ஒன்றாக பிறந்து-வளர்ந்து-திருமணம் செய்து-சுரங்க விபத்தில் இறந்த அபூர்வ இரட்டையர்கள்

563
துருக்கியின் வடக்கு பகுதியின் சோமா நகரில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வெளியில் வர முடியாமல்  உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 301 தொழிலாளர்கள் தீயில் கருகி இறந்தனர்.

இவர்களின் பிணங்களை சுரங்கத்தினுள் இருந்து மீட்ட மீட்புப் படையினர், உடல் கருகிய நிலையில் கைகோர்த்தபடி உயிரை விட்ட இரட்டைப் பிறவிகளை கண்டு வாயடைத்துப் போயினர்.

சோமா நகரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பயாட் என்ற கிராமத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்களான இஸ்மாயில் மற்றும் சுலைமான் ஆகியோர் ஒரே பிரசவத்தில் பிறந்து, ஒன்றாகவே வளர்ந்து, படித்து, பெரியவர்களாயினர்.

விபத்துக்குள்ளான நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஒன்றாகவே வேலைக்கு சேர்ந்த இவர்கள், நான்காண்டுகளுக்கு முன்னர் ஒரே மேடையில் திருமணமும் செய்து கொண்டு இணை பிரியாத அபூர்வ சகோதரர்களாக வலம் வந்தனர். இஸ்மாயிலின் மனைவி பாத்திமாவுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு தற்போது இரண்டு வயதாகிறது.

சுலைமானின் மனைவிக்கு மூன்று வயதில் ஒரேயொரு மகன் மட்டும் உண்டு. துரதிர்ஷ்டவசமான அந்த சுரங்க விபத்து ஏற்பட்ட நாளில் இஸ்மாயிலும், சுலைமானும் ஒரே ஷிப்ட் வேலைக்கு மனைவிமார்களிடம் விடை பெற்று சென்றனர். தீ விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய அவர்கள், உடல் எரிந்து, உயிர் பிரியும் தருவாயில் ஒருவர் கையை மற்றவர் கோர்த்தபடி பிணமாகியுள்ளனர்.

தனது மகன்கள் அற்ப ஆயுளில் பூமியை விட்டு பிரிந்துச் சென்ற வேதனையை தாங்கிக் கொள்ள முடியாத தந்தை, ‘ஒரே பிரசவத்தில் அவர்கள் பிறந்த அந்த நாளும், ஒன்றாக பள்ளிக்கு சென்ற முதல் நாளும் என் கண்களில் இருந்து மறையவே இல்லை. அதற்குள் அவர்கள் இருவரையுமே நாங்கள் இழந்து விட்டோம்..’ என்று கதறித் துடிக்கிறார்.

தங்களது திருமண போட்டோவை மடியில் வைத்துக் கொண்டு புலம்பியழும் சுலைமானின் மனைவி முர்சிட், ‘எனது கணவர் பொறுப்புள்ள ஒரு குடும்பத் தலைவராக இருந்தார். தனது குடும்பத்தை அவர் மிகவும் நேசித்தார். பாதுகாப்பற்ற, சிக்கலான தொழில் சூழலிலும் அவர் கடுமையாக உழைத்தார்.

சிறிது காலம் வேலை செய்துவிட்டு, பின்னர் ராஜினாமா செய்து, குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட அவர் திட்டமிட்டிருந்தார். அவரது ஆசை நிறைவேறாமல் போய்விட்டதே..’ என்று தலையில் அடித்தபடி கதறுகிறார்.

SHARE