ஊவா தேர்தல் பிரசாரப்பணிகள் யாவும் இன்று நள்ளிரவுடன் பூர்த்தி

325

ஊவாமாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து பிரசாரப்பணிகளும் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைகின்றன. எதிர்வரும் 20ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்கள் தமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பாக சிந்தித்து தீர்மானமொன்றை எடுப்பதற்காக கால அவகாசத்தை வழங்குவதற்காகவே 48 மணிநேரத்திற்கு முன்னதாக அனைத்து பிரசாரப் பணிகளும் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரசார பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் அலங்காரங்கள் அனைத்தையும் 17ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின் அகற்றுமாறு சகல அரசியல் கட்சிகளைச் சார்ந்த அபேட்சகர்களிடமும் ஆதரவாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனைப் பரீட்சிப்பதற்காக பொலிஸார், தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நாளை வியாழக்கிழமை பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு செல்லவிருப்பதாகவும் 19ஆம் திகதி வௌ்ளிக்கிழமை முற்பகலுடன் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகங்களும் அகற்றப்பட வேண்டும் எனவும் தவறினால் அவற்றை அகற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் இறுதித் தினத்தில் நடைபெற்றதாக கூறியோ அல்லது தாமதமாக கிடைக்கப்பெற்றதாக காரணம் காட்டியோ அரசியல் கட்சிகளினதோ அல்லது சுயேட்சை நபர்களினதோ அறிக்கைகள், அரசியல் நோக்கம் வாய்ந்த செய்திகள், வர்த்தக விளம்பரங்கள் ஆகியவற்றை ஊடகங்களில் பிரசுரிப்பதும் சட்டவிரோதமானதெனவும் அது தொடர்பாக அனைத்து ஊடகங்களும் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் தேர்தல்கள் திணைக்களம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் ஆளும், எதிர்தரப்பு அரசியல் கட்சிகளின் இறுதி பிரசாரக்கூட்டங்கள் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இடம்பெற உள்ளன. ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு.மு. இறுதித் தேர்தல் பிரசார கூட்டம் பதுளை வெல்லவாயவிலும் மொனராகலை மாவட்டத்திலும் நடைபெறுவதோடு ஐ.தே.க.வின் இறுதிப் பிரசார கூட்டம் ஐ.தே.க. தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்திலும்  ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இறுதிப்பிரசாரக் கூட்டம் பண்டாரவளையிலும் ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க பங்கேற்ற இறுதிப்பிரசாரக் கூட்டம் நேற்று பாதுளையில் நடைபெற்றதோடு இன்றைய தினம் பதுளை மற்றும் மொனராகலையிலும் முக்கிய பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

சுமார் 12,500 அரசாங்க உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளதோடு தேர்தல் நடவடிக்கைக்களுக்காக பாடசாலைகள் 19ஆம் திகதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண சபைக்கு பதுளை மாவட்டத்தில் இருந்து 18 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 609,966 வாக்காளர்களும் மொனராகலை மாவட்டத்திலிருந்து 14 உறுப்பினர்களை தெரிவு செய்தவற்காக 332,764 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

SHARE