உலக கோப்பை கால்பந்து: காலிறுதி ஆட்டம் 4-ந்திகதி தொடக்கம்

493

20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலில் கடந்த மாதம் 12–ந்திகதி தொடங்கியது.

இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்றன. 26–ந்திகதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.

‘லீக்’ முடிவில் பிரேசில், மெக்சிகோ, நெதர்லாந்து, சிலி, கொலம்பியா, கிரீஸ், கோஸ்டாரிகா, உருகுவே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, நைஜீரியா, ஜெர்மனி, அமெரிக்கா, பெல்ஜியம், அல்ஜீரியா ஆகிய 16 நாடுகள் 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியன் ஸ்பெயின், முன்னாள் சாம்பியன்கள் இத்தாலி, இங்கிலாந்து மற்றும் போர்ச்சுக்கல், கானா, குரோஷியா, கேமரூன், ஆஸ்திரேலியா, ஐவேரி கோஸ்ட், ஜப்பான், ஈக்வடார், ஹோண்டுராஸ், போஸ்னியா, ஈரான், ரஷியா, தென்கொரியா ஆகிய நாடுகள் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டன.

2–வது சுற்று ஆட்டங்கள் கடந்த 28–ந்திகதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன.

இதன் முடிவில் பிரேசில், கொலம்பியா, நெதர்லாந்து, கோஸ்டாரிகா, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, பெல்ஜியம் ஆகிய 8 நாடுகள் கால்இறுதியில் நுழைந்தன. முன்னாள் சாம்பியன் உருகுவே, சிலி, மெக்சிகோ, கிரீஸ், நைஜீரியா, அல்ஜீரியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் 2–வது சுற்றில் தோற்றன.

இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். 4–ந்திகதி கால் இறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது. அன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனி– பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில்– கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

5–ந்திகதி நடைபெறும் கால் இறுதியில் அர்ஜென்டினா– பெல்ஜியம் (இரவு 9.30 மணிக்கு) நெதர்லாந்து– கோஸ்டாரிகா (நள்ளிரவு 1.30) அணிகள் மோதுகின்றன.

8 மற்றும் 9–ந்திகதிகளில் அரை இறுதி ஆட்டங்களும், 12–ந்திகதி 3–வது இடத்துக்கான ஆட்டமும், 13–ந்தேதி இறுதிப்போட்டியும் நடக்கிறது.

SHARE