கோச்சடையானில் என் தந்தை நடித்தது நான் அவரது மகள் என்பதால் அல்ல: சவுந்தர்யா

742

ரஜினிகாந்தின் நடிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள கோச்சடையான் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக அவதார், டின்டின் படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்சரிங் தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், படத்தின் இயக்குனர் சவுந்தர்யா மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கோச்சடையானில் என் தந்தை நடித்தது, படத்தை இயக்கும் நான் அவரது மகள் என்பதால் அல்ல. கதை மற்றும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகே நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை சிறப்பாக இயக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. என் தந்தையும் அனுமதி அளித்தார். எனது முதல் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு அவரது ஆசீர்வாதம் கிடைத்துள்ளது.

இது ஒரு கமர்ஷியல் படம் என்பதுடன் தொழில்நுட்பமும் புதிது. ஆனால், ரஜினிகாந்த் கதை போன்று இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கமர்ஷியல் படத்திற்கு நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டிருப்பது நமக்கு இதுவே முதல் முறையாகும்.

ராணா பட வேலைகளை தொடங்கியபோது என் தந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குணமடைந்து வந்த பின்னர் அவருக்கு உடல் அளவிலான அதிக அழுத்தங்களை கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில், ராணா வரலாற்றுப் படம். கோச்சடையான் அதற்கு முந்தைய காலகட்டத்தின் படம். கோச்சடையான் ராணாவின் தந்தை. அதனால் கோச்சடையான் முதலில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், என் தந்தைக்கு அழுத்தத்தை குறைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்தோம். நேரடியாக காட்சிகளில் நடிப்பதை ஒப்பிடுகையில் இது எளிதானது.

இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.

SHARE