உயிரிழந்த யுவதி கர்ப்பப்பை புற்றுநோயாலேயே உயிரிழந்திருந்ததாக அங்கு ஊடகவியலாளர்கள் முன்னிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி சாட்சியமளித்தார்.

387
Ajanthya_CI
இலங்கை இராணுவத்தில் அண்மையில் இணைந்திருந்து மரணமடைந்த தமிழ் யுவதியின் மரணம் தொடர்பில் குடும்பத்தவர்களிடையே பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அவசர அவசரமாக படைத்தரப்பு பத்திரிகையாளர் மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடத்தியுள்ளது.

ஓட்டுசுட்டான் செல்வபுரத்தில் பிறந்த பிரசாத் அஜந்தா (வயது 22) என்பவரே படையில் இணைந்து பலாலியில் ஆயதப்பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை நோய்வாய்ப்பட்டதாக கூறி யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார். பின்னர் அவரது சடலம் குடும்பத்தவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே அவரது மரணம் தொடர்பில் பல கதைகள் பேசப்பட்டு வந்திருந்த நிலையில் படையில் வறுமை காரணமாக இணைந்து கொண்ட யுவதிகளது குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன.தமது பிள்ளைகளது நலன்களை அறிவதில் முனைப்பு காட்டியிருந்தன.

இதையடுத்தே யாழ்.நகரிலுள்ள படையினரின் சிவில் பாதுகாப்பு அலுவலகத்தினில் அவசர பத்திரிகையாளர் மாநாடு இன்று மாலை நடத்தப்பட்டிருந்தது. படை அதிகாரிகளுடன் யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானியும் அங்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

உயிரிழந்த யுவதி கர்ப்பப்பை புற்றுநோயாலேயே உயிரிழந்திருந்ததாக அங்கு ஊடகவியலாளர்கள் முன்னிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி சாட்சியமளித்தார். குறித்த பெண்ணினது பிறப்புறுப்பு அதனாலேயே பாதிக்கப்;பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே குறுக்கிட்ட ஊடகவியலாளர் ஒருவர் அவ்வாறு புற்றுநோய் தொற்றுக்குள்ளாக கூறுகின்ற இவரை கடந்த மே மாதமே இராணுவப்பயிற்சிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டதே அது சரியாவென கேள்வி எழுப்பியிருந்தார்.அதற்கு அவசரப்பட்டு பதிலளித்த யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி அது தவறு வைத்திய பரிசோதனையில் இது கண்டறியப்பட்டிருக்க முடியுமென தெரிவித்திருந்தார். எனினும் பின்னர் அருகாக இருந்த படை அதிகாரிகளது முக கடுகடுப்பை கண்டு அவசரப்பட்டு உளறிவிட்டோமேவென வாயை இழுத்து ஊடகவியலாளர்கள் முன்னிலையினில் கைகளால் பொத்திக்கொண்டிருந்தார்.

6 வயதேயான ஓரு பெண் குழந்தையின் தாயாரான இவரது சடலம் இராணுவத்தினரால் அவசர அவசரமாக எடுத்து செல்லப்பட்டு பொன்னகர் இந்து மயாணத்தில் தகனம் செய்யப்பட்டிருந்தது. நல்ல சுகதேகியாக இருக்குமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டதாக கூறி அனுமதிக்கப்பட்டு ஒரிரு நாளினில் உயிரிழந்திருப்பதென்பதாக கூறப்படுவது விஞ்ஞான அதிசயமே என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE