ஓர் இனத்தை அழித்து ஒழிக்க பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும்கூட தொடுத்த யுத்தத்தில் பாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தியது சிங்கள அரசு.

742

 

நேற்றுதான் நடந்ததைப் போலிருக்கிறது, நம்மைக் குலை நடுங்க வைத்த இலங்கையின் இனப்படுகொலை. 10 ஆண்டுகள் முடிவடைந்து விட்டதாகச் சொல்கிறது நாள்காட்டி! நமது ஒன்றரை லட்சம் உறவுகள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு10 ஆன்டுகள் முடிந்துவிட்டன என்பதை நம்பவே முடியவில்லை! vanni war bus bomb

ஓர் இனத்தை அழித்து ஒழிக்க பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும்கூட தொடுத்த யுத்தத்தில் பாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தியது சிங்கள அரசு. சிதைத்துச் சீரழித்துக் கொன்றபின் எங்கள் சகோதரிகளின் உடலை நடுவீதிகளில் வீசிவிட்டுச் சென்றார்கள் புத்தனின் புத்திரர்கள். கேட்பதற்கு நாதியற்ற சமூகத்தில் பிறந்ததைத் தவிர வேறென்ன குற்றம் செய்தார்கள் அந்தச் சகோதரிகள்?

பிறப்பாயிருந்தாலும் இறப்பாயிருந்தாலும் தமிழகத் தமிழர்களான நம்மைக் காட்டிலும் அதிக சாங்கியங்களை சம்பிரதாயங்களை சடங்குகளை – தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிப்பவர்கள் நமது ஈழத் தமிழ் உறவுகள். கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கப்பட்ட தங்கள் உற்றார் உறவினர்களுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூட அவர்களை அனுமதிக்கவில்லை ராஜபட்சேவின் ராணுவம். அந்த அளவுக்கு விரட்டி விரட்டி வேட்டையாடியது.

4 ஆண்டுகள் முடிவடைகிற நிலையில் ஒன்றரை லட்சம் கொலைகளில் குறைந்தது நூறு கொலை தொடர்பாகவேனும் கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்களா என்றால் இல்லை. ஒரே ஒரு கொலையாளி மீது கூட சட்டம் பாயவில்லை…. ஒரே ஒரு கொலையாளி கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை….. ஒரே ஒரு கொலையாளிமீது கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

நாங்களே விசாரிப்போம் – என்று இனவெறி பிடித்த இலங்கை மிருகம் நான்கு ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. நாமும் நான்கு ஆண்டுகளாக அவர்கள் சொல்வதை நம்பிக் கொண்டேயிருக்கிறோம். நம்முடைய இந்த பேய்த்துயில் கொடுக்கிற திமிரில்தான் ‘அவர்களே விசாரிப்பார்கள் தங்களுக்குத் தாங்களே தண்டனை கொடுத்துக் கொள்வார்கள்’ என்று அழுகிப்போன மனசாட்சியுடன் புழுகிக்கொண்டே இருக்கமுடிகிறது மன்மோகன்சிங்குகளாலும்இ ஒபாமாக்களாலும்!

2009 இறுதியிலேயே நடப்பது இனப்படுகொலைதான் – என்பதைச் சுட்டிக்காட்டி ராஜபட்சேவைத் தட்டிக் கேட்டார் சன்டே லீடர் ஆசிரியர் லசந்த. அந்த ‘தேசத்துரோகத்துக்காக’ அவரை நடுத்தெருவில் சுட்டுக் கொன்றது கோதபாயவின் கூலிப்படை. சர்வதேசமும் அதைக் கண்டிக்க அதுபற்றி விசாரிக்கப்படும் என்று அறிவித்தது இலங்கை. ‘தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் – என்று இத்தகைய சந்தர்ப்பங்களில் இலங்கை அறிவிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அப்படியொரு விசாரணை இதுவரை நடந்ததேயில்லை’ என்றார் அப்போது அமெரிக்கத் தூதராயிருந்த ராபர்ட் பிளேக். இதுதான் இலங்கை என்கிற அவலட்சணத்தின் லட்சணம்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட எந்தக் குற்றவாளியும் சிங்கள பௌத்த இனவாத அரசுகளின் 65 ஆண்டு வரலாற்றில் தண்டிக்கப்பட்டதேயில்லை. 1996ல் 11 சிப்பாய்களால் சிதைத்துச் சிதைத்துக் கொல்லப்பட்டாள் கிருஷாந்தி குமாரசாமி. அதற்கும் முன்பே அருமைத்துரை தனலட்சுமி என்கிற 16 வயதுச் சிறுமி அதற்கும் முன்பு சின்னராசா அந்தோணி மாலா… என்று அழிக்கப்பட்ட குழந்தைகளின் பெயர்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த பிஞ்சு மலர்களை நசுக்கிய பொறுக்கிகளில் ஒருவனுக்காவது இன்றுவரை தண்டனை நிறைவேற்றப் பட்டிருக்கிறதா? இதற்கான பதில் சர்வதேசத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும் மௌனம் சாதிக்கிறார்களே ஏன் – என்பது ஒரு முக்கியமான கேள்வி.

‘2008 – 2009ல் நடந்த இனப் படுகொலையை இப்போதுகூட ‘போர்’ என்கிற போலியான பெயரிலேயே உலக நாடுகள் குறிப்பாக மேலை நாடுகள் குறிப்பிடுவது என்ன நியாயம்’ – என்பது அதைவிட முக்கியமான கேள்வி! நம்மூர் மார்க்சிஸ்ட்களைப் போலவே மேலைநாடுகளும் இப்படியொரு தகிடுதத்தத்தில் திட்டமிட்டு இறங்கியிருப்பது தான் வினோதம். இரண்டு தரப்புக்கும் என்ன தொடர்பு – என்று எவரும் கேட்டுவிடக் கூடாது. டாட்டா மாதிரி இந்திய முதலாளிகளை முன்மொழிவார்களே தவிர முதலாளித்துவ நாடுகளை வழிமொழிய மாட்டார்கள் தோழர்கள்!

மேலை நாடுகளுக்குத் தொடர்பு மார்க்சிஸ்ட்களுடன் அல்ல…. மரணத்தின் வாகனமான மகிந்த ராஜபட்சேவுடன்! அந்த மனித மிருகத்துக்கு ஆயுதம் முதல் அனைத்து உதவிகளையும் வழங்கியவர்கள் அவர்கள்.

தமிழராய்ப் பிறந்ததைத் தவிர வேறென்ன குற்றம் செய்தார்கள் இலங்கையால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேர்!

மருத்துவமனை என்று தெரிந்தே குண்டுவீசி நோயாளிகளைக் கொன்று குவித்தார்கள்….. ‘மக்கள் ஒளிவதற்குக் கூட இங்கே இடமில்லை தயவுசெய்து தாக்காதீர்கள்’ என்று சொன்ன ஐ.நா. அதிகாரியைப் பொருட்படுத்தாமல் இரவு முழுக்க குண்டுவீசி சுதந்திரபுரம் ஐ.நா.முகாம் முன் கூடியிருந்த மக்களைக் கொன்றுகுவித்தார்கள்…. பசியால் வாடியிருந்த குழந்தைகளுக்கு ஐ.நா. கொடுத்த பால் பவுடரை வாங்க குழந்தைகளுடன் குவிந்திருந்த பெண்களை விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொன்றார்கள் அம்பலவண் பொக்கனையில்….. பங்கருக்கு வெளியே விளையாடிய குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை… எல்லாவற்றுக்கும் மேலாக – நோ பயர் சோன் – என்ற மோசடி அறிவிப்பை வெளியிட்டு – அதை நம்பி ஒரே இடத்தில் குழுமிய மக்களை மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சரால் தாக்கிக் கொன்றார்கள்… வயது வித்தியாசமில்லாமல் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திக் கொன்றார்கள்… தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களையும் கொத்துக் குண்டுகளையும் பயன்படுத்திக் கொன்றார்கள்…

இது ஒரு அப்பட்டமான இனப்படுகொலை. திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை. ஐ.நா.வும் பங்கெடுத்த இனப்படுகொலை. 2008லேயேஇ தமிழர்கள்மீது வான்வழியே வீசப்பட்ட குண்டுகளின் மொத்த எடை 14 ஆயிரம் டன். இவ்வளவு குண்டுகள் வீசப்பட்டதில் தமிழர்கள் மட்டும் தான் செத்தார்கள். ஒரே ஒரு சிங்கள இனத்தவர் கூட உயிரிழக்கவில்லை. எவ்வளவு திட்டமிட்ட தாக்குதல் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இது இனப்படுகொலை இல்லையெனில் வேறு எது இனப்படுகொலை?

இனப் படுகொலை என்று தெரியாமல் ஆயுதம் கொடுத்துவிட்டோம் – என்று எந்த நாடாவது அழுகுணி ஆட்டம் ஆட முயன்றால் கருணாநிதியையும் பிரணாப் முகர்ஜியையும் ஓவர்டேக் செய்யப் பார்க்கும் அவர்களைப் பிடரியில் தட்டவேண்டும். எப்போதோ ஆயுதம் கொடுத்தார்கள் – என்பதல்ல நமது குற்றச்சாட்டு…. இனப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோதே ஆயுதம் கொடுத்தார்களே… சுற்றிலும் பிணங்கள் விழுந்து கொண்டிருந்தபோது போர்க்களத்தின் நடுவில்போய் நின்றுகொண்டு மிச்சமிருப்பவர்களையும் எப்படிக் கொன்று குவிப்பது என்று திட்டம் வகுத்துக் கொடுத்தார்களே… சர்வதேச ராணுவத் தளபதிகள்…. அவர்களெல்லாம் மனிதஜாதியில் சேர்த்தியா?

எவ்வளவு திமிர் இருந்தால் எவ்வளவு ஆணவம் இருந்தால் எவ்வளவு கொலைவெறி இருந்தால் தமிழினத்தின்மீது எவ்வளவு வெறுப்பு இருந்தால் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட பிறகு கொலைவெறி இலங்கைக்குக் கொம்பு சீவ அங்கே போயிருப்பார்கள் அவர்கள் – என்று யோசித்துப் பாருங்கள்!

‘அகில உலக அரசியலையும் கரைத்துக் குடித்த’ ராஜீவ் காந்தி என்கிற ஒரு மாஜி பைலட்டால் இலங்கையின் கூலிப்படை ரேஞ்சுக்கு இந்திய ராணுவம் சுருங்கியது பழைய வரலாறு. இந்தியாவைப் போலவே தங்களது தளபதிகளையும் கூலிப்படை ரேஞ்சுக்கு மாற்றி இனவெறி இலங்கைக்கு அனுப்பியிருக்கலாமா இந்த மேலைநாடுகள்?

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் – என்று பிளேட்டைத் திருப்புவோரின் செவுளைத் திருப்பவேண்டும் தமிழினம். நூறு பேரோ இருநூறு பேரோ கொல்லப்பட்ட நிலையில் அவர்கள் பயங்கரவாதிகள் – என்று இவர்கள் சொல்லியிருந்தால் அறியாமல் சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டிருக்கலாம். ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டபிறகு அந்த எண்ணிக்கையை அறிந்தபிறகு ‘அவர்கள் பயங்கரவாதிகள்’ என்று இவர்கள் நினைத்தார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஒன்று மன நோயாளிகளாக இருக்க வேண்டும் அல்லது பிணந் தின்னிகளாக இருக்கவேண்டும். இரண்டில் அவர்கள் எது?

பயங்கரவாதி யார்? தமிழினம் என்கிற ஒன்று இலங்கை மண்ணில் இருக்கவேகூடாது – என்று கொலைவெறியுடன் திரிகிற இலங்கையா? நசுக்கப்படுகிற தங்கள் இனத்தைக் காக்க கழுத்தில் குப்பி கட்டிக்கொண்டு களத்தில் நின்றார்களே பிரபாகரனின் தோழர்கள் – அந்த விடுதலைப் புலிகளா?

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளாலும் தன்முனைப்பாலும் தமிழீழ மக்களின் போராட்டத்தை நசுக்க வஞ்சகமாக முயன்றது ராஜீவ் அரசு. சோனியா வழிநடத்தும் மன்மோகன் அரசும் ராஜீவ் வழியை அப்படியே பின்பற்றுகிறது. ஒரே வித்தியாசம் ராஜீவ் செய்தது வஞ்சகம் இவர்கள் செய்வது நயவஞ்சகம். 1987லேயே பிரபாகரனைக் கொன்றுவிடத் துடித்தார் ராஜீவ். பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் இவர்கள். பிரபாகரனுடன் அப்படியென்ன விரோதம் இவர்களுக்கு? தன்னுடைய மக்களின் தேவையை நிறைவேற்றுவதில் எந்த சமரசமும் செய்து கொள்ள பிரபாகரன் மறுத்ததில் என்ன தவறிருக்கிறது?

தன்னுடைய மக்களின் மனசாட்சியாக விளங்கிய மனிதன் பிரபாகரன். தன் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட தாயகத்தை மீட்பதற்காக சமரசமில்லாமல் போராடிய தலைவன். அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற ஆயுதம் ஏந்தியவன். ராணுவ முகாம்களைத் தாக்கித் தகர்த்த அவனுடைய ஆயுதங்கள் எப்போதாவது சிங்களர் வீடுகளைத் தாக்கியதுண்டா? அப்பாவி சிங்களப் பெண்கள் மீது விடுதலைப் புலிகளின் விரலாவது பட்டதுண்டா?

இந்திய அமைதிகாப்புப் படை ரா-வின் அயோக்கியத்தனத்தாலும் ராஜீவின் அறியாமையாலும் கூலிப்படையாகவே மாறிவிட்டிருந்த எண்பதுகளின் கடைசியில் மணலாற்றுக் காட்டில் இந்தியப் படையின் முற்றுகையில் இருந்தார் பிரபாகரன். அப்போதே பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக திட்டமிட்டு செய்தி பரப்பப்பட்டது. (அப்படியெல்லாம் பொய்களைப் பரப்பியவர்கள் வெட்கமேயில்லாமல் மீசையை வளர்த்துக்கொண்டு இப்போதுகூட இலங்கைப் பிரச்சினை பற்றி அபிப்பிராயம் தெரிவிக்கிறார்களே இதுதான் அபத்தத்தின் உச்சம்.)

இந்திய ராணுவம் முற்றுகையிட்ட நிலையிலும் மக்களுக்குக் கேடயமாக இருக்கும் பணியை தொடர்ந்து கொண்டிருந்தனர் புலிகள். உலகின் இரண்டாவது பெரிய ராணுவத்தையே விடுதலைப் புலிகள் எதிர்க்கத் துணிந்ததால் ஆத்திரத்திலிருந்தது இந்திய ராணுவம். அந்த நிலையில் இந்தியப் படைகளின் ஆதரவு இருக்கிற தைரியத்தில் புலிகளுக்கு எதிரான கோஷ்டிகள் பல்வேறு கேவலமான தாக்குதல்களை மேற்கொண்டன. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கும் போராளிகளின் வீடுகளுக்குப் போய் போராளிகளின் பெற்றோரைச் சுட்டுக்கொன்று கொண்டிருந்தது ஒரு குழு.

போராளிகளின் பெற்றோர் சுட்டுக் கொல்லப்படும் தகவலை மணலாற்றுக் காட்டுக்குள் இருந்த பிரபாகரனிடம் ஆத்திரத்துடன் வந்து தெரிவித்தார் ஒரு தளபதி. துரோகக் குழுக்களில் இருப்பவர்களின் பெற்றோரை இதே பாணியில் நாம் தாக்கிக் கொன்றாலென்ன – என்று கேட்ட அந்தத் தளபதியை பிரபாகரன் கடுமையாகக் கண்டித்ததும் பின்னர் பொறுமையுடன் அறிவுரை சொல்லி அனுப்பியதும் பிரபாகரன் யாரென்பதை நமக்கு உணர்த்துகிற ஈர வரலாறு.

அப்பழுக்கற்ற அந்த வீரனை பயங்கரவாதி என்று நாக்கூசாமல் பேசுகிறவர்களின் நோக்கமென்ன? தமிழ் ஈழம் அமைவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்பதற்காக அல்லாமல் வேறு எதற்காக அந்த உண்மையான மனிதனை அவனது மகத்தான போராட்டத்தை கொச்சைப்படுத்த முயன்றார்கள் முயல்கிறார்கள்?

ஒரு பிரபாகரனை – அவனுடைய தலைமையிலான உன்னதமான வீரர்களை – வீழ்த்திவிட்டதாகக் காட்டிக் கொள்வதற்காக ஒன்றரை லட்சம் மக்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்திருக்கிறது இலங்கை. அதைத் தோள்மேல் தூக்கிச் சுமக்கிறது இந்தியா. இவர்கள் இருவரும் நேர்மையான போர் புரிந்த ஒரு வீரனை எப்படிப் புரிந்துகொண்டிருக்க முடியும்? கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.. ஒரு நேர்மையாளனை இன்னொரு நேர்மையாளனால்தான் புரிந்துகொள்ள முடியும். பொறுக்கிகளால் எப்படி போராளிகளைப் புரிந்துகொள்ள முடியும்?

வீரத்தோடு போரிட்டார்கள் – என்று சொல்வதில் இல்லை புலிகளின் பெருமை. அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கியவர்கள் அவர்கள். அதுதான் அவர்களது ஆகப்பெரிய அடையாளம். அச்சமின்மைக்கு மட்டுமல்ல அவர்களது அர்ப்பணிப்புக்கும் அடையாளமாகத்தான் கழுத்தில் தொங்கியது நச்சுக் குப்பி.

வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை பங்கருக்குள் மறைந்து மறைந்து நகர்ந்த மக்களுக்கு குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஒரு வேளை கஞ்சியாவது கொடுக்கவேண்டும் என்பதற்காக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கஞ்சிப்பாத்திரத்துடன் பங்கர் பங்கராகத் தேடிவந்து உணவு கொடுத்த இளைஞர்களை அந்த மக்கள் என்றைக்காவது மறக்க முடியுமா?

ஐந்து உண்மைகளை உலகறியப் பேசியாகவேண்டும் நாம்.

வந்தேறிய சிங்களர்களிடமிருந்து தமிழர் தாயகத்தை மீட்பது – என்பது ஒரு வரலாற்றுக் கடமை. அந்தக் கடமையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் விடுதலைப் புலிகள். அவர்கள்தான் தமிழினத்தின் காவலரண். அவர்களது எழுச்சியால்தான் தமிழினம் பாதுகாப்பாக இருக்க முடிந்தது தமிழீழக் கோரிக்கை வலுவடைய முடிந்தது. தமிழ் ஈழத்துக்குக் குறைவான எதையாவது அரசியல் லாபநஷ்டக் கணக்குப் பார்த்து ஏற்பதென்பது அந்த உன்னத நோக்கத்துக்காக உயிரிழந்த புலிகளுக்கு மட்டுமல்ல லட்சக் கணக்கான மக்களுக்கும் செய்கிற துரோகம்.

பிரபாகரன் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் அவதூறுப் பிரசாரங்கள் அனைத்தும் தமிழ் ஈழக் கோரிக்கையை நசுக்கும் உள்நோக்கம் கொண்டவை. அத்தகைய பிரச்சாரங்களை முறியடித்தாகவேண்டும். சிங்கள இனவெறியர்களைப்போல் அல்லாமல் தமிழினத்தைத் தலைநிமிரச் செய்யும் வகையில் நேர்மையான போரைத்தான் புலிகள் நடத்தினர் என்பதை வெளிப்படையாகப் பேசவேண்டும்.

2008 – 2009ல் இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை. அதற்குக் காரணமான ராஜபட்சே சகோதரர்களையும் மற்றவர்களையும் அவர்களைத் தூண்டிவிட்டவர்களையும் துணை நின்றவர்களையும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். நடந்தது போர் – என்று திசைதிருப்ப முயலும் துரோகிகளை அம்பலப்படுத்த வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை விசாரிக்காமலேயே இழுத்தடிப்பது தமிழீழக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் உள்நோக்கத்துடன் பிரச்சினையை ஆறப் போடும் செயல். இந்தச் சதியை முறியடித்து நடந்த இனப்படுகொலைக்கு இப்போதே நீதிவேண்டும் – என்கிற குரல் தாய்த் தமிழகத்திலிருந்து முன்னெப்போதையும் காட்டிலும் வலுவாக எழ வேண்டும் இப்போது!

நடந்தது இனப்படுகொலை – என்பதை வலுவாக எடுத்துரைப்பதுதான் தமிழ் ஈழக் கோரிக்கையை வலுப்படுத்தும். இனப்படுகொலை செய்த மிருகங்களுடன் சேர்ந்து வாழமுடியுமா மனித இனமாகிய தமிழினம் – என்கிற கேள்வி எல்லாநிலையிலும் எழுப்பப்பட வேண்டும். அதுதான் தமிழீழத்தின் தேவையை அழுத்தந் திருத்தமாக எடுத்துவைக்கும்.

‘இனப்படுகொலை’ என்பதை ஏற்றுக்கொண்டால் அதற்கு உதவிய நம்மீதும் குற்றச்சாட்டு திரும்புமே – என்கிற தர்ம சங்கடமே உலக நாடுகளின் தயக்கத்துக்குக் காரணம். அவர்கள் மீது தயவு தாட்சண்யமெல்லாம் பார்க்கக் கூடாது நாம். கொன்று குவிக்கத் துணை நின்றுவிட்டு இன்று மென்று முழுங்கப் பார்க்கும் அவர்களுக்குப் பாவமன்னிப்பு வழங்க நாம் ஒன்றும் தேவ குமாரர்கள் அல்ல! நடுத்தெருவில் அவர்களை நிறுத்தி சட்டையைப் பிடித்து உலுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் விட்டுவிடக்கூடாது. அந்த நாடுகளின் பொருட்களைப் புறக்கணிப்போம் – என்று மிரட்டுகிற ஜனத்தொகை நம்மிடம் இருக்கிறது. அந்த அஸ்திரத்தைப் பயன்படுத்த யோசிக்கவே கூடாது.

தமிழ் ஈழம் தேவை – நடந்த இனப் படுகொலைக்குத் தண்டனை தேவை – தமிழினம் தலைநிமிர அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட புலிகள் தேவை……. இதை எவர் மறுத்தாலும் அவர்களை நாம் புறக்கணித்தாக வேண்டும்.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்வோம்…

தமிழீழம்தான் தீர்வு என்பதை இரண்டாவதாகச் சொல்லலாம்.

முதலில் சொல்லவேண்டியது ‘நடந்தது இனப்படுகொலை’ – என்பதை! அதைச் சொல்வதன் மூலம் – ‘கொல்லப்பட்டவர்கள் வாழ முடியுமா கொலைகாரர்களுடன்’ என்கிற கேள்வியை எழுப்புகிறோம். உலகின் மனசாட்சியை அது நிச்சயம் உலுக்கும். தமிழீழமே தீர்வு – என்கிற எண்ணத்தை உலகெங்கும் எழுப்பும்.

‘இந்தப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் அவரவர் கடமையைச் செய்கிறார்கள். நானும் அப்படியே! எம் இனத்துக்கான பணி இன்னும் முடிவடைந்துவிடவில்லை. எம் மக்களின் தாயகத்தைப் பெற்றுத் தந்த பிறகுதான் என் பணியை முழுமையாகச் செய்ததாக நான் மனநிறைவு அடைய முடியும்’ – என்று ஒரு மிகப்பெரிய வெற்றிக்குப் பின் நிதானமாகவும் தொலைநோக்குடனும் பேசியவர் பிரபாகரன்.

பிரபாகரன் என்கிற ஒரு வரலாற்று நாயகனின் பணியே நிறைவடையாத நிலையில் நம்முடைய பணிகள் மட்டும் எப்படி முடிவடைய முடியும்?

SHARE