அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வழங்கிய அன்றைய பேட்டி
புலிகளின் தலைவரின் சயனைட் இரகசியத்துடன் அன்ரன் பாலசிங்கம்
பிரபாகரனின் திருமணத்தை நடத்திவைத்தவர் அன்ரன் பாலசிங்கம்தான்! அந்த நிகழ்வை அழகாக விவரிக்கிறார்…
‘‘அப்போது பிரபாகரனுடன் நானும் சென்னையில் இருந்தேன். இந்தியா கொடுக்கிற ராணுவப் பயிற்சியை முறையாகப் பயன்படுத்துவதிலும், சரியான திட்டமிடலோடு பணியாற்றுவதிலும் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தார் பிரபாகரன்.
இந்நிலையில், திருவான்மியூரில் நாங்கள் வசித்த வீட்டுக்கு மதி, வினோஜா, ஜெயா, லலிதா என்ற நான்கு இளம் பெண்கள் வந்தனர். யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த இந்த நால்வரையும் சிங்கள ராணுவத்திடமிருந்து காப்பாற்றி சென்னைக்கு அனுப்பிவைத்திருந்தார்கள் போராளிகள்.
இந்தப் பெண்களுக்குக் குடும்பமோ உறவுகளோ இல்லாத நிலையில், பிரபாகரன் இந்த நால்வரின் நலனிலும் அக்கறையுடன் இருந்தார். இந்தப் பெண்களின் வருகை, புலிகள் இயக்கத்துக்குள் ஒரு குட்டி புரட்சி ஏற்படக் காரணமாகும் என்று முதலில் நான் நினைக்கவில்லை.
எங்களுடைய அமைப்பைப் பொறுத்தவரை, யாழ்ப்பாண இந்து மரபில் பேணக்கூடிய ஒழுக்கக் கோட்பாடுகள் எல்லாமே கண்டிப்பாகவும் கறாராகவும் கடைப் பிடிக்கப்பட்டன. திருமணத்துக்கு முன் ஓர் ஆணும் பெண்ணும் தனித்தனியே பிரிந்துதான் வாழ வேண்டும் என்ற கோட்பாட்டைப் போராளிகளும் பேணினார்கள்.
மக்களிடையே பரந்த ஆதரவைப் பெற வேண்டுமானால், இந்தச் சமூகப் பண்பாட்டு அம்சத்துக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதில் பிரபாகரன் கவனமாக இருந்தார்.
இந்த ஒழுக்கக் கோட்பாட்டில் எனக்கும் உடன்பாடு தான். ஆனால், இந்த ஒழுக்க விதிகள் நெகிழ்ச்சித்தன்மை இல்லாமல் இறுக்கமாக இருப்பதில் உடன்பாடில்லை. பிடிவாதத்தால் பேணப்படும் கட்டுப்பாடுகளைக் கட்டாயத்தால் கடைப்பிடித்தால், இயற்கை தன் போக்கில் ஆண் – பெண் உறவைத் தோற்றுவிக்கும். எங்கள் தலைவரின் விஷயத்திலும் இதுதான் நடந்தது.
வந்த நான்கு பெண்களில் மதி என்கிற மதிவதனியிடம் ஆழ்ந்த காதல்வயப் பட்டார் பிரபாகரன்.
மதியையும் பிரபாகரனையும் திருமண வாழ்க்கையில் இணைத்துவைக்கும் பொறுப்பு எனக்கும் அடேலுக்கும் இருந்தது.
அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களிடம் தமிழ்ச் சமூகத்தில் காதலுக்கு உள்ள முக்கியத்துவத்தை எடுத்துப் பேசினேன். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு ஒப்புக்கொண்டார்கள்.
1984-ல் திருப்போரூர் கோயிலில், பிரபாகரனின் திருமணத்தை தமிழ் முறைப்படி நடத்திவைத்தோம். ஒரு காதல் திருமணமாக பிரபாகரனின் திருமணம் நடந்தது, புலிகளிடையே நல்ல பல மாற்றங்களைத் தோற்றுவித்தது. இன்றைக்குப் போராளிகளுக்கிடையே காதல் திருமணங்கள் சாதாரணமாக நிகழ்வதற்கு மதி – பிரபாகரன் காதல் திருமணம்கூட ஒரு காரணமாக இருக்கலாம்’’ என்று தன் நெருங்கிய நண்பனின் காதல் கதையை விவரித்துச் சிரிக்கிறார்.
.”இலங்கைப் பிரச்னையில் இந்தியா விலகியிருப்பதால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் சில சுயநலங்களோடு இந்த பிரச்னையில் தலையிடக்கூடும் என்று புலிகள் நினைக்கிறார்களாமே?”
”ஆம்! எங்களைப் பொறுத்த வரையில், இதற்கான ஒரு புறச் சூழல் ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். தற்போதைய இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர். சில மாதங்களுக்கு முன் அவர் இந்தியா வந்து, இந்தப் பிரச்னையில் இந்தியா தலையிட்டுத் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரினார். ‘நீங்கள் சமாதான வழியில் ஓர் அரசியல் தீர்வை முன்வைத்து இந்தப் பிரச்னையைத் தீருங்கள். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்’ என்று கைவிரித்துவிட்டது இந்தியா.
தற்போது பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் ஆயுதங்களை வாங்கி சிங்கள ராணுவத்தைப் பலப்படுத்தி, புலிகளுக்கு எதிராக ஒரு யுத்தத்தைத் துவங்கத் திட்டமிட்டிருக்கிறது இலங்கை அரசு. அதற்காகத்தான் அதிபர் ராஜபக்ஷே போன வாரம் பாகிஸ்தான் சென்றார். அங்கே ஒரு ரகசிய ராணுவ ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆயுதங்களைப் பெற்று, ஸ்ரீலங்கா ராணுவத்தை பலப்படுத்தி புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். இதே போன்று அவர் அடுத்த மாதம் சீனாவுக்கும் செல்லவிருக்கிறார்.
பாகிஸ்தான், சீனா போன்றவை இந்தப் பிரச்சினையில் தலையிட்டால், இந்தியாவின் செல்வாக்கு நிரம்பிய இந்த பிராந்தியத்தின் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பங்கத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகும். அது இந்தியாவுக்கும் ஆபத்தாக அமையும்.”
”இன்னொரு பக்கம், இந்தியாவை மட்டுமே அழைத்துப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று இலங்கையில் ஜே.வி.பி. அமைப்பு கூறிவருகிறதே?”
”அது வேறு கணக்கு! ஜே.வி.பி. ஒரு தீவிரவாத கம்யூனிஸ்ட் அமைப்பு. சிங்கள பேரினவாதத்தை லட்சிய மாகக்கொண்ட ஒரு தீவிரவாத இயக்கம். அவர்கள் எண்பத்து மூன்றுக் குப் பிறகு, ஈழப் பிரச்னையில் இந்தியா தலையிடுவதைக் கண்டித்துப் பெரும் புரட்சிகளை நடத்தியவர்கள். இந்தியத் துருப்புகள் ஈழ மண்ணில் வந்து இறங்கியபோது அதை எதிர்த்து இலங்கையில் பெரும் கிளர்ச்சிகளை நடத்தியவர்கள். இவர்கள் தற்போது இலங்கைப் பிரச்னையில் மீண்டும் இந்தியா தலையிட வேண்டும் என்று அழைக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்தியா மீதான நன்மதிப்பல்ல. இந்தப் பிரச்னையில் இந்தியா தலையிட்டு, ராணுவ ரீதியாக புலிகள் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பதே அவர்களின் உள்ளார்ந்த விருப்பம்.
கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்துவரும் நீண்ட போராட்டத்தில் ”கிழக்கு இலங்கையிலுள்ள ஜிகாத் குழுக்கள் பற்றி தாங்கள் சமீபத்தில் கவலை தெரிவித்து, சில கருத்துகளை வெளியிட்டிருந்தீர்களே..?”
”ஆம். கிழக்கு மாகாணங்களில் தற்போது ஜிகாத் என்ற பெயரில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குப் பாகிஸ்தான் நிதி உதவியும் ஆயுதப் பயிற்சியும் வழங்கியுள்ளது. இங்கிருந்து பல இளைஞர்கள் பாகிஸ்தான் சென்று ராணுவப் பயிற்சி பெற்றுத் திரும்பியிருக்கிறார்கள். வட கிழக்கு இலங்கையில் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் காலங் காலமாக சகோதரர்களாகப் பழகி வருகிறார்கள்.
இந்த நல்லுறவைக் கெடுத்து, எமக்குள் பிளவை ஏற்படுத்தும் நோக்கிலேயே இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரிகளும், பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரும் இணைந்து சில இஸ்லாமிய அமைப்புகளைப் பயன்படுத்தி, இந்தப் புதிய சதி வேலையைச் செய்திருக் கிறார்கள். இது குறித்த அனைத்து விவரங்களையும் ஸ்ரீலங்கா அரசாங் கத்துக்கும், நோர்வே அரசாங்கத்துக்கும், சர்வதேச உலகத்துக்கும் நாங்கள் தெரிவித்திருக்கிறோம்.
இலங்கை அரசு இப்போது அவசர அவசரமாக, இஸ்லாமிய படைப் பிரிவு ஒன்றினைக் கிழக்கு இலங்கையில் அமைத்து, அதை வைத்து முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதுவும் மிகவும் ஆபத்தான விஷயம். இஸ்லாமிய இளைஞர்களை அணி திரட்டி, அவர்களின் கையில் ஆயுதங்களைக் கொடுத்து, அவர்களை விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகத் திசை திருப்பும் நோக்கத்துடன்தான் சிங்கள அரசு இந்தக் காரியத்தைச் செய்கிறது.”
”விடுதலைப் புலிகளின் மீதான ‘பயங்கரவாதிகள்’ என்ற குற்றச்சாட்டுக்குத் தங்கள் பதில்தான் என்ன?”
”எங்களது இயக்கம் நீண்ட வரலாறு கொண்ட ஒரு விடுதலை இயக்கம். பதினெட்டாயிரம் போராளிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து, ஆக்கிரமிப்பில் இருந்த எங்கள் தமிழ் மண்ணை மீட்டெடுத்து, இன்று அந்த நிலப்பரப்பில் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வருகின்றோம்.
ஆனால், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். எமது போராட்டத்தின் வரலாறு, அதன் உள் நிகழ்வுகள், புலிகள் செய்த மகத்தான தியாகங்கள் ஆகியவற்றைத் தமிழக மக்கள் தெரிந்துகொள்ளும் நாள் வரும். அப்போது எம்மைப் பற்றிய உண்மைகளை அவர்கள் அறிந்துகொள்வார்கள். எமக்கும் தமிழக மக்களுக்குமான தொப்புள் கொடி உறவை அறுக்க நினைப்பவர்கள், அப்போது காணாமல்போவார்கள்.”
”கருணா ஏன் இந்த இயக்கத்திலிருந்து வெளியேறி, உங்களுக்கு எதிராக மாறினார்?”
”கருணா எங்கள் அமைப்பில் ஒரு தளபதியாக இருந்தவர். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பற்றி பல புகார்கள் வந்தன. குறிப்பாக, இயக்க நிதியில் பெரும் மோசடி செய்து, தனிப்பட்ட வங்கிகளில் காசுகளைப் போட்டு, சில ஊழல்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இயக்கத் தலைமைக்குத் தெரியாமல், வயது குறைவான பள்ளிச் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்து, அவர்களைத் தனக்குக் கீழான ஒரு சிறுவர் படையணியாக உருவாக்கினார்.
இவை போக, பெண் போராளிகளைப் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார். இஸ்லாமிய மக்களுக்கு எதிராகச் சில படுகொலைகளையும் நிகழ்த்தினார் என்பது போன்ற பல உண்மைகள் வெளிவந்ததும், தலைவர் பிரபாகரன் இவரை விசாரணைக்காக வன்னிக்கு அழைத்தார். விசாரணைக்குப் போனால் தனது குற்றங்கள் அம்பலத்துக்கு வரும், இயக்க ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தில், கருணா திடீரென்று இயக்கத்திலிருந்து விலகி, எங்களுக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டார்.
ஆனால், நாங்கள் உடனடியாக எங்கள் படையணிகளை அனுப்பி, அவரது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை மீட்டெடுத்தோம்.
அதைத் தொடர்ந்து, அவர் கொழும்புக்கு ஓடிப்போய் ஸ்ரீலங்கா ராணுவத்துடன் இணைந்து, தற்போது எமக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். இவருக்குக் கீழ் ஒரு சிறு குழு செயல்படுகிறது. இவர்கள் இப்போது எமது ஆதரவாளர்களைக் கொல்வது, எம்மை ஆதரித்து எழுதும் பத்திரிகையாளர்களைக் கொல்வது, கல்விமான்களைக் கொல்வது எனப் பல படுகொலைகளைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆகவேதான், எங்கள் பேச்சுவார்த்தைகளின்போதுகூட, கருணா குழு என்ற துணைப் படைக் குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், அவர்களால் நிகழ்த்தப்படும் வன்செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தோம்.’’
”நீங்கள் வெளிநாடுகளில் ‘இறுதி யுத்தம்’ என்ற பெயரில், அங்குள்ள தமிழர்களை மிரட்டிக் கட்டாய நிதி வசூலில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே..?”
”இல்லவே இல்லை! ஆனால், ஈரத்துடன் இங்கே ஒன்றைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்… உலக நாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள்தான், ஈழத்திலுள்ள தமிழர் களின் ஜீவாதாரத்துக்குக் காலங் காலமாக உதவி வருகிறார்கள்.
பொருளாதாரரீதியாகத் தமிழீழம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேலையின்மை, வறுமை, போர் அழிவு, இயற்கை இடர்ப்பாடுகள்… இப்படிப் பல துயரங்களை எமது சமூகம் அங்கு சந்தித்து வருகிறது. எமது மக்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்க உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. எங்கள் மக்கள் தாமாக மனமுவந்து செய்யும் கொடை யினால்தான் எமது இயக்கமும், இயக்க வேலைகளும், சமூக அமைப்புகளும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. தாய் மண்ணுக்காக எம் தமிழ்ப் பிள்ளைகள் தருகிற நிதி இது!”
குறிப்பு: 2006 இல் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வழங்கிய பேட்டி!
TPN