அருகே தற்கொலைத் தாக்குதல்

366
கடந்த 2006-2007ஆம் ஆண்டுகளில் ஈராக்கில் இனக்கலவரங்கள் அதிகரித்துக் காணப்பட்டபோது அமெரிக்கா தலையிட்டு ஷியா பிரிவினரான நூரி அல் மாலிகியைப் பிரதமராக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. இருப்பினும், அங்குள்ள சன்னி, குர்து இன மக்களை அன்னியப்படுத்தும்விதமாக அதிகாரங்களைத் தனதாக்கிக்கொண்ட பிரதமரின் நடவடிக்கை அங்கு மீண்டும் இனக்கலவரங்களைத் தோற்றுவித்துள்ளது.

இதனால் கடந்த ஏப்ரல் மாத பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றிகளைப் பெற்றுள்ளபோதிலும் ஈராக்கின் புதிய பிரதமராக தற்போதைய துணை சபாநாயகர் ஹைதர் அல் இபாதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாலிகி போல் சர்வாதிகார மனப்பான்மை இல்லாமல் மிதவாதியாக இவர் அறியப்படுகின்றார். இந்த நியமனம் குறித்து மாலிகி தனது கண்டனங்களைத் தெரிவித்தபோதிலும் தனது பாதுகாப்புப் படையினரை தற்போது அரசியலில் இருந்து விலகியிருக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பாக்தாத்தில் புதிய பிரதமரின் வீட்டிற்கு அருகில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் நேற்று தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக உள்ளூர் மீடியாவும், இரண்டு காவல்துறைத் தரப்புகளும் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பலியானவர்கள் பற்றிய விபரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதுபோல் தாங்கள் ஒரு அலுவலகக் கூட்டத்தில் இருந்ததாகத் தெரிவித்த பிரதமர் அலுவலக அதிகாரிகளும் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்று கூறப்படுகின்றது.

SHARE