கூட்டமைப்புடன் தனித்து பேச்ச முடியாது: நிமால் சிறிபால டி சில்வா

838

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளில் தென்னாபிரிக்காவின் ஒத்துழைப்பை ஆரோக்கியமாகவே நாங்கள் பார்க்கின்றோம். ஆளும் கட்சி தென்னாபிரிக்கா சென்றிருந்தபோது கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு கொண்டுவர உதவுமாறு கோரியிருந்தோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் தனித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இதனை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். அனைத்துக் கட்சிகளும் உள்ளடங்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்தால் மட்டுமே பேச்சு நடத்தலாம் என்று நீர்ப்பான முகாமைத்துவ அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயம் தீர்வு விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக செயற்படும் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வாவிடம் தென்னாபிரிக்க அணுகுமுறைகள் குறித்து வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தீர்வு செயற்பாடு என்று வரும்போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவே காணப்படுகின்ற ஒரே தெரிவாக உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு எந்த நேரத்தில் வந்தாலும் அவர்களை இணைத்துக்கொண்டு தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை முன் கொண்டு செல்ல தயாராகவே இருக்கின்றோம்.

ஆனால் இதுவரை தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் சாதகமான பதில் எதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடவில்லை. அவர்கள் தெரிவுக்குழுவில் பங்கேற்பார்கள் என்று இன்னும் நம்புகின்றோம்.

தேசியப் பிரச்சினைக்கான தீர்வு என்று வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனித்து பேச்சுவார்த்த்தை நடத்த முடியாது. இரண்டு தரப்புக்கள் பேச்சு நடத்தி அதனை வெற்றிபெற செய்ய முடியாது. தேசிய விவகாரங்கள் தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் அமர்ந்து பேச்சு நடத்த வேண்டும்.

எனவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே தீர்வுத்திட்டம் என்பது சாத்தியமாகும். எனவே கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும். அனைத்துக் கட்சிகளும் பங்குகொள்ளும்வகையில் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வை அடைய முடியும். எனவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவே யதார்த்தகரமான இடமாக உள்ளது.

இதேவேளை இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளில் தென்னாபிரிக்காவின் ஒத்துழைப்பை ஆரோக்கியமாகவே நாங்கள் பார்க்கின்றோம். நாமும் தென்னாபிரிவக்காவுக்கு சென்று வந்தோம். ஆளும் கட்சி தென்னாபிரிக்கா சென்றிருந்தபோது கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு கொண்டுவர உதவுமாறு கோரியிருந்தோம். எனவே இந்த விடயத்தில் தென்னாபிரிக்காவின் ஒத்துழைப்பு சிறப்பானதாக அமையும் என்றார்.

இது இவ்வாறு இருக்க அண்மையில் தென்னாபிரிக்கா சென்று வந்த சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தென்னாபிரிக்க விஜயம் திருப்திகரமாக அமைந்துள்ளதாக கூறியிருந்தமை குறித்து வினவியதற்கும் அமைச்சர் பதிலளித்தார்.

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தென்னாபிரிக்கா சென்று வந்துள்ளனர். விஜயம் திருப்திகரமாக இருந்ததா என்று எமக்கு தெரியாது. அவர்கள் எதுவும் எம்மிடம் கூறவில்லை. ஆனால் எமது விஜயத்தின்போது நாம் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம்” என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

SHARE