ஒரு பெண்ணிடம் காதல் சொல்ல வரும்போது கதாநாயகியால் ஆபத்து ஏற்படுவதால், அக்காதலை தெரிவிக்க இயலாமல் இருக்கிறார் கெளதம் கார்த்திக். அப்பெண்ணுக்கும் இன்னொருவருக்கும் திருமணம் ஏற்பாடு நடக்கிறது. இத்திருமணத்திற்கு குடிபோதையில் செல்லும் கெளதம் மண்டபத்திற்கு வெளியே தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார். இதற்கு கதாநாயகியும் ஆதரவு தெரிவித்து பின் நண்பர்களாகிறார்கள். இப்படி நடக்கும் போதே, கெளதம் கதாநாயகியின் மீது உள்ள காதலை சொல்ல வரும்போது, கதாநாயகிக்கும் வேறு ஒருவனுக்கும் திருமணம் என்று தெரிகிறது. அதனால் தன் காதலை மறைத்து விடுகிறார். இதே போல் கதாநாயகிக்கும் கெளதம் மீது காதல் தோன்றி அதை சொல்ல வரும்போது, அவர் வேறு பெண்ணை காதலிப்பதாக தெரிய வருகிறது. இதனால் அவரும் தன் காதலை மறைத்து விடுகிறார். இதனால் ஏற்படும் சிக்கலும், பிரச்சனையுமே கதையாகும்.
இப்படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கும் ரகுல்ப்ரீத் அறிமுக நாயகி என்றாலும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவே இருக்கிறார். இன்னொரு அறிமுக நாயகியான நிகிஷா பட்டேல் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார். இப்படத்தின் டர்னிங் பாயின்டே இவர்தான். காமெடி கலந்த சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிகர் பிரபு கலக்கியிருக்கிறார். கெளதமுக்கு அம்மாவாக நடித்திருக்கும் அனுபமாகுமார் போல் அம்மாவை பார்க்க வாய்ப்பில்லை. தனக்கு கொடுத்த வேடத்தை சரியாக செய்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள். டி.இமானின் இசையில் அமைந்த பாடல்கள் இசைப் பிரியர்களுக்கு வரப்பிரசதாமாக அமைந்திருக்கிறது. ‘ஷட்அப் யுவர்மத்’ பாடலை ஸ்ருதிஹாசன் பாடியிருக்கிறார். மேலும் நீ என்ன பெரிய அப்பாடக்கரா பாடலும் பிரபலமாகிவிட்டது.