எகிப்தின் முன்னாள் ராணுவத் தளபதி சிசி அதிபர் தேர்தலில் வெற்றி

467
எகிப்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்திவந்த ஹோஸ்னி முபாரக்கை இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் துணையுடன் கடந்த 2012ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து இறக்கிய முகமது மோர்சி அதிபர் பதவியை கைப்பற்றினார். ஆனால் ஒரு வருடம் கூட ஆட்சி நடத்த முடியாத நிலையில் இவருக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் அந்நாட்டு ராணுவம் இவரைக் கைது செய்து காவலில் வைத்தது. இவருக்குத் துணையாக இருந்த முஸ்லிம் இயக்கமும் ராணுவத்தால் பெரிதும் ஒடுக்கப்பட்டது.

இத்தகைய நடவடிக்கைகளால் கொந்தளிப்பும், வன்முறையும் நிறைந்து காணப்பட்ட அங்கு கடந்த மாதம் இறுதியில் அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் தனது ராணுவத் தளபதி பதவியைத் துறந்த பீல்ட் மார்ஷல் பட்டா அல் சிசி அதிபர் வேட்பாளராக களத்தில் இறங்கினார். அவருக்கு எதிராக ஹம்தீன் சபஹி என்ற இடதுசாரி வேட்பாளர் ஒருவர் மட்டுமே போட்டியிட்டார்.

குறிப்பிட்டபடி கடந்த மாதம் 25 ஆம் தேதி அங்கு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பெரும்பான்மையானோரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப சிசி 23.78 மில்லியன் அதாவது 96.9 சதவிகித வோட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து நின்ற சபஹிக்கு 3 சதவிகித வாக்குகள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானவுடன் கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி வாணவேடிக்கை கொண்டாட்டங்களுடன் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ராணுவ சார்புடைய பாடல்களைப் பாடினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE