‘‘மீண்டும் ‘பார்முக்கு’ திரும்பிய யுவராஜ் சிங், உலகத்தரம் வாய்ந்த இந்திய வீரர்,’’ என, பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லி பாராட்டு தெரிவித்தார்.
இந்திய அணியின் ‘ஒல்–ரவுண்டர்’ யுவராஜ் சிங். இவர், சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில், 21 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். இதனால் இந்திய அணியின் தோல்விக்கு யுவராஜ் சிங் தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. பின், 7வது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் அதிகபட்சமாக ரூ. 14 கோடிக்கு பெங்களூரு அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கேற்ப சமீபத்தில் பெங்களூருவில் நடந்த டில்லி அணிக்கு எதிரான போட்டியில், 19 பந்தில் 9 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 68 ரன்கள் எடுத்தார்.
இதுகுறித்து பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோஹ்லி கூறியது: யுவராஜ் சிங் மீண்டும் பழைய ‘போர்முக்கு’ திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்திய உலக கோப்பை (டுவென்டி–20) செயல்பாட்டை வைத்து, இவர் மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு, ஐ.பி.எல்., போட்டிகள் மூலம் பதிலடி கொடுத்தார். தனிநபராக அசத்திய இவர், இரண்டு முறை இந்திய அணி உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். உலத்தரம் வாய்ந்த வீரரான இவர், இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது சிறப்பு. சிறந்த ‘ஆல்–ரவுண்டரான’ இவர், சரியான நேரத்தில் பெங்களூரு அணியில் இணைந்தது, வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இதேபோல பெங்களூர் அணியின் வெற்றிக்கு டிவிலியர்ஸ், கெய்ல் உள்ளிட்ட மற்ற வீரர்களின் பங்களிப்பும் முக்கிய பங்குவகிக்கிறது. அணி நிர்வாகத்தின் ஆலோசனைப்படி பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்தோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. துவக்க வீரராக களமிறங்குவதி்ல் எவ்வித பிரச்னையும் இல்லை. இதேபோல கேப்டனாக செயல்படுவதால், எனது பேட்டிங்கில் எவ்வித பாதிப்பும் இருப்பதாக தெரியவில்லை. கடந்த ஆண்டு கேப்டனாக இருந்த போது 680 ரன்கள் எடுத்தேன்.
இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.