அவுஸ்திரேலிய செய்தியாளர் பீற்றர் கிரெஸ்தே உள்ளிட்ட மூன்று செய்தியாளர்களுக்கு எகிப்திய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. தவறான செய்திகளைப் பரப்பினார்கள் என்பதும், தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு உதவி செய்தார்கள் என்பதும் மூவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் கிரெஸ்தேயிற்கு ஏழு வருடகால சிறைத்தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். அவருடன் அல்ஜெஸீரா செய்தி ஸ்தபானத்திற்காக வேலை செய்த பஹர் மொகம்மத் என்பவருக்கு பத்து வருடகாலமும், மொஹம்மட் ஃபவுமி என்பவருக்கு ஏழு வருடகாலமும் சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டன. தீர்ப்பினால் ஆத்திரமடைந்த கிரஸ்தே இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சமயத்தில், கிரெஸ்தே தாம் அடைத்து வைக்கப்பட்ட கூண்டை கைகளால் அடித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக ஏபிசி செய்தி ஸ்தாபனத்தின் மத்திய கிழக்கு செய்தியாளர் ஹெய்டன் கூப்பர் தெரிவித்தார். சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் நீதிமன்றக் கட்டடத்தில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் அங்கு பெரும் அமளிதுமளி ஏற்பட்டதெனவும் அவர் கூறினார். கிரெஸ்தேயும் அவரது சகாக்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்கள். எகிப்திய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் செய்தியாளர்கள் 20 பேரில் அவர்களும் அடங்குகிறார்கள். அந்தக் குழுவிலுள்ள 16 பேருக்கு எதிராக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டார்கள் என்று குற்றஞ்சுமத்தப்பட்டது. முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தலைமையிலான அரசாங்கத்தைப் பதவி கவிழ்த்த இராணுவ ஆட்சியாளர்கள், அந்த இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்துள்ளார்கள். அல்-ஜஸீராவிற்கும், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கும் இடையிலான உறவுகள் சாத்தானுடனான கூட்டணிக்கு சமமானதென எகிப்திய அரசாங்கத்தின் சட்டத்தரணிகள் வாதிட்டார்கள். கிரெஸ்தே எழுதிய செய்திகள் எகிப்திய இராஜ்ஜியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தைக் கொண்டவை எனவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். |