கச்சத்தீவில் இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்பதை நிலைநாட்ட அங்கு சென்றதாக அப்போது சொன்ன சுவாமி, இப்போது விவரம் இல்லாதவர் போல பேசியிருக்கிறார்.

363

சுப்பிரமணியன் சுவாமியும் சர்ச்சைகளும் என்று சொல்லலாம். இப்போது மீனவர்கள் பற்றி அவர் அடித்த கமென்ட் கடலோர மக்களின் மனத்தில் சுனாமியாகக் கொந்தளித்து வருகிறது.

மீன் பிடிக்கிறதுக்காக எல்லைதாண்டி வரும் தமிழ்நாட்டுக் கப்பல்களை எல்லாம் பிடிச்சு வெச்சுக்குங்கோ. கப்பல் முதலாளிகளின் கட்டாயத்தினால் வரும் மீனவர்களை விடுதலை செஞ்சுருங்கோ என்று நான் சொன்னபடிதான் ராஜபக்ச நடக்கிறார்” என சுப்பிரமணியன் சாமி தமிழக மீனவர்களுக்கு எதிராகக் கூறியுள்ள கருத்துக்களால் ஒட்டு மொத்த கட்சிகளும் தமிழக அமைப்புகளும் அவருக்கு எதிராகத் திரண்டு நிற்கிறது.

சுவாமியின் இந்தக் கருத்தைக் கேட்டுக் கொதித்து எழுந்துள்ள மீனவர் அமைப்புகள் சுவாமியின் உருவப் பொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக தமிழகக் கடலோர விசைப் படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் ஜேசுராஜா ஜூனியர் விகடனிடம் தெரிவிக்கையில்,

இரு நாட்டு மீனவர்களும் எல்லைகள் வகுத்துக் கொள்ளாமல் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்தோம். இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தால் இலங்கை தமிழர்கள் மட்டுமல்ல மீனவர்களாகிய இந்திய தமிழர்களான நாங்களும் பாதிக்கப்பட்டோம். 600-க்கும் மேற்பட்ட மீனவர்களின் உயிர்கள் இலங்கைக் கடற்படையினரால் பறிக்கப்பட்டிருக்கிறது. பல நூறு மீனவர்கள் உடல் உறுப்புகளையும் உடமைகளையும் இழந்து இன்றளவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கஷ்டங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு உயிர்வாழ வேண்டுமே என்பதற்காக மீண்டும் மீண்டும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இரு நாட்டுக்கும் இடையிலான கடல் எல்லை வகுக்கப்பட்டபோது அது சமமாகப் பிரிக்கப்படவில்லை. தனுஷ்கோடியில் இருந்து நமது 12 கடல் மைல்களும் இலங்கைக்கு 50 கடல் மைல்களும் எல்லைகளாக உள்ளன.

இந்த 12 கடல் மைல்களில் முதல் மூன்று கடல் மைல்களுக்குள் விசைப் படகுகள் மீன்பிடிக்கக் கூடாது. எஞ்சியிருக்கும் ஒன்பது கடல் மைல்களில் பாதி தூரத்துக்குப் பாறைகள் நிறைந்த பகுதி. இதனால்தான் நாங்கள் எல்லைத் தாண்டிச் சென்று மீன்பிடிக்கும் நிலை. ராமேஸ்வரம் பகுதியில் இயங்கும் 750 விசைப் படகுகளில் 500-க்கும் மேற்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் இன்றும் மீன்பிடிக்கச் சென்று கொண்டிருக்கிறோம்.

இது தெரியாத சுப்பிரமணியன் சுவாமி, ‘நான் சொல்லித்தான் கப்பல்களை இலங்கையில் பிடிச்சு வைத்திருக்கிறார்கள். கப்பல் வைத்திருப்பவர்கள் எல்லாம் முதலாளிகள்’ என்று சொல்லியிருக்கிறார். அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பெரு முதலாளிகளுடன் மட்டுமே தொடர்பு வைத்திருக்கும் சுவாமிக்கு ஏழை மீனவர்கள் வைத்திருக்கும் படகுகளுக்கும் முதலாளிகள் வைத்திருக்கும் கப்பல்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார்.இலங்கையில் பிடிபட்டிருக்கும் படகுகளால் நாங்கள்படும் கஷ்டங்கள் குறித்து இலங்கையில் உள்ள மீனவர்களிடம் எடுத்து கூறினோம்.

அவர்களும் எங்கள் மேல் இரக்கப்பட்டு எங்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசுக்குக் கடிதம் கொடுத்துள்ளனர். இதைக் கெடுக்கும் வகையில் உள்ளது சுவாமியின் செயல். அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்குள்ளும் அவரைக் கால் வைக்க விடமாட்டோம்” என்றார்.

தமிழ்நாடு புதுச்சேரி விசைப் படகு மீனவர் சங்கப் பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ், ”இலங்கை அரசின் ஆலோசகர் போல இப்போது பேசும் சுவாமி, கடந்த 88-ம் ஆண்டு கச்சத்தீவுக்குச் சென்று இந்தியக் கொடியை ஏற்றியவர். கச்சத்தீவில் இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்பதை நிலைநாட்ட அங்கு சென்றதாக அப்போது சொன்ன சுவாமி, இப்போது விவரம் இல்லாதவர் போல பேசியிருக்கிறார்.

உலக அரங்கில் தன்னைப் பெரிய ஆளாக கருதிக்கொள்ளும் அவர் எங்கள் வாழ்க்கையில் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார். இவரது செயலை பி.ஜே.பி கட்சியும் மத்திய மாநில தலைமைகளும் எப்படி அனுமதிக்கின்றன? மீனவர்கள் மீது பி.ஜே.பி-க்கு அக்கறை இருப்பது உண்மை என்றால் உடனடியாக சு.சாமி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சுப்பிரமணியன் சுவாமி, மீனவர்கள் சிலர் தன்னை வந்து சந்தித்ததாக கூறியிருக்கிறார். ஆனால் இலங்கை கடற்படையால் இன்னல்களை அனுபவித்து வரும் ராமேஸ்வரம் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலான மீனவர்கள் யாரும் சுவாமியைச் சந்திக்கவில்லை” என்றார்.

 

SHARE