உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் அமேசானுக்கு முதலிடம்

115

சர்வதேச அளவில் பெரும் நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்யும் ‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ அமைப்பு வெளியிட்ட ‘குளோபல் 500’ அறிக்கையின் படி அப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவனம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை கணக்கிட்டு மதிப்புமிக்க முதல் 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அப்பிள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 16 சதவீதம் குறைந்து 297.5 பில்லியன் அமெரிக்க டொலருடன் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டு 2 ஆம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 7 சதவீதம் மட்டுமே குறைந்து 299.3 பில்லியன் அமெரிக்க டொலருடன் முதலிடத்தைப் பிடித்தது.

அமேசானின் வாடிக்கையாளர் சேவை குறித்து மக்களின் கருத்து மாறியிருப்பதும், பொருள்களை விநியோகிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதும், அமேசான் சேவையை மற்றவர்களுக்கு வாடிக்கையாளர்கள் பரிந்துரைப்பது குறைந்தது உள்ளிட்ட காரணிகள் அமேசான் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு குறைய காரணமாகும்.

முதலிடத்தை இழந்துள்ள அப்பிள் நிறுவனத்தைப் பொருத்த வரை விநியோகச் சங்கிலி சீர்குலைந்து ஏற்பட்ட தட்டுப்பாடு, தொழிலாளர் சந்தையில் ஏற்பட்ட பிரச்சினைகள் உள்ளிட்டவை 16 சதவீத சரிவுக்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 50 தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில் ‘ட்விட்டர்’ மற்றும் ‘ஸ்னெப் சாட்’ நிறுவனங்கள் தற்போது பட்டியலில் இடம்பெறவில்லை.

‘பிராண்ட் ஃபைனான்ஸ் குளோபல் 500’ பட்டியலில் இடம்பெற்ற முதல் 10 நிறுவனங்கள் : நிறுவனம் 2023 மதிப்பு கடந்த ஆண்டு மதிப்பு சரிவு/ஏற்றம் (%)

1. அமேசான் 299.3 பில்லியன் டொலர் 350.3 பில்லியன் டொலர் 7% சரிவு
2. அப்பிள் 297.5 பில்லியன் டொலர் 355.1 பில்லியன் டொலர் 16% சரிவு
3. கூகுள் 281.4 பில்லியன் டொலர் 263.4 பில்லியன் டொலர் 7% ஏற்றம்
4. மைக்ரோசொஃப்ட் 191.6 பில்லியன் டொலர்184.2 பில்லியன் டொலர் 4% ஏற்றம்
5. வோல்மார்ட் 113.8 பில்லியன் டொலர் 111.9 பில்லியன் டொலர் 2% ஏற்றம்
6. சாம்சங் 99.7 பில்லியன் டொலர் 107.3 பில்லியன் டொலர் 7% சரிவு
7. ஐ.சி.பி.சி. 69.5 பில்லியன் டொலர் 75.1 பில்லியன் டொலர் 7% சரிவு
8. வெரிஸோன் 67.4 பில்லியன் டொலர் 69.6 பில்லியன் டொலர் 3% சரிவு
9. டெஸ்லா 66.2 பில்லியன் டொலர் 46 பில்லியன் டொலர் 44% ஏற்றம்
10. டிக்டொக் 65.7 பில்லியன் டொலர் 59 பில்லியன் டொலர் 11% ஏற்றம்

சர்வதேச தரப்பட்டியலின் முதல் 100 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த பாரம்பரியமிக்க ‘டாடா நிறுவனம்’ மட்டுமே இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் 78 ஆம் இடத்தில் இருந்த டாடா நிறுவனம் தற்போது 69 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்தாண்டின் 158 ஆவது இடத்திலிருந்தது. தற்போது 150 ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் இருந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 84 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE