ஐக்கிய இலங்கைக்குள் தனியான அரசை அமைக்கும் குறிக்கோள் இல்லை!-

511

இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தனியான நாட்டை அமைப்பதற்கான குறிக்கோள்களை கொண்டிருக்கவில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சி நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இன்று உயர்நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசியின் மூலம் இந்த உறுதியுரையை வழங்கினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியான அரசாங்கத்தை அமைக்கும் அரசியல் நோக்கத்தை கொண்டிருக்கிறது என்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் மீதே இந்த சத்தியக்கடதாசி இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மாகாணசபை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது “இணைப்பாட்சி” அடிப்படையில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஏற்புடன் அமைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது “சமஸ்டி” என்ற சொல்லுக்கு பதிலாக “இணைப்பாட்சி” என்ற தமிழ் சொல் அதில் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்த இணைப்பாட்சியையே மனுதாரர்கள் பிரிவினை என்று அர்த்தப்படுத்தியிருந்தனர்.

இந்தநிலையில் இன்று தமது சத்தியக்கடதாசியை சமர்ப்பித்துள்ள மாவை சேனாதிராஜா,  தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சமஸ்டி அதாவது இணைப்பாட்சியை அடிப்படையாக கொண்ட தீர்வையே வலியுறுத்தி வருகிறது. அதில் மாற்றம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் சமஸ்டி என்ற வடமொழி சொல்லுக்காக இணைப்பாட்சி என்ற சொல் மாத்திரம் அல்ல. பொருளாளருக்காக தனாதிகாரி என்ற சொல்லும், விசேட என்ற வடமொழி சொல்லுக்காக சிறப்பு என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா தமது சத்தியக்கடதாசியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர், பொதுச்செயலாளரை வரவேற்கும் நிகழ்வும், இரா.சம்பந்தன் அவர்களை பாராட்டும் நிகழ்வும்

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி இளைஞர் அணி நடாத்தும் பாராட்டு நிகழ்வும், வரவேற்பு பெருவிழாவும், எதிர்வரும் 27.09.2014 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு துளசி மண்டபம் கல்லடியில் இளைஞர் அணித்தலைவர் கி.சேயோன் தலமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பாராட்டு பெறும் பெருந்தகைகளாக த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் மற்றும் வரவேற்பு பெறும் பெரும் தகைகளாக இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் பதவியினை ஏற்றிருக்கும் இனப்பற்றாளன் மாவை சேனாதிராசா புதிய செயலாளர் மண்ணின் மைந்தன் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் வரவேற்கப்பட இருக்கின்றார்கள்.

இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா ஆகியோர் அதிதிகளாக அழைக்கப்படவுள்ளதுடன் அதிதிகளின் உரையும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

SHARE