கோல்கத்த கலக்கல் வெற்றி: உத்தப்பா அபாரம்

614

Mumbai, Kolkata, IPL, Cricket, Uthappa

கட்டாக்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் உத்தப்பா 80 ரன்கள் விளாச, கோல்கத்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி மீண்டும் ஏமாற்றம் அளித்தது.

ஒடிசாவின் கட்டாக்கில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை, கோல்கத்த  அணிகள் மோதின. கோல்கட்டா அணியில் காலிசுக்கு பதில் சாகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா  கேப்டன் காம்பிர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

துவக்கம் மோசம்: மும்பை அணிக்கு கவுதம்(8), லெண்டில் சிம்மன்ஸ்(12) ஏமாற்றினர். பின் பொறுப்பாக ஆடிய அம்பதி ராயுடு 33 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கோரி ஆண்டர்சன், பியுஸ் சாவ்லா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். கேப்டன் ரோகித் சர்மா தன்பங்கிற்கு ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 17 ரன்கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து மார்னே மார்கல் ஓவரில் ரோகித் வரிசையாக இரண்டு சிக்சர் அடித்தார். ஆண்டர்சன் 18 ரன்களுக்கு வெளியேற, ரன் வேகம் குறைந்தது. அரைசதம் கடந்த ரோகித்(51), சுனில் நரைன் ‘சுழலில்’ போல்டானார். ‘அதிரடி’ போலார்டு இம்முறை மந்தமாக ஆடி ஏமாற்றினார். மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. போலார்டு(10), ஆதித்ய தாரே(2) அவுட்டாகாமல் இருந்தனர்.

நல்ல துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு உத்தப்பா, காம்பிர் சேர்ந்து வலுவான அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், ஹர்பஜன் ‘சுழலில்’ காம்பிர்(14) சிக்கினார். அடுத்து வந்த மனிஷ் பாண்டேவும்(14), ஹர்பஜன் வலையில் வீழ்ந்தார். தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த உத்தப்பா அரைசதம் கடந்தார். சிம்மன்ஸ் வீசிய போட்டியின் 16வது ஓவரில் வரிசையாக இரண்டு சிக்சர் அடித்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் உத்தப்பா(80 ரன், 52 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) போல்டானார். சாகிப் அல் ஹசன்(9) நிலைக்கவில்லை.

யூசுப் பதான்  ‘100’: தனது 100வது ஐ.பி.எல்., போட்டியில் விளையாடிய யூசுப் பதான், மலிங்கா பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தனர். கோல்கத்த அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. யூசுப்(20) அவுட்டாகாமல் இருந்தார்.

ஆட்டநாயகன் விருதை உத்தப்பா வென்றார்.

சிக்கலில் மும்பை

மும்பை அணியின்  ‘பிளே–ஆப்’ சுற்று அனேகமாக முடிவுக்கு வந்தது. இதுவரை விளையாடிய 10 போட்டியில், மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்தது.  ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேற, மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் சிறந்த வெற்றியை பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை மீதமுள்ள 4 போட்டியிலும் வெற்றி பெற்றால் கூட, மற்ற அணிகள் பங்கேற்கும் போட்டிகளின் முடிவைப் பொறுத்து தான் மும்பை அணியின் வாய்ப்பு முடிவு செய்யப்படும்

SHARE