உலகின் அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் பணத்திற்காக தமிழர்களின் உயிரையும் உரிமைகளையும் பலி கொடுப்பதில் போட்டி போட்டு செயல்படுகின்றன

411

உலகின் ஊடகங்கள் பணத்திற்காக உண்மையை மறைக்கின்றன என்றால் , தமிழ் அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் பணத்திற்காக தமிழர்களின் உயிரையும் உரிமைகளையும் பலி கொடுப்பதில் போட்டி போட்டு செயல்படுகின்றன. தமிழரின் அழிவே முதல் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் சில நாளிதழ்கள் பணத்திற்காக தமிழரின் அழிவை கண்டு கொள்ளாமல் இருக்க பேரம் பேசும் முன்னணி தொலைக்காட்சி வரை இன்று தமிழர் ஊடகம் எதுவும் தமிழர் நலன் சார்ந்து இல்லை.
தமிழர் நலனுக்காவே ஆரம்பிக்கப்பட்ட சில தமிழ் நாளிதழ்கள் கூட இன்று தமிழர் வாழ்வை விற்று பிழைக்கும் நிறுவனங்களாக மாறி விட்டன .2009 ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை உலகிற்கு கொண்டு செல்லாமல் மறைத்ததில் தமிழ் ஊடகங்களின் பங்கு மிகப் பெரியது
பின் 1993ம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் மே 3ம் திகதி உலக ஊடக சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டது.
ஓவ்வொரு ஆண்டும் இத்தினத்தில் ஊடக சுதந்திரத்தில் பெரும் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு யுனெஸ்கோ நிறுவனம் ‘கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது’ என்ற விருதை வழங்கி வைக்கிறது. இவ்விருதானது கொலம்பிய பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாஸாவின் நினைவாக வழங்கப்படுகிறது. இவர் 1986 டிசம்பர் 17ம் திகதி தனது அலுவலகம் முன்பாக வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோர்டான், சின்னர் டோன் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஆள் கடத்தல்கள், ஆட்கள் காணாமல் போனது குறித்து அவர்கள் ஆராய விரும்பினர். ஆனால், விமானநிலையத்தில் இறங்கியதுமே அவர்கள் ராணுவத்தால் உடனடியாகத் தடுக்கப்பட்டு வலுக்கட்டாயமாக அந்த நாள் இரவை ராணுவ முகத்தில் கழிக்க வேண்டியிருந்தது. மறுநாள் அவர்கள் மீண்டும் கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்’
இலங்கையில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்கள், ஊடகப் பணியாளர்கள்
இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்களின் கூற்றுப்படி பார்த்தால், இந்த காலகட்டத்தில் இலங்கையில் 44 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவை தவிர, கைதுகள், தடுத்து வைப்புகள், தாக்குதல்கள், பயமுறுத்தல்கள், மிரட்டல்கள், துன்புறுத்தல்கள், தொல்லைக் கொடுத்தல்கள் போன்றவைகளும் நடந்திருக்கின்றன.
1. பெயர் : ஐயாதுரை நடேசன்
தொழில் : பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 31 மே, 2004, மட்டக்களப்பு
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர் ஸ்ரீலங்கா தமிழ் மீடியா கூட்டணியின் துணைத்தலைவர். வீரகேசரி செய்தித்தாளில் பத்தி எழுதுபவராகவும் பணி புரிந்தவர்.
2. பெயர் : கந்தசாமி ஐயர் பாலநடராஜா
தொழில் : பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 16 ஆகஸ்ட், 2004, கொழும்பு
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர் ஈ.பி.டி.பி. அமைப்பின் ஊடக செயலாளராக பணிபுரிந்தவர். அந்த குழுவின் அதிகாரபூர்வ பத்திரிகையான தினமுரசு இதழிலும் இவர் வேலை பார்த்தவர்.
3. பெயர் : லங்கா ஜெயசுந்தெரா
தொழில் : நிழல்பட பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 11 டிசம்பர், 2004, கொழும்பு
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர் விஜயா செய்தித்தாள்களில் புகைப்பட பத்திரிகையாளராகப் பணிபுரிந்தவர். கொழும்பு நகரின் முன்னாள் குதிரைப்பந்தய திடலில் அமைந்த திறந்தவெளி அரங்கில், நடந்த இசைநிகழ்ச்சியின்போது கை குண்டு வெடிப்பில் இவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு இலங்கையின் வலதுசாரி அரசியல் அமைப்பான ஜாதிக்க ஹெல உறுமய அமைபுடன் நெருங்கிய தொடர்புள்ள ஒரு சிங்கள தீவிரவாத அமைப்பே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
4. பெயர் : தர்மரத்தினம் சிவராம் (தராகி)
தொழில் : பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 28 ஏப்ரல், 2005, கொழும்பு
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர் தமிழ்நெட் இணைய தளத்தின் மூத்த ஆசிரியர் ஆவார். டெய்லி மிரர், வீரகேசரி போன்ற நாளிதழ்களில் வாரந்தோறும் இவர் பத்திகளை எழுதி வந்தார். ஆயுதம் தாங்கியவர்களால் கொழும்பில் இவர் கடத்தப்பட்டார். மறுநாள் நாடாளுமன்றம் அருகே இவரது உடல் கண்டெடுக்கப் பட்டது. இலங்கை ராணுவ உளவுப்பிரிவினருடன் இணைந்து பணியாற்றும் துணை ராணுவப் படையினரால் திட்டமிட்டு இவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு, ‘தராகி என்னும் தர்மரத்தினம் சிவராமை மிகத்திறமை வாய்ந்த பத்திரிகையாளர்’ என்று வர்ணிக்கிறது. இலங்கையில் நிலவி வந்த ராணுவ, அரசியல் சூழலை எவ்வித சமரசமும் இன்றி இவர் விமர்சித்து எழுதியதால் படுகொலை செய்யப்பட்டார்.
5. பெயர் : கண்ணமுத்து அரசகுமார்
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 29 ஜூன், 2005, மடுபொல (கல்முனை-அக்கரைப்பற்று சாலை)
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர் கிழக்குப் பிராந்தியத்தின் செய்தித்தாள் முகவராக வேலை செய்தவர். படுகொலைக்கு முன், மட்டக்களப்பு பதிப்பான ஈழநாதம் செய்தித் தாளை விநியோகம் செய்யக்கூடாது என்று இவர் மிரட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
6. பெயர் : ரேலங்கி செல்வராஜா
தொழில் : பத்திரிகையாளர்
கொலை செய்யப்பட்டது : 12 ஆகஸ்ட், 2005, கொழும்பு
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், அரசு நடத்தும் மீடியா அமைப்பின் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி வழங்குநராக வேலை பார்த்தவர். கணவருடன் சேர்த்து இவர் கொல்லப்பட்டார். அரசுக்குச் சொந்தமான எஸ்.எல்.பி.சி. நிறுவனத்தில் ஈ.பி.டி.பி. அமைப்பின் நிதியூட்டத்துடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இதய வீணை என்ற வானொலி நிகழ்ச்சியை இவர் தயாரித்து வழங்கியவர்.
7. பெயர் : டேவிட் செல்வரட்னம்
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 29 ஆகஸ்ட், 2005, கொழும்பு
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர் தமிழ் ஆதரவு நாளிதழான சுடர் ஒளி ஏட்டின் பாதுகாவல் அலுவலராக பணிபுரிந்தவர். அடையாளம் தெரியாத சிலரால் நாளிதழ் அலுவலகத்தின் மீது இரண்டு கையெறி குண்டுகள் வீசப்பட்டு நடந்த தாக்குதலின் போது இவர் உயிரிழந்தார்.
8. பெயர் : யோககுமார் கிருஷ்ணப்பிள்ளை
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 30 செப்டம்பர், 2005, மட்டக்களப்பு
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், மட்டக்களப்பு பதிப்பு ஈழநாதம் செய்தித் தாளின் விநியோகஸ்தராக இருந்தவர். பலமுறை தொடர்ச்சியாக மிரட்டப்பட்டவர். இவர் கொல்லப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினர், கிழக்கில் உள்ள அதன் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஈழநாதம் செய்தித்தாளின் விற்பனையைத் தடுத்து வைத்திருந்தனர்.
9. பெயர் : எல்.எம். ஃபலீல்
தொழில் : எழுத்தாளர்
கொலை செய்யப்பட்டது : 02 டிசம்பர், 2005, மட்டக்களப்பு
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் டிவிசனல் செயலராகப் பணியாற்றியவர். இவரது அலுவலகத்துக்குள் புகுந்து அடையாளம் தெரியாத ஆட்கள் சுட்டதில் இவர் கொல்லப்பட்டார்.
10. பெயர் : கே. நவரட்னம்
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 22 டிசம்பர், 2005, யாழ்ப்பாணம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், யாழ்ப்பாணத்தில் பகுதிநேரமாக செய்தித்தாள் விநியோகம் செய்தவர். யாழ்ப்பாணப் பதிப்பான தினக்குரல் நாளிதழ்களைச் சேகரிக்கச் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
11. பெயர் : சுப்பிரமணியம் சுகிர்தராஜன்
தொழில் : பத்திரிகையாளர்
கொலை செய்யப்பட்டது : 24 ஜனவரி, 2006, திருகோணமலை
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், சுடர் ஒளி நாளிதழின் திருகோணமலைச் சிறப்புச் செய்தியாளராக வேலை பார்த்தவர். திருகோணமலையில் 2006, ஜனவரி 2ஆம்தேதி , ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்டதில் இலங்கை ராணுவத்தின் பங்கு வெட்டவெளிச்சமானது. அதில் இவரது பங்கு முதன்மையானது.
12. பெயர் : எஸ்.டி.கணநாதன்
தொழில் : தமிழ் செய்திகள் மற்றும் தகவல் மையத்தின் புரவலர்
கொலை செய்யப்பட்டது : 01 பிப்ரவரி, 2006, யாழ்ப்பாணம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், யாழ்ப்பாணம் அரியாலை பகுதி, மாம்பழம் சந்தியில் உள்ள ராணுவ முகாமுக்கு மிக அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
13. பெயர் : பஸ்தியான் ஜார்ஜ் சகாயதாஸ் (சுரேஷ்)
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 03 மே, 2006, யாழ்ப்பாணம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், யாழ்ப்பாண நாளேடான உதயன் இதழின் விநியோக மேலாளராக பணிபுரிந்தவர். ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேர், உலக பத்திரிகை சுதந்திர நாளன்று ஆயுதங்களுடன் வந்து இவரது அலுவலகத்தைத் தாக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் இவரும், இன்னொரு ஊழியரும் பலியானார்கள்.
14. பெயர் : ராஜரட்னம் ரஞ்சித்குமார்
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 03 மே, 2006, யாழ்ப்பாணம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், யாழ்ப்பாண நாளிதழான உதயன் ஏட்டின் விநியோக கண்காணிப்பாளராக இருந்தவர். உலக பத்திரிகை சுதந்திர நாளன்று, ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேர், ஆயுதங்களுடன் வந்து இவரது அலுவலகத்தைத் தாக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் இவரும், இன்னொரு ஊழியரும் பலியானார்கள்.
15. பெயர் : சம்பத் லக்மல் டி சில்வா
தொழில் : பத்திரிகையாளர்
கொலை செய்யப்பட்டது : 02 ஜூலை, 2006, கொழும்பு
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், சிங்கள மொழி நாளிதழ்களான இருதின, லக்பிம, சத்தினா போன்ற ஏடுகளில், பாதுகாப்புத்துறை சிறப்புச் செய்தியாளராக , அலுவலக ஊழியராக இன்றி வெளியில் இருந்து வேலை பார்த்தவர். இலங்கை உளவுப்பிரிவின் உறுப்பினர் என்று கருதப்படும் ஒருவரால் இவர் வீட்டில் இருந்து வெளியே அழைக்கப்பட்டு கைத்துப்பாக்கியால் மிக அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
16. பெயர் : மரியதாசன் மனோஜன்ராஜ்
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 27 ஜூலை, 2006, யாழ்ப்பாணம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், யாழ் தினக்குரல், வீரகேசரி தமிழ் நாளிதழ்களின் யாழ்ப்பாண விநியோகஸ்தராக இருந்தவர். விநியோகத்துக்காக இவர் செய்தித் தாள்களைச் சேகரிக்கச் சென்றவழியில், கிளேமோர் கண்ணிவெடி வெடித்து உயிரிழந்தார்.
17. பெயர் : சதாசிவம் பாஸ்கரன்
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 15 ஆகஸ்ட், 2006, யாழ்ப்பாணம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், செய்தித்தாள் முகவராகவும், உதயன் நாளிதழ் விநியோக ஓட்டுநராகவும் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் புதூர் சந்தி அருகே இலங்கை ராணுவத்தினர் வேன் மீது சுட்டதில் இவர் பலியானார்.
18. பெயர் : சின்னத்தம்பி சிவமகராஜா
தொழில் : நாளிதழ் உரிமையாளர்
கொலை செய்யப்பட்டது : 20 ஆகஸ்ட், 2006, யாழ்ப்பாணம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், யாழ்ப்பாண தமிழ் நாளிதழான நமது ஈழநாடு செய்தி ஏட்டின் நிர்வாக மேலாளர் ஆவார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் ராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயம் எனக் கருதப்படும் பகுதியில் அமைந்த இவரது இருப்பிடத்தின் உள்ளே இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
19. பெயர் : எஸ். ரவீந்திரன்
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 12 பிப்ரவரி, 2007, யாழ்ப்பாணம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், யாழ்ப்பாண தமிழ் நாளிதழான நமது ஈழநாடு செய்தி ஏட்டின் அச்சு இயந்திர ஊழியராக வேலை பார்த்தவர். யாழ்ப்பாணம் கோபாய் பகுதியில் அமைந்த இவரது வீட்டினுள்ளே அடையாளம் தெரியாதவர்கள் புகுந்து இவரைச் சுட்டுக் கொன்றார்கள்.
20. பெயர் : சுப்பிரமணியம் ராமச்சந்திரன்
தொழில் : பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 15 பிப்ரவரி, 2007, யாழ்ப்பாணம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், யாழ். வடமராட்சிப் பகுதியில் யாழ் தினக்குரல், வலம்புரி ஆகிய இருவேறு நாளிதழ்களுக்குச் சிறப்புச் செய்தியாளராக பணி புரிந்தவர். ராணுவத்தினர் அதிகம் செறிந்த, வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் ஆயுதம் தாங்கிய சிலரால் கடத்தப்பட்டு இவர் கொல்லப்பட்டார்.
21. பெயர் : சந்திரபோஸ் சுதாகர்
தொழில் : பத்திரிகையாளர்
கொலை செய்யப்பட்டது : 16 ஏப்ரல், 2007, வவுனியா
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், ஈழநாதம், வெளிச்சம், ஈழநாடு, நிலம், காலச்சுவடு, வீரகேசரி போன்ற பல்வேறு இதழ்களுக்கு தொடர்ந்து செய்திகள், கட்டுரைகள் வழங்குபவராக இருந்தார். நிலம் என்ற பெயரில் இவர் கையெழுத்துப் பிரதி ஒன்றையும் நடத்தி வந்தார். வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இவரது வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நால்வரால் இவர் கொல்லப்பட்டார்.
22. பெயர் : செல்வராசா ராஜிவர்மன்
தொழில் : பத்திரிகையாளர்
கொலை செய்யப்பட்டது : 29 ஏப்ரல், 2007, யாழ்ப்பாணம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : யாழ்ப்பாணம் உதயன் தமிழ் நாளிதழில் பயிற்சி ஊழியராக இவர் பணிபுரிந்தவர். அதற்கு முன்னதாக தினக்குரல், நமது ஈழநாடு இதழ்களுடன் இணைந்து வேலை பார்த்தவர். யாழ்ப்பாணம், நாவலர் சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த கொலையாளிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
23. பெயர் : சகாதேவன் நிலக்சன்
தொழில் : பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 01 ஆகஸ்ட், 2007, யாழ்ப்பாணம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வு மற்றும் பயிற்சி மையத்தில் பயின்ற ஊடக மாணவர் ஆவார். கூடவே இவர் பகுதிநேர பத்திரிக்கையாளராகவும் பணிசெய்து வந்தார். யாழ்ப்பாண மாவட்ட மாணவர் கூட்டமைப்பின் வெளியீடு ஒன்றின் ஆசிரியர்களில் ஒருவராகவும் இவர் இருந்தார். இருசக்கர வாகனத்தில் வந்தவர்களால் வீட்டின் முன் இவர் சுட்டுக் கொல்லப் பட்டார்.
24. பெயர் : அந்தோணிப்பிள்ளை ஷெரின் சித்திரஞ்சன்
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 05 நவம்பர், 2007, யாழ்ப்பாணம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர் யாழ்ப்பாண தமிழ் நாளிதழான யாழ் தினக்குரலின் விநியோக முகவராக இருந்தவர். நாளிதழ்களை விநியோகிக்கச் சென்ற வழியில் இவர் காணாமல் போனார்.
25. பெயர் : வடிவேலு நிர்மலராஜன்
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 17 நவம்பர், 2007, யாழ்ப்பாணம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : யாழ்ப்பாண தமிழ் நாளிதழான உதயனில் பிழை திருத்துநராக இவர் பணியாற்றியவர். நாளிதழ் அலுவலகத்தில் இரவுப்பணி முடித்து வீடு திரும்பும் போது இவர் காணாமல் போனார்.
26. பெயர் : இசைவிழி செம்பியன் (சுபாஜினி)
தொழில் : பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 27 நவம்பர், 2007, கிளிநொச்சி
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர் தமிழ்ப்போராளிகளின் வானொலி நிலையமான ‘புலிகளின் குரல்’ வானொலியில் நிகழ்ச்சி வழங்குபவராக பணிசெய்தவர். இந்த வானொலி நிலையத்தின் மீது நடந்த கொடூரமான விமானத் தாக்குதலில் இவர் பலியானார். இந்த தாக்குதலுக்கு யுனெஸ்கோ, எல்லைகளைக் கடந்த செய்தியாளர் அமைப்பு போன்றவை கண்டனம் தெரிவித்திருந்தன.
27. பெயர் : சுரேஷ் லிம்பியோ
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 27 நவம்பர், 2007, கிளிநொச்சி
கூடுதல் கருத்துக்குறிப்பு : புலிகள் குரல் வானொலியில் தொழில்நுட்ப அலுவலராக இவர் வேலை பார்த்தவர். இலங்கை விமானப்படையின் தாக்குதலில இவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலை யுனெஸ்கோ, எல்லைகளைக் கடந்த செய்தியாளர் அமைப்பு போன்றவை கண்டித்தன.
28. பெயர் : டி. தர்மலிங்கம்
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 27 நவம்பர், 2007, கிளிநொச்சி
கூடுதல் கருத்துக்குறிப்பு : புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்தவர். இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் இவர் உயிர்துறந்தார். இந்த கொடூரத் தாக்குதலுக்கு யுனெஸ்கோ, எல்லைகளைக் கடந்த செய்தியாளர் அமைப்பு போன்றவை கண்டனம் தெரிவித்தன.
29. பெயர் : டபிள்யூ. குணசிங்கே
தொழில் : பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 05 டிசம்பர், 2007, கெப்பிட்டிகொலாவ.
கூடுதல் கருத்துக்குறிப்பு : சிங்கள நாளிதழான திவைனா ஏட்டின் பிராந்திய சிறப்புச் செய்தியாளராக இவர் பணியாற்றி வந்தார். வடமத்திய மாகாணம், கெப்பிட்டிகொலாவ பகுதியில் பயணிகள் பேருந்து மீது நடந்த சாலையோர குண்டுத் தாக்குதல் ஒன்றில் இவர் கொல்லப்பட்டார்.
30. பெயர் : பரணிரூபசிங்கம் தேவகுமார்
தொழில் : பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 28 மே, 2007, யாழ்ப்பாணம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : சக்தி தொலைக்காட்சியின் யாழ். சிறப்புச் செய்தியாளர் இவர். அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பிராந்திய அலுவலகத்தின் தலைவராகவும் இவர் செயல்பட்டு வந்தார். பணி முடிந்து வீடு திரும்பியபோது ஆயுதம் தரித்த கும்பலால் கடத்தப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டார்.
31. பெயர் : முகமத் ரஸ்மி மகரூப்
தொழில் : பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 06 அக்டோபர், 2008, அநுராதபுரம்
கூடுதல் கருத்துக்குறிப்பு : சிரச தொலைக்காட்சியின் பிராந்திய சிறப்புச் செய்தியாளராக இவர் பணி புரிந்தவர்.
32. பெயர் : ரசியா ஜெய்ந்திரன்
தொழில் : பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : அக்டோபர், 2008, (தேதி கிடைக்கவில்லை)
கூடுதல் கருத்துக்குறிப்பு : ஈழநாதம் தமிழ் நாளிதழின் உதவி ஆசிரியராக முன்பு இவர் பணியாற்றியவர். மன்னார் பகுதியில் இலங்கை ராணுவத்தால் திட்டமிட்டு வழியமைக்கப்பட்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.
33. பெயர் : லசந்தா விக்கிரமதுங்கே
தொழில் : பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 09 ஜனவரி, 2009, கொழும்பு
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர் ஆங்கில வார ஏடான தி சண்டே லீடரின் நிறுவன முதன்மை ஆசிரியர் ஆவார். இவர் கொழும்பு நகரின் சுறுசுறுப்பான ஒரு வீதியில், பட்டப்பகலில், நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த எட்டு கொலையாளிகளால் வழிமறித்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை, தலைநகரத்தின் உயர் பாதுகாப்புப் பகுதியில் நடந்தது. ராணுவ விமானநிலையம், விமானப்படைத்தளம் போன்றவை அமைந்திருந்த இடத்துக்கு மிக அருகில் இந்தப் படுகொலை நடந்தது.
34. பெயர் : புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி
தொழில் : பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 12 பிப்ரவரி, 2009, தேவிபுரம், முல்லைத்தீவு
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர், ஈழநாதம், வெளிநாதம், ஈழமுரசு, வெளிச்சம் போன்ற பல்வேறு தமிழ் ஏடுகளுக்கு எழுத்துக்கள் மூலம் பங்களிப்பு செய்து வந்தவர். சிலபல வானொலி நிலைறயங்களுக்கும் இவர் பங்களிப்பு செய்திருக்கிறார். அரசால் பாதுகாப்பு பகுதி என அறிவிக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்தபோது ராணுவ குண்டுவீச்சில் இவர் படுகாயமடைந்தார். பின்னர் காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.
35. பெயர் : சசி மதன்
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 05 மார்ச், 2009, முல்லைத்தீவு
கூடுதல் கருத்துக்குறிப்பு : முல்லைத்தீவு பகுதியில் இவர் ஈழநாதம் தமிழ் நாளிதழை விநியோகித்து வந்தவர். இரணைப்பாலை பகுதியில் செய்தித்தாள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை ராணுவத்தின் மார்ட்டர் எறிகணை வீச்சில் இவர் பலியானார்.
36. பெயர் : மகாலிங்கம் மகேஸ்வரன்
தொழில் : ஊடகப் பணியாளர் / பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 13 மார்ச், 2009, முல்லைத்தீவு
கூடுதல் கருத்துக்குறிப்பு : முல்லைத்தீவு மாவட்டத்தில் ஈழநாதம் செய்திஏட்டு விநியோகத்தை இவர் ஒருங்கிணைத்து வந்தவர். அதே நாளிதழில் இவர் செய்தியாளராகவும் பணியாற்றி வந்தார். பொக்கணைப் பகுதியில் சிங்கள ராணுவத்தின் மார்ட்டர் தாக்குதலில் இவர் உயிரிழந்தார்.
37. பெயர் : அன்றன்
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : மார்ச், 2009, முல்லைத்தீவு (தேதி கிடைக்கவில்லை)
கூடுதல் கருத்துக்குறிப்பு : ஈழநாதம் நாளிதழின் விநியோகஸ்தர் இவர். இரணைப்பாலை பகுதியில் இவர் செய்தித்தாள் விநியோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது முன்னேறி வந்த இலங்கை ராணுவத்தின் மார்ட்டர் தாக்குதலில் பலியானார். போரின் இறுதிநாட்களில் இவரது ஒட்டுமொத்த குடும்பமும் பலியானதாக தகவல் வெளியானது.
38. பெயர் : ராஜ்குமார் டென்சே
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 09 ஏப்ரல், 2009, முல்லைத்தீவு
கூடுதல் கருத்துக்குறிப்பு : கணினி வரைகலை வடிவமைப்பாளரான இவர் ஈழநாதம் தமிழ் நாளிதழில் பணிபுரிந்துரு வந்தார். இலங்கை ராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் பொக்கணைப் பகுதியில் கணவருடன் இவர் உயிரிழந்தார்.
39. பெயர் : ஜெயராஜா சுசித்ரா (சுகந்தன்)
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 25 ஏப்ரல், 2009, முல்லைத்தீவு
கூடுதல் கருத்துக்குறிப்பு : ஈழநாதம் நாளிதழின் அச்சு இயந்திரம் இயக்குபவராக இவர் பணிபுரிந்தவர். வலைஞர்மடம் பகுதியில் இலங்கை ராணுவத்தின் குறிபார்த்து சுடும் படையினர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
40. பெயர் : மாரியப்பு அந்தோணிகுமார்
தொழில் : ஊடகப் பணியாளர் / பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 14 மே, 2009, முல்லைத்தீவு
கூடுதல் கருத்துக்குறிப்பு : நாளிதழ் விநியோகிப்பாளராகவும், கடை உரிமையாளராகவும் இருந்த இவர், ஈழநாதம் தமிழ் நாளிதழின் செய்தியாளராகவும் பணியாற்றினார். போரின் இறுதிநாட்கள் வரை உயிர்வாழ்ந்த இவர், முள்ளிவாய்க்கால் பகுதி பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வர முயன்றபோது ராணுவத்தின் ஆர்.பி.ஜி. தாக்குதலில் கொல்லப்பட்டார்.
41. பெயர் : துரைசிங்கம் தர்ஷன்
தொழில் : ஊடகப் பணியாளர்
கொலை செய்யப்பட்டது : 14 மே, 2009, முல்லைத்தீவு
கூடுதல் கருத்துக்குறிப்பு : ஈழநாதம் நாளிதழின் கணினி வரைகலை வடிவமைப்பாளராக இவர் வேலை பார்த்தார். போரின் இறுதிநாட்களின்போது முள்ளிவாய்க்கால் பகுதி பதுங்கு இருப்பிடத்தில் இருந்து இவர் வெளியே வர முயன்றபோது, இன்னொரு ஊடகப்பணியாளருடன் சேர்ந்து இவர் ராணுவத்தின் ஆர்.பி.ஜி. தாக்குதலில் பலியானார்.
42. பெயர் : இசைப்பிரியா
தொழில் : பத்திரிக்கையாளர்
கொலை செய்யப்பட்டது : 18 மே, 2009, முல்லைத்தீவு
கூடுதல் கருத்துக்குறிப்பு : தமிழ்ப்போராளிகளின் தொலைக்காட்சி நிலையத்தில் இவர் நிகழ்ச்சிகளை வழங்குபவராகப் பணியாற்றியவர். போரின் இறுதிக்கட்டத்தின் போது இவர் ராணுவத்திடம் சரணடைந்தவர். எனினும் இவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அதன்பின் படுகொலை செய்யப்பட்டதாக பலரால் நம்பும் நிலை ஏற்பட்டது. இதற்கான புகைப்பட ஆதாரங்கள் பின்னர் வெளிவந்தன.
43. பெயர் : திருகுலசிங்கம் தவபாலன்
தொழில் : பத்திரிக்கையாளர் / அரசியல் செயற்பாட்டாளர்
கொலை செய்யப்பட்டது : மே, 2009, (தேதியை உறுதிப்படுத்த முடியவில்லை) முல்லைத்தீவு
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர் போராளிகளின் வானொலி நிலையத்தில் சேவையாற்றியவர். திறமை மிக்க புகைப்படக்காரராக அறியப்பட்டவர். போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த இவர், படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இவரது வாழ்வின் இறுதிக் கணங்கள் பற்றி எதுவும் தெரியவில்லை. உறுதிப்படுத்த முடியவில்லை.
44. பெயர் : பிரகீத் எக்னெலிகொட
தொழில் : பத்திரிக்கையாளர் / அரசியல் செயற்பாட்டாளர்
கொலை செய்யப்பட்டது : 24 ஜனவரி, 2010, கொழும்பு
கூடுதல் கருத்துக்குறிப்பு : இவர் லங்கா இ நியூஸ் என்ற இணையதளத்தில் கேலிச்சித்திர ஓவியராகவும், அரசியல் விமர்சகராகவும் பணிபுரிந்தவர். வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் இவர் காணாமல் போனதாக அறிவிக்கப் பட்டது.
இலங்கையில் இருந்து செயல்படும் சுதந்திர ஊடக இயக்கம் (FMM) எனப்படும் ஃபிரீ மீடியா மூவ்மெண்ட் அமைப்பு ‘பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடந்த குற்றச் செயல்களுக்காக ஒரே ஒருவர் கூட குற்றவாளியாக்கப்படவில்லை’ என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது.
‘இலங்கை அரசு எதிர்ப்புக்குரல் எழுப்புபவர்களையும், சுதந்திர ஊடகத்தையும் படுகொலை செய்கிறது‘
‘குற்றங்கள் செய்துவிட்டு அதற்கு தண்டனை எதுவுமின்றி தப்புவதே, நீண்ட பல ஆண்டுகளாக உள்ள ஒரு பிரச்சினை’ என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார். ‘அவர்கள் எப்போதுமே விசாரணை செய்யப் போவதாகச் சொல்வார்கள். ஆனால் எதுவுமே நடக்காது’
அமெரிக்க அரசுத்துறை இந்த கொலைகளைக் கண்டிக்கிறது. இலங்கை அரசின் விசாரணையை வேண்டுகிறது.
– டைம்ஸ் இதழ்
ஜனவரி 26, 2009
ஓவ்வொரு ஆண்டும் இத்தினத்தில் ஊடக சுதந்திரத்தில் பெரும் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு யுனெஸ்கோ நிறுவனம் ‘கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது’ என்ற விருதை வழங்கி வைக்கிறது. இவ்விருதானது கொலம்பிய பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாஸாவின் நினைவாக வழங்கப்படுகிறது. இவர் 1986 டிசம்பர் 17ம் திகதி தனது அலுவலகம் முன்பாக வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையை பொறுத்த வரையில் பத்திரிகை சுதந்திரம் என்பது வாய்ப்பேச்சளவில் கூட இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு சம்பவம் நடந்தால் அச்சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உண்மையை ஆராய்ந்து ஆதாரங்களை திரட்டி அதன்பின் செய்தியை வெளியிடுவதே ஊடக தர்மமாகும். அந்நிலையானது இலங்கையில் பெரும்பாலும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஆட்சியாளர்களின் அடக்குமுறையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மாத்திரமே எவ்வித இச்சுறுத்தலும் இன்றி இயங்க முடிகிறது. அது தமிழ் ஊடகங்கள் என்றாலும் சரி சிங்கள ஊடகங்கள் என்றாலும் சரி.
போர்காலங்களில் யுத்தம் நடைபெற்ற இடங்களுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. யுத்தம் முடிந்த பிறகும் வடக்கு கிழக்கில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத ஒரு பயங்கர நிலையே காணப்பட்டது. ஈழத்து ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டதும் கடத்தி படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்தன.
இலங்கையின் ஊடக அடக்குமுறையின் கறைபடிந்த வரலாறானது 1990ம் ஆண்டு ஊடகவியலாளர் ரிச்சேட் டி சொய்சா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கிறது என குறிப்பிடலாம். அதன் பின் தமிழ் நெற் இணையத்தினுடைய ஆசிரியராக இருந்த தமிழ் ஊடகவியலாளர் தராகி சிவராம் 28 ஏப்ரல் 2005 அன்று கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அங்கிருந்து கொலைபட்டியல் நீண்டு கொண்டு வருகிறது.
இன்றுவரை அந்த வரிசையில் திருகோணமலை மாணவர்களின் படுகொலையை அம்பலப்படுத்திய உதயன் சுடர்ஒளி பத்திரிகை ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுஜிதராஜ் கொலை செய்யப்பட்டார். பின்னர் 2006ம் ஆண்டு உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்த சிலர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இருவரை சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் ஈழத்தின் மிகப்பெரும் ஊடகப்படுகொலை என வர்ணிக்கப்பட்டது.
யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் ஊடக சுதந்திரம் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்பதை கார்டுன் கலைஞரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்கினியாககொட காணாமல் போன சம்பவம் உணர்த்தியது. அச்சம்பவத்திலும் கூட ஊடகவியலாளர் பிரகீத் எக்கினியாககொட தானாகவே காணாமல் போனதாகவும் அவர் யாராலும் கடத்தப்படவில்லை என்றும் அரசாங்கத்தால் அறிக்கையிடப்பட்டது.
2009 ஐனவரி 08ம் திகதி சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கா இனந்தெரியாதோரால் கொல்லப்பட்டார். ஆனால் அவர் இறப்பதற்கு முன் தான் கொலை செய்யப்படலாம் என்று முன்கூட்டியே தெரிவித்திருந்தார் (“When finally I am killed, it will be the government that kills me.” – Lasantha Wickrematunge, Editor of the Sunday Leader”) என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தினமின பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் பொட்டல ஜயந்த கடத்தப்பட்டு தாக்கப்பட்டு வீசப்பட்டிருந்தார். அதனால் அவர் உயிர் பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறினார். உயிராபத்தின் காரணமான பல தமிழ் ஊடகவியலாளர்களும் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் தஞ்சமடைந்தனர். அவ்வாறு வெளியேறிய ஊடகவியலாளர்கள் சிலர் தாம் குடியேறிய நாடுகளின் ஊடகத்துறையில் இணைந்து பணியாற்றினார்கள்.
அதன்பின்னர் சிங்கள தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிறுவனமான சியந்த குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது. சொல்லப்போனால் மக்கள் அரசுக்கெதிரான செய்திகளை அறியாமல் இருக்க மேற்கொள்ளப்பட்ட உத்திகளே இவை. மேலும் பிபிசி இலங்கை வானொலி ஊடாக ஒலிபரப்பப்பட்ட போதும் அது பல தடவைகள் தடைப்படுத்தப்பட்டது. பிபிசி தமிழ் சேவையில் அரசாங்கம் பற்றி விமர்சிக்கும் செய்திகளை ஒலிபரப்பும் போது அது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக வேறு இசை ஒளிபரப்பப்பட்டது. பிபிசி சிங்கள சேவை அடிக்கடி தடைபட்டது. முக்கியமாக ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் அரசுக்கு சார்பாக இயங்க நிர்பந்திக்கப்பட்டார்கள்.
இலங்கை ஊடகவரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் 2010 ஆண்டு ஊடக சுதந்திர தினமான மே 3ம் திகதி விடுதலை செய்யப்பட்டதாகும். ஆனால் அதற்கு காரணம் அமெரிக்க அதிபர் இலங்கையில் ஊடக ஒடுக்குமுறை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட திஸ்ஸநாயகம் சுட்டிக்காட்டியிருந்தமையாகும்.
இச்சம்பவம் இலங்கையின் கறைபடிந்த ஊடக அடக்குமுறையை மறைப்பதற்காகும். எது எப்படியாயினும் நீதிக்காக தமது இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க முடிந்தும் கூட அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது ஊடகம் மீதான அடக்குமுறையை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.
இரணியன்
SHARE