எந்தப் போராட்டத்தையும் உணர்ச்சி வழியில் நடத்திச் செல்வது உசிதமில்லை. சாத்தியமா என்று யதார்த்தத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பது எமது தலைவர்கள் கடமையாகின்றது.

337

எமது சமூகத்தில் எதிர்காலம் பற்றிய தீர்க்க தரிசனக் குறைபாடு இன்றும் உறைந்து போயுள்ளது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோப்பாய் கோமகன் வன்னியசிங்கத்தின் 55வது நினைவு தினமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான வரவேற்பு விழாவும் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கு முதல்வர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவிய மூவரில் ஒருவரே ஐம்பத்து ஐந்து வருடங்களுக்குமுன் காலஞ்சென்ற ஆரம்ப கர்த்தா வன்னியசிங்கம், தந்தை செல்வாவும், ஈ.எம்.வி. நாகநாதனுமே மற்றைய இருவர்.

கட்சி தமிழ் காங்கிரசிலிருந்து பிரிந்து வந்து முதன் முதலாகப் பாராளுமன்றத் தேர்தலுக்கு 1952ம் ஆண்டில் முகங்கொடுத்தபோது, வடமாகாணத்தில் வெற்றி கண்ட உறுப்பினர் திரு.வன்னியசிங்கம் அவர்களே.

கட்சியின் தலைவராய் மூன்று தவணைகள் தொடர்ந்து பணியாற்றியவர் அவர். தந்தை செல்வாவின் பேரன்பிற்கு உரியவராக விளங்கியவர். இன்று எமக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் தீர்க்க தரிசன ஆற்றல் உடையவராக அன்று திகழ்ந்தார் அவர்.

இராணுவ அச்சுறுத்தல்கள், பொலிஸ் தாக்குதல்கள் போன்றவற்றின் மத்தியில் கறுப்புக் கொடிப் போராட்டம் அஹிம்சை வழியில் மிகவும் கட்டுப்பாடாக நடந்தேறிய காலம் அது. அவ்வாறான போராட்டம் இந்நாட்டின் தமிழ் மக்களுக்கு உள்ள, உகந்த ஒரேயொரு உரிமைப் போராட்ட வழி என்றும் மாற்றுவழி எதுவும் இல்லவே இல்லை என்றும் வன்னியசிங்கம் அவர்கள் தெளிவாக எம்மக்களுக்கு உணர்த்தியிருந்தார்.

அக்கால கட்டத்தில் வன்னியசிங்கத்திற்கும் அவரின் மூத்த மகள் ஹேமாவதிக்கும் இடையில் நடந்த ஒரு சம்பாஷணை அவரின் தீர்க்க தரிசனக் கருத்தை வெளியிடுவதாக அமைந்துள்ளது.

மகள் தகப்பனாரிடம் கேட்டார் “………… சும்மா போனால் பொலிஸ்தான் பிடிக்கும். நாங்கள் ஏன் ஒரு அமைப்பைத் தொடங்கக் கூடாது, அவை அடிச்சால் திருப்பி அடிக்க”?

அதற்குத் தகப்பனார் வன்னியசிங்கத்தின் பதில் இதுதான் – “அவர்கள் மிகப் பெரும்பான்மையினர். தவிர பொலிஸ், ஆமி எல்லாம் அவையின் கையில். இதுதான் சாட்டென்று எங்கடை இனத்தையே அழிக்கப்பார்பினம்”!

அவர் அன்று கூறிய சொற்களின் முழுத்தாற்ப்பரியத்தையும் ஆயுதப் போராட்டம் சுமந்து வந்துள்ள இன்றைய பேரழிவுச் சோகம் எமக்கு உணர்த்துகின்றது.

எந்தப் போராட்டத்தையும் உணர்ச்சி வழியில் நடத்திச் செல்வது உசிதமில்லை. சாத்தியமா என்று யதார்த்தத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பது எமது தலைவர்கள் கடமையாகின்றது.

அந்த வகையில் வன்னியசிங்கம் ஒரு வரலாற்றுத் தலைவர். அன்று அவர் தம் மக்களுக்குக் கூறிய வார்த்தைகள் எல்லாக் காலத்திற்கும் பொருந்திய வார்த்தைகளாக அமைந்துள்ளன.

எதிர்காலம் பற்றிய தீர்க்க தரிசனக் குறைபாடு எமது சமூகத்தில் இன்றும் உறைந்து போயுள்ளது என்று யாராவது கூறினால் நீங்கள் அதை ஏற்பீர்களோ தெரியாது. ஆனால் உண்மை அதுதான். பொறுமையின்மையும் வலோத்கார மனோ பாவமும் விஞ்சிய உணர்ச்சி மேலீடும் எம்மை அழிவுவழியில் இட்டுச் செல்வன என்பதை அன்று அந்தப் பெருமகனார் உணர்ந்திருந்தார்.

ஆனால் அவர் போராட்டம் வேண்டாமென்று வாளாதிருக்கவில்லை. குறுக்கு வழிகளில் அதிகாரம் உள்ளவர்களுடன் பேசி சுய ஆதாயம் பெறவில்லை. ஆன்மீக அடிப்படையில் அஹிம்சா முறையில் ஆட்சியாளர் மனங்களைத் தணிய வைத்து “நீங்களும் வாழுங்கள் எம்மையும் வாழவிடுங்கள்” என்ற தத்துவத்தை அவர்களிடையே பரப்பவே நடவடிக்கைகளில் இறங்கினார்.

இன்றைய கால கட்டத்திற்கு அவர் போன்ற ஒரு தலைவர் எம்மிடையே வளர வேண்டும். வாழ வேண்டும். தம்பி மாவை அத்தகைய தலைவராகத் தரமுயர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

அவருக்கு ஒரு பக்கபலமாக எமக்கான சார்புச் சிந்தனைகள் வெளிநாடுகள் பலவற்றில் வேரோடி இன்று நிற்பதை நாங்கள் கவனிக்க வேண்டும். அவை அவர் பயணத்திற்கு அனுகூலமாக அமைவன.

போராட்டங்கள் வெற்றிக்காக மட்டும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்று எம்மக்கள் எண்ணுவதை நிறுத்த வேண்டும். போராட்டம் ஒன்று வெளிப்பார்வைக்குத் தோல்வியாகத் தென்பட்டாலும் அதன் பின்னணியில் எமக்குச் சார்பான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

போராட்டங்களே எமது மனக்கிடக்கைகளையும் மனத்தாக்கங்களையும் மனக்கிலேசங்களையும் உலகத்திற்கு எடுத்தியம்புகின்றன. போரின் இறுதிக் கட்டத்தின் போது நடந்ததென்ன? இலங்கையில் நடப்பது பயங்கரவாதம் என்றார்கள்.

தமிழர்களுடன் நாங்கள் யுத்தம் புரியவில்லை. ஒரு பயங்கரவாத இயக்கத்துடன் தான் யுத்தம் புரிகின்றோம் என்கிறார்கள்.

வன்னியசிங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையை இங்கு குறிப்பிட வேண்டும். அன்றே அவர் எமது இன விருத்திக்கு இந்தியப் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை இனங் கண்டு கொண்டார்.

இதை அவர் முதன் முதலில் பகிரங்கமாக 1956ல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நான்காவது தேசிய மகாநாட்டில் தலைமைப் பேருரையை நிகழ்த்திய போது கூறி வைத்தார்.

இன்று அவர் அன்று கூறியதின் தாற்பரியம் விளங்குகின்றது. இந்தியா எச்சரித்ததன் பயனாகவே வடமாகாணத் தேர்தல்கள் நடைபெற்றன.  இந்தியா விரலுயர்த்தியதன் காரணமாகவே 13வது திருத்தச் சட்டத்தை இல்லாதாக்கக் கொண்டு வர எத்தனித்த பிரேரணை கைவிடப்பட்டது.

எம்முட் பலர் 13வது திருத்தச் சட்டத்தில் எதுவுமே இல்லை என்று கூறுகின்றார்கள். ஒற்றையாட்சியின் கீழ் அச்சட்டம் எமக்கு எதுவுமே அளிக்காது என்கின்றார்கள். என்னையுஞ் சேர்த்துத் தான் கூறுகின்றேன். அக் கூற்றுக்களை மறுப்பதற்கில்லை.

ஆனால் 13வது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் முற்றாகக் கை வாங்கியிருந்தால் எங்கள் நிலை மிகவும் இக்கட்டான ஒரு கட்டத்திற்குப் போயிருக்கும். இருப்பதை வைத்துக் கொண்டு இன்னும் வேண்டும் என்று கோருவதே இருப்பதையும் இல்லாதாக்கிவிட்டு இளிப்பதிலும் பார்க்கத் தந்திரோபாயமிக்கது என்பதை எம் மக்கள் உணர வேண்டும்.

இந்திய உள்ளீட்டால்த்தான் 13வது திருத்தச் சட்டமேனும் மிஞ்சி இருக்கின்றது என்பதை அவதானிக்க வேண்டும். பண்டா – செல்வா உடன்படிக்கை, டட்லி – செல்வா உடன்படிக்கை, மாவட்ட சபைகள் சட்டம் எல்லாமே காற்றோடு காற்றாகச் சென்று கருகி விட்டன.

எமது மாகாண சபை தனித் தனியாக அல்லது சிறு மக்கட் கூட்டங்களுக்குப் பல நன்மைகள் செய்து வருகின்றோம். அரச அடிவருடிகளால் சில சமயங்களில் செய்ய முடியாத பலதையும் நாம் பெற்றுக் கொடுத்து வருகின்றோம்.

இது எமக்கிருக்கும் அதிகாரத்தின் நிமித்தமே என்பதை எம்மக்கள் மறக்கக் கூடாது. ஆனால் எமக்கிருக்கும் அதிகாரங்கள் மிகச் சொற்பமே, அவற்றையும் கட்டுப்படுத்த அவர்கள் பார்க்கின்றார்கள் என்பதை நாங்கள் மறக்காமல்த்தான் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம்.

இன்று எமது மாகாண சபையில் ஒருவித ஒற்றுமையை முடிந்த வரையில் கட்டிக் காத்து வருகின்றோம். அதற்கு எமது சபைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களுக்கே நாம் நன்றி கூற வேண்டும்.

ஆனால் சபைக்கு வெளியில் நடப்பவற்றில் நாம் ஒற்றுமையை எதிர் பார்க்க முடியாது. எனினும் முக்கியமான ஒரு விடயத்தில் எம் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து முன்னேறலாம் என்று எனக்குப்படுகின்றது.

அது தான் இராணுவ உள்ளீடல் பல வழிகளிலும் இராணுவம் வடமாகாணத்தில் நிலை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தனது நிலை கொண்ட தன்மையை நிரந்தரமாக்கவும் முனைந்து வருகின்றது.

இதற்கு முற்றுப் புள்ளி போடாவிடில் முடிவில் புற்றீசல்கள் போல் புறமிருந்து புறத்தார் வந்தமர நாம் எமது மாகாணத்தினுள் சிறுபான்மையோர் ஆக்கப்பட்டு விடுவோம். இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஓர் இனம் தனது தனித்துவத்தைப் பாதுகாத்து கலாச்சாரப் பாரம்பரியங்களோடு தொடர்ந்து வாழ்வதற்கு அதற்குப் பாரம்பரிய நிலம் தேவை. நிலத்தில் வாழ்வதற்குப் பாரம்பரிய உறவுகள் தேவை. அவ்வாறான எமது வட கிழக்கு மாகாணங்களில் எங்கள் நிலத்தை எவரேனும் பிடுங்கி விட்டால் எமது அடையாளமே தேய்ந்து கரைந்து போகும்.

இன்று மட்டுமல்ல வன்னியசிங்கம் அவர்கள் இருந்த காலத்திலும் பாரம்பரிய தமிழ்ப் பேசும் மக்கள் வாழ் நிலப்பகுதியில் திட்டமிட்டு பெரும்பான்மையின குடியேற்றங்களை நிறுவி மண்ணை அபகரித்ததுடன் எமது அரசியற் பலத்தைக் குறைக்கவும் அக்கால அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்தச் சதி முயற்சியை எதிர்க்கும் விடயத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஏனைய தமிழ்க் கட்சி உறுப்பினர்களையும் விட வன்னியசிங்கம் அவர்கள் தீவிர கவனமும் கரிசனையுஞ் செலுத்தினார்.

எனினும் அன்று தொடக்கம் இன்று வரையில் இது தொடர் கதையாகவே இருந்து வந்துள்ளது. அந்தத் தொடர் கதையில் பொறுப்புள்ள, பலமான புதிய கதாபாத்திரந் தான் இராணுவம். இதை எம்மவர் யாவரும் கருத்திற்கு எடுக்க வேண்டும்.

இதைவிட, ஓரிரு தினங்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்கள் என்னைத் தாக்கி ஒரு செய்தி விட்டிருக்கின்றார்.

எம்முடன் வடமாகாண முதலமைச்சர் முரண்படுகின்றமையினால் வடக்கிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அரசாங்கத்தின் செயற்திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றால் நகர சபைகள், மாகாணசபைகள் அனைத்தும் நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்.

இதனையே ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அவரின் சகோதரர் இங்கு வந்து கூறிவிட்டுச் சென்றார். அதாவது வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள் தனது அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறிச் சென்றார்.

அவர்களிடையே போட்டி பொறாமை இருக்கின்றதோ அதை நான் அறியேன். ஆனால் நான் இருவரிடமும் கேட்கும் கேள்வி இது தான்.

செயற்திட்டங்களுக்குப் பணம் ஹம்பாந்தோட்டையில் இருந்து வரவில்லை அல்லது அமெரிக்காவில் இருந்து சகோதரர் இருவரும் இங்கு வந்த போது எடுத்து வரவில்லை. அவை வெளிநாட்டுப் பணம்.

ஐக்கிய நாடுகள், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகளிடம் இருந்து கடன்களைப் பெற்றுள்ளோம். பல்வேறு நாடுகளிடம் இருந்து கொடைகளையும் பெறுகின்றோம்.

வடகிழக்கு மாகாணங்கள் போரினால் பாதிக்கப்பட்டதை உணர்ந்து, கருத்தில் எடுத்து அவர்கள் எமக்குப் பணம் தந்துள்ளார்கள் அல்லது கடன் தந்துள்ளார்கள். அதைச் செலவு செய்வதும் செயற்திட்டங்களை நிறைவேற்றுவதும் எம் நாட்டு நிறுவனங்களும் எமது மாகாணசபை அலுவலர்களும்.

இதனை இரு சகோதரர்களும் எமக்குப் பெற்றுக் கொடுக்காதிருந்தால் நாம் நேரிடையாகக் கோரியும் வெளிநாட்டார் எமக்குப் பணம் தந்திருப்பார்கள், கடன் வழங்கியிருப்பார்கள்.

இதில் உங்களுடன் நாங்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஏன் கருதுகின்றீர்கள்? உங்களைத்தான் எங்கள் மக்கள் வேண்டாம் என்று விரட்டி விட்டார்களே.

ஆகவே செயற்திட்டங்களை எங்களிடம் கையளித்துவிட்டு நீங்கள் எங்களுடன் இணைந்து செயலாற்றலாமே! நாங்கள் ஏன் உங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்? போரில் நீங்கள் வென்றபடியாலா அல்லது முழு இலங்கைத் தேர்தலில் உங்கள் கட்சி வென்றபடியாலா?

ஆனால் உங்கள் கட்சி வடமாகாணத்தில் எத்தருணத்திலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே. ஆகவே அன்பார்ந்த சகோதரர் கோத்தபாயவிடம் நான் கேட்பது செயற்திட்டங்களை எங்களைச் செய்ய விடுங்கள்.

நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் என்று. சகோதரர் பசில் அவர்களுக்கு நான் கூறுவது, உங்களை விட எங்களால் செயற்திட்டங்களை ஊழல் இன்றி, ஊறு இன்றி, உண்மையாக நடைமுறைப்படுத்த முடியும் என்றார்.

SHARE