உயிர் அச்சுறுத்தல்’: யாழ் பல்கலை. ஆசிரியர்கள் போராட்டம்:-

501

'உயிர் அச்சுறுத்தல்': யாழ் பல்கலை. ஆசிரியர்கள் போராட்டம்:-

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் மாணவர் பிரதிநிதிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளமைக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியுள்ளனர்.
இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
இந்த அச்சுறுத்தல்கள் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் திருக்குமரன் கூறினார்.

இதற்கு முன்னரும் பெயர் குறிப்பிட்டு இத்தகைய உயிர் அச்சுறுத்தல்கள் வெளியிடப்பட்டிருந்தனால் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் நாட்டை விட்டே வெளியேறிவிட்டதாக தெரிவித்த திருக்குமரன், ‘உயிர் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அது பல்கலைக்கழகத்தையும் சமூகத்தையும் நாட்டையும் பாதிப்பதாக அமையும்’ என்றும் குறிப்பிட்டார்.
யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் முள்ளிவாய்க்கால் சம்பவங்களை நினைவுகூரும் திகதியை உள்ளடக்கி, யாழ். பல்கலைக்கழகம் இம்மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் மூடப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் சுரொட்டியின் மூலம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் அனாமதேய துண்டுப் பிரசுரங்கள் யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒட்டப்பட்டும் வீசப்பட்டும் இருந்தன.
இதனையடுத்து ஏற்பட்டிருந்த பதற்றமான ஒரு சூழ்நிலையிலேயே இன்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஆசிரியர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBC

 

SHARE