உக்ரைன் கிழக்கு பகுதியில் போர்நிறுத்தம் 3 நாள் நீட்டிப்பு

434
உக்ரைனின் கிழக்கு பகுதியான டன்ட்ஸ்க்கை சுயாட்சி பிரதேசமாக அறிவிக்க வேண்டும் அல்லது ரஷியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி, ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நடந்து வரும் இந்த உள்நாட்டு போரில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதைத்தொடர்ந்து அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் படி அப்பகுதியில் கடந்த 27-ந்திகதி வரை போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் உக்ரைன் அரசு ஐரோப்பிய யூனியனுடன் நேற்று முன்தினம் கூட்டாண்மை உடன்பாடு செய்துகொண்டது. இதைத்தொடர்ந்து இந்த போர்நிறுத்தத்தை உக்ரைன் அரசு மேலும் 72 மணி நேரம் (3 நாட்கள்) நீட்டித்துள்ளது. அதன்படி நாளை இரவு 10 மணிவரை இந்த போர்நிறுத்தம் அமலில் இருக்கும்.

இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள எல்லைச்சாவடிகளை உக்ரைன் அரசிடம் ஒப்படைப்பது, உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோவின் அமைதி திட்டத்தை அமல்படுத்துவது, பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்டவற்றுக்காக, கிளர்ச்சியாளர்களுக்கு ஐரோப்பிய யூனியன் விதித்திருந்த காலக்கெடுவும் நாளைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE