ஐ.பி.எல்.: சென்னை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப்

586
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணி, கொல்கத்தாவை சந்திக்கிறது.

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறி விட்டது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் மற்றொரு அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் மும்பையில் நேற்று இரவு நடந்தது. இதில் சென்னையும், பஞ்சாப் அணியும் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக், மனன்வோரா ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக அடித்து ஆடினார்கள். குறிப்பாக ஷேவாக்கின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சுகளை பவுண்டரி, சிக்சர் என்று வெளுத்து வாங்கினார். 4.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 50 ரன்னை எட்டியது. ஷேவாக் 21 பந்துகளில் (7 பவுண்டரி, 2 சிக்சருடன்) அரை சதத்தை கடந்தார்.

ஷேவாக்கின் வாணவேடிக்கை தொடர்ந்ததால் பஞ்சாப் அணி 9.1 ஓவர்களில் 100 ரன்களை தாண்டியது. நெஹரா வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிகள் விரட்டிய ஷேவாக், அவருடைய மற்றொரு ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை தூக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

அணியின் ஸ்கோர் 110 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. மனன்வோரா 34 ரன்கள் எடுத்த நிலையில் ஈஸ்வர் பாண்டே பந்து வீச்சில் சுரேஷ்ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் கண்ட மேக்ஸ்வெல் 13 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனை அடுத்து டேவிட் மில்லர், ஷேவாக்குடன் ஜோடி சேர்ந்தார். ஷேவாக் தனது அதிரடி ஜாலத்தை தொடர அவருக்கு போட்டியாக டேவிட் மில்லரும் அடித்து ஆடினார். 13.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 150 ரன்னை கடந்தது. அபாரமாக ஆடிய ஷேவாக் சதம் அடித்தார்.

அவர் 50 பந்துகளில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதத்தை எட்டினார். இந்த ஐ.பி.எல். போட்டியில் அடிக்கப்பட்ட 2-வது சதம் இதுவாகும். ஏற்கனவே பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் வீரர் சிம்மோன்ஸ் ஆட்டம் இழக்காமல் 100 ரன் எடுத்து இருந்தார்.

ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் ஷேவாக் அடித்த 2-வது சதம் இதுவாகும். ஏற்கனவே 2011-ம் ஆண்டில் சதத்தை பதிவு செய்து இருந்தார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் இரண்டு சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை எம்.விஜய்யுடன் (டெல்லி) இணைந்து பெற்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ஆதிக்கம் செலுத்திய ஷேவாக் 58 பந்துகளில் 12 பவுண்டரி, 8 சிக்சருடன் 122 ரன்கள் எடுத்த நிலையில் நெஹரா பந்து வீச்சில் டுபிளிஸ்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து கேப்டன் ஜார்ஜ் பெய்லி 1 ரன்னிலும், விருத்திமான் சஹா 6 ரன்னிலும் அவுட் ஆனார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. ஜான்சன் ஒரு ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பின்னர் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

சென்னை அணியில் டுபிளிஸ்சிஸ் ரன் எதுவும் எடுக்காமலும், வெய்ன் சுமித் 7 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 87 ரன்னிலும் (25 பந்துகளில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன்), பிரன்டன் மெக்கல்லம் 11 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 27 ரன்னிலும், டேவிட் ஹஸ்ஸி 1 ரன்னிலும். அஸ்வின் 10 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் டோனி 42 ரன்னுடனும் (31 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்), மொகித் ஷர்மா இரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 3-வது வீரராக களம் இறங்கி அதிரடி காட்டிய சுரேஷ்ரெய்னா களத்தில் இருக்கும் வரை சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ரெய்னாவின் ரன்-அவுட் ஆட்டத்தின் போக்கை பஞ்சாப் அணிக்கு சாதகமாக திருப்பியது.

6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய காத்து இருந்த சென்னை அணியின் கனவை தகர்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

பெங்களூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது.

SHARE